உண்மைகளை உறைக்க சொல்ல வேண்டும்


இறுதி யுத்தத்தின்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் பேரழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று வடக்கு மாகாண முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார். 

வடக்கு முதலமைச்சர் கூறிய உண்மையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கைத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். 
வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தம் நடந்த போது, சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேறு மாறு இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்தது. அத்தகையதொரு உத்தரவை அரசு பிறப்பிக்கும் போது ஐ.நா சபை நிச்சயம் அது விடயத்தில் தலையிட்டு யுத்தகளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தாங்கள் அங்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்க வேண்டும்.  

இல்லையேல் யுத்த சூழ்நிலைக்குள் அகப்பட்ட பொதுமக்களை காப்பாற்றுவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் செய்திருக்க வேண்டும். 
இதைச் செய்யாமல், தமிழ் மக்களை கையறு நிலையில் விட்டு விட்டு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து வெளியேறியமை தமிழ் மக்களுக்கு செய்த மிகப் பெரும் அநியாயமாகும்.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னிப் பெரு நிலப்பரப்பை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் எவ்வளவோ பிரயத்தனம் செய்தனர்.
எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சி மன்றாடினர். தொண்டு நிறுவனங்களின் வாகனங்களுக்கு முன்னாக வீதியில் கிடந்து எங்களை விட்டுச் செல்லாதீர்கள் என்று கை எடுத்துக் கும்பிட்டனர். எனினும் மனிதநேய அமைப்புகள் மனிதநேயமில்லாமல் நடந்து கொண்டன.

உண்மையில், சர்வதேச மனித நேய அமைப்புகள் அன்று தீர்க்கமான முடிவுகளை எடுத்திருந்தால் தமது வெளியேற்றத்தை தடுக்க முடியாவிட்டாலும் தமிழ் மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும். 
இதைச் செய்யாத சர்வதேச தொண்டு நிறுவனங் கள் அடிப்படையில் தமது கொள்கைளை, இலக்குகளை கைவிட்டன என்றே கூறவேண்டும். 

இவை யாவற்றுக்கும் மேலாக இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் ஐ.நா சபை நடந்து கொண்ட முறைமைகள் மிகவும் பாரதூரமானவை. வன்னி யுத்தத்தின்போது தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா சபை தவறி விட்டது என்ற உண்மையை ஐ.நா செயலர் பான் கீ மூனும் ஏற்றுக் கொண்டிருந்தார். எனினும் அரசியல் தலைவர்கள் சிலர், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் ஐ.நா சபையும் செய்த பிழைகளை எடுத்துக் கூறாமல் அவற்றை மூடி மறைக்கின்றனர். 

பிழைகள் குற்றங்கள் எந்தத் தரப்பில் நடந்தா லும் அதை வெளிப்படையாக தெரிவிப்பதே நல்லது. இந்த உண்மையை வடக்கின் முதலமைச்சர் மிக துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ளார். 
உண்மைகள் ஒருபோதும் மறைக்கப்படக் கூடி யவை அன்று. அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைகளில் இருந்து பேருண் மைகள் வெளிப்படும்.
ஆக, உண்மைகளைச் சொல்வதற்கு எவரும் தயங்கக் கூடாது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila