வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனமும் இழுபறியும் - TNA எதிர்ப்பு

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனமும் இழுபறியும் - TNA எதிர்ப்பு:-

 வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த புஸ்பகுமார நியமிக்கப்பட்டு, அவர் நேற்று (24.11.2015 அன்று) வவுனியாவில் கடமையேற்றுக்கொண்டுள்ளார். இந்த நியமனத்துக்கு தமது ஆட்சேபனையை தெரிவித்தும், குறித்த விவகாரத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலும், அறியப்படுத்தும் நோக்கில், தமிழ் தேசியக்கூட்டமைப்பை வவுனியா மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாணசபை அமைச்சர் மற்றும் உறுப்பினர்களும் ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இன்று (25.11.2015 அன்று) காலை 9.00 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பில், கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ந.சிவசக்தி ஆனந்தன், வைத்தியகலாநிதி சி.சிவமோகன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, எம்.பி.நடராசா ஆகியோரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் வடக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியதுறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழீழ விடுதலைக்கழகம் (புளொட்) சார்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முரண்பாட்டுக்கும் சர்ச்சைக்குமுரிய வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பில் தாம் பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் ஆகியோரை சந்தித்து, தமது ஆட்சேபனையையும் நியாயங்களையும் எடுத்துக்கூறிய பின்னரும் கூட, மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது,

ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், வாக்களித்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே தம்மால் பார்க்க முடிகின்றது என்றும், இந்த ஒரு சிறிய விடையத்திலேயே தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகையில் ஏனைய விடையங்களில் சாதகமான முடிவுகள் வரும் என்று தொடர்ந்தும் பொறுமையுடன் தாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியதுடன்,

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களையும், தமிழ் மக்களையும் இந்த அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தைப்போலவே ஏமாற்றி வருவதாகவே தாங்கள் கருதுவதாகவும், மிகமிக சிறிய கோரிக்கைகளே நிராகரிக்கப்படுகையில், நல்லிணக்க செயற்பாட்டு சமிக்ஞையின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் பதவியாலும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் பதவியாலும் தமிழ் மக்களுக்கு எத்தகைய பயன் விளையப்போகின்றது? என்ற சந்தேகம் வலுத்துள்ளதாகவும்,

ஆகவே புதிய அரசாங்கத்துக்கு அளித்துவரும் நல்லெண்ண ஆதரவை கூட்டமைப்பின் தலைமைகள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து, ஒப்பமிட்டு கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.

அந்த அறிக்கையின் முழுவிவரமும் வருமாறு:
 
  
 ஜனவரி மாதம் எட்டாம் திகதி, இந்த நாட்டில் புதியதொரு வரலாறு எழுதப்பட்ட நாளாக தற்போது அனைவரும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே ஜனவரி எட்டாம் திகதி நிகழ்ந்த மாற்றத்தில் தமிழ் பேசும் மக்களே பிரதான பங்காளிகள்.

இந்த மாற்றத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை பகிரங்கமாக வெளியிட்டிருந்தது. இவ்வாறான பகிரங்க அறிவிப்பை விடுக்கும் தீர்மானம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே பாரிய மாறுபட்ட கருத்துகள் இருந்தன. ஆகையால் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எமது வகிபாகம் எவ்வாறிருக்கப் போகின்றது? என்பதை தீர்மானிப்பதற்காக பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்தோம்.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவித்து இடம்பெயர்ந்த மக்களை துரிதகதியில் மீளக்குடியேற்றல் உள்ளிட்ட எமது மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு, ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பாராளுமன்றக்குழுக்கூட்டத்தில் எம்மால் கடுமையாக வலியுறுத்தப்பட்டது.

