அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என யூனிசெப் அறிவித்துள்ளது. உலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20ம் திகதி நினைவுகூரப்பட்டு வருகின்றது.
அகதிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானத்தின்படி உலக அகதிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
பல்வேறு வாழத்தகாத நிலையில் உயிர்பிழைக்க தன் பிறந்த நாட்டை விட்டு, அடைக்கலம் தரும் பிற நாடுகளை நம்பி இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
போர்களால், அரசியல் சதிகளால், சமூகச் சூழல்களால் அகதிகளாக மாறி கஷ்டப்படும் மக்களை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகள் என்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.
இந்நிலையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் என்றாலும், அவர்கள் அகதிகள் அல்ல, நம் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்பது அரசியல் தலைவர்கள் பலரது கருத்தாகும்.
கரூர் அருகே உள்ள ராயனூர் அகதிகள் முகாமில் இலங்கையை சேர்ந்த குடும்பங்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட வீடுகளில், சுமார் 4,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 1990ம் ஆண்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், கரூர் ராயனூர், இரும்பூதிப்பட்டி ஆகிய இரு பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
கரூர் அடுத்த ராயனூர் பகுதியில், வசிக்கும் அகதி மக்களுக்கு கடந்த 1990ம் ஆண்டு வீடுகள் கட்டிக்கொடுத்த இந்திய அரசும், அதன் கீழ் உள்ள தமிழக அரசும், அதன் பின்னர் அவர்களை மறந்துவிட்டனர்.
கடந்த தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டி அவைகளை இன்று வரை நடைமுறைப்படுத்தாமல் கிடக்கின்றது.
கடந்த 2011ம் ஆண்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ 4.50 லட்சம் நிதியை கொண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டி அப்படியே விட்டுவிட்டனர்.
அதன் பைப்புகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. குடிசை வீடுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்திலேயே மக்கள் வசித்து வருகின்றனர்.
ஒரு சில வீடுகளுக்கு மட்டும் அவர்களே, மழை பெய்தால் ஒழுகாதவாறு, தார்பாய்களை அமைத்து கொண்டுள்ளார்கள். சுகாதாரமான சூழழும் இல்லை. ஆங்காங்கே தேங்கும் சாக்கடை கழிவுகளினால் தொற்று நோய் பரவும் அபாயமும் இருக்கிறது.
குடிநீர் வசதி இல்லை. இது பற்றி மேல் முறையீடு செய்தும் அப்பகுதி மக்களுக்கு எதுவுமே செய்து தரப்படவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 4.5 லட்சம் இலங்கை மக்கள் அகதிகளாக உள்ளனர்.
உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் சேவை அமைப்பான யூனிசெப் கூறியுள்ளது பெருமைக்குறியது அன்று.
இந்நிலையில், உலக அகதிகள் தினம் 20 ம் தேதி நினைவு கூறப்படும் நிலையிலாவது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா அரசு ? என்பதே அவதிப்படும் மக்களின் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
யார் கையில் இருக்கிறது நினைத்ததை அளிக்கும் சக்தி? குடியுரிமை உள்ள மக்களுக்கே இங்கு போராட்டம் செய்தால் தான் தேவைகள் பூர்த்தி ஆகிறது.
Add Comments