பல நூற்றாண்டு காலமாக நயினாதீவு என்று அழைக்கப்பட்டு வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்ப்பிரதேசமான நயினாதீவின் பெயர் அண்மையில் மத்திய அரசின் உள்ளுராட்சி மற்றும் மாகாண அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இப்பெயருக்குப் பதிலாக தமிழில் “நாகதீபம்” என்றும் சிங்களத்தில் நாகதீப என்றும் தான்தோன்றித்தனமாக பெயர்மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் இத்தகைய பெயர்கள் வரும் வரை அரசாங்க வர்த்தமானிகள், மற்றும் அத்தகைய அரசாங்க ஆவணங்கள் உட்பட அனைத்து அரசாங்க ஆவணங்களிலும் மூன்று மொழிகளிலும் நயினாதீவு என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வந்தது. குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்து நயினாதீவு என்ற பெயர் மட்டுமே இத் தீவின் பெயராக இருந்து வருகிறது.
மறுபுறம் கி.மு 66 – 111 வரை ஆட்சி செய்த வசபா மன்னன் காலத்து தங்கத்தகட்டு எழுத்துக்களின் படி முழு யாழ் குடாநாடுமே சிங்களவர்களால் நாகதிவ என அறியப்பட்டிருந்தது. இதே கால கட்டத்தில் தமிழர்கள் யாழ் குடாநாட்டை “நாகநாடு” என அழைத்து வந்தனர். கி.மு 3 ம் நூற்றாண்டின் தமிழ் பௌத்த இலக்கியமான மணிமேகலையில் இத்தீவின் பெயர் மணிபல்லவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நயினார் அல்லது நைனார் என்பது பெரியவகைப் பாம்பான நாகர்களின் தெய்வமாகும். இன்று இந்துக் கோவில்கள் என்று கருதப்படுகின்ற மேலும் பல கோவில்கள் இருந்தன. இக் கோவில்கள் நாக பக்தர்களான தமிழர்களிடமிருந்து வலோற்காரமாக பறிக்கப்பட்டன.
நயினார் கோவில் என்பது தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு புராதன கோவில் நகரமாகும். அந்த நகரத்தின் அன்றைய பெயரே இன்றும் நிலவுகிறது. ஆனால் பாம்புத் தெய்வம் மாற்றப்பட்டு நாகநாத கோவில் சுவாமி என அழைக்கப்படுகின்றது. மேலும் பிராமண பூசகர்களால் பூசைகள் நடாத்தப்படுகின்றது. நாகர் கோவில் , நாகபட்டினம் போன்ற இடங்களிலும் இத்தகைய கோவில்கள் காணப்படுகின்றன. இக் கோவில்கள் பிராமணர்களுக்கு முந்திய கால உள்ளுர் நாகர்களினால் பூசிக்கப்பட்டு வந்தவையாகும்.
1944 ம் ஆண்டு நயினாதீவில் ஒரு பௌத்த கோவில் நிறுவப்பட்ட பின்னரே சிங்கள பௌத்த யாத்திரீகர்கள் வர ஆரம்பித்தனர். அவர்கள் இத்தீவை நாகதிவயின என அழைக்க ஆரம்பித்தனர். எனினும் எமது நினைவுக்கு எட்டாத காலம் முதல் இன்று வரை உத்தியோகபூர்வமாக நயினாதீவென்றே அழைக்கப்பட்டு வருகின்றதெனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நாகதீப வின் பெயரை னைநாதீவு என மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் விதமாக, அந்த பெயர் அவ்வாறே நீடிப்பதில் சிக்கல் இல்லை என்று அவர் மேலும் கருத்துக் வெளியிட்டிருந்தார்.