‘நிபந்தனை அற்ற ஆதரவளிப்பதன் ஊடாக எமது விடயங்கள் அனைத்தும் காலக்கிரமத்தில் நிறைவேறும். அவற்றை பக்குவாக முன்னெடுத்து எமது நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டுவதற்கான காலம் கனித்து விட்டதாக’ கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் ஐயா நம்பிக்யையும் அளித்திருந்தார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நிபந்தனையற்ற ஆதரவு என்பது, ஆட்சி மாற்றத்தின் பின்னராவது தமிழ் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளில் ஒரு சிலவற்றையாவது தீர்ப்பதற்கு வழியேற்படுத்தும் என்று நம்பியிருந்தபோதிலும் நல்லாட்சி மலர்ந்து பத்து மாதங்கள் கடந்த விட்ட நிலையிலும் அப்பிரச்சினைகளை நோக்கிய கோரிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான பதில்கள் கூட கிடைக்கவில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலை, நிலங்களை விடுவித்து மீளக்குடியேற்றல், அரசாங்க அதிபரின் இடமாற்றம் உள்ளிட்ட விடையங்களில் புதிய அரசாங்கம் நடந்துகொள்ளும் விதம் எமக்கு மிகுந்த வேதனையையும், ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

கடந்த பத்து மாதங்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை மாற்றி தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். அப்போதெல்லாம் எங்களுக்கு விரைவில் அதனை நிறைவேற்றி தருவதாக உத்தரவாதமளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களிடமும் முறையிட்டிருந்தோம்.

அந்த கருமங்கள் நிறைவேறாதபடியால், கடந்த 21.11.2015 அன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் பாராளுமன்ற வளாகத்துக்குள் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

மேற்படி விடையங்கள் குறித்தும் குறிப்பாக வவுனியர் மாவட்ட அரசாங்க அதிபர் மாற்றம் தொடர்பாக விவாதித்தபோது, பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சரை அழைத்து குறித்த விவகாரம் தொடர்பில் வினவினார்.

இந்நிலையில் வவுனியாவின் அரச அதிபராக மறுபடியும், சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தநியமனத்துக்கு எமது ஆட்சேபனையை தெரிவித்ததன் பின்னர் பிரதமரின் முன்னிலையில் அமைச்சர் எங்களிடம் காலஅவகாசம் கேட்டுக்கொண்டார். அதற்கு நாங்கள் உடன்படாமையால் 23ஆம் திகதி குறித்த அரசாங்க அதிபரை மீள அழைத்து தமிழர் ஒருவரை நியமிப்பதாக உறுதியளித்தார்.

ஆனால் 24.11.2015 அன்று குறித்த சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தவர் வவுனியாவில் கடமையேற்றுக்கொண்டுள்ளார். இந்த நியமனமானது நிபந்தனையற்ற ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், வாக்களித்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் நடவடிக்கையாகவே எம்மால் பார்க்க முடிகின்றது. இந்த ஒரு சிறிய விடையத்திலேயே எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகையில் ஏனைய விடையங்களில் சாதகமான முடிவுகள் வரும் என்று தொடர்ந்தும் பொறுமையுடன் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? எங்கள் தலைவரையும். தமிழ் மக்களையும் இந்த அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தைப்போலவே ஏமாற்றி வருவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

இதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணம். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரப்போராட்டத்தை முன்னெடுத்தபோது நாம் அவர்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் தெரிவித்து  விடுதலையை வலியுறுத்தினோம். குறிப்பாக இரா.சம்பந்தன் அவர்கள் நேரடியாக ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதன்போது எமது தலைவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் அவை நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

கடந்த கால ஆட்சியாளர்களைப்போன்றே தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டிருக்கும் இரு பிரதான கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் வேண்டுகோள் அறைகுறையாக பரிசீலிக்கப்பட்டு அவர்களின் விடுதலைக்கான நிபந்தனைகளையும், புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான நிபந்தனைகளையும் விதித்து அரசியல் ரீதியாக அனுகவேண்டிய பிரச்சினைளை திசைமாற்றி சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் எமது தலைமையோ அல்லது நாமே எதிர்பார்ப்புக்களுடன் ஆணையளித்த எமது உறவுகளாக மக்களோ தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒரு நல்லிணக்க செயற்பாட்டு சமிக்ஞையின் அடிப்படையிலேயே எதிர்கட்சி தலைவர் பதவியையும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டது. மிகமிக சிறிய கோரிக்கைகளே நிராகரிக்கப்படுகையில் இப்பதவிகளால் தமிழ் மக்களுக்கு எத்தகைய பயன் விளையப்போகின்றது என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆகவே அரசாங்கத்தற்கு வெளியில் இருந்து எமது நல்லெண்ண ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதா? என்று மீளப்பரிசீலிக்க வேண்டிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

எதிர்வருகின்ற 28.11.2015 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் மேற்படி விடையங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கவுள்ளோம்.

என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila