கார்த்திகை மாதமானது எமது உணர்வுகளோடும், நினைவுகளோடும், வாழும் மிக முக்கியமான மாதம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை மாதம் 01 ஆம் திகதி மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு, யாழ். வளைவு உப்பு ஊற்று பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இயற்கையை பேணுவதில் நாங்கள் எவ்வளவு தூரம் அக்கறை பேண வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வன்னி பெரும் நிலப்பரப்பிலும், யாழ். மாவட்டத்திற்கான புகையிரத பாதைகளிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் மரங்களை நட்டார்கள்.
அவ்வாறு நடப்பட்ட மரங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் காலத்தில் உருவாக்கப்பட்ட பல தேக்கங்காடுகள் வலுக்கட்டாயமான குடியேற்றங்களுக்காக அழிக்கபட்பட்டு வருகின்றன. அந்த துன்பகரமான சூழல்களையும் இந்த நேரத்தில் நினைத்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது. இயற்கையான சூழலில் எமது தேசத்தினை நாம் எவ்வாறு கட்டி எழுப்ப வேண்டும். எமது வாழ்க்கையை நாம் எவ்வாறு பேண வேண்டும் என்பதற்காக மரநடுகை திட்டத்தினை கொண்டு வந்த வடமாகாண விவசாய அமைச்சுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுக்கின்றேன்.
1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி இந்த பாதை வழியாக இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டிருந்த போது, சாவகச்சேரி ஊடாக கொடிகாமத்திற்கு இடம்பெயர்ந்து சென்றோம். அந்த நாட்களை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கின்ற போது, இனஅழிப்பு இந்த மண்ணில் நடைபெற்றதை, இந்த மண்ணில் வடக்கு மாகாண சபையில் கொண்டு வந்த தீர்மானம் பிழை என்று சொல்லுகின்ற சிலர், நீங்கள் நடுகின்ற மரங்கள் சரியில்லை மரச்சுத்திகரிப்பு செய்யுங்கள் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நாங்கள் பட்ட வலிகளை நேரடியாக கண்டவர்கள், நேரடியாக அனுபவித்தவர்களுக்கு தான், அதன் அருமையும், வலிமையும் விளங்கும். இந்த மண்ணில் மக்கள் பட்ட துயரங்கள், சொல்ல முடியாத துயரங்கள். எமது பல காடுகள், நாங்கள் நாட்டிய பல மரங்கள் எங்களிடம் இல்லை.
என்ன காரணங்களுக்கான பல முயற்சிகளை மேற்கொண்டோமோ, அவை அழிக்கப்பட்டு எமது, கொள்கைகள், விடயங்கள் வேறு திசைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற ஒரு காலத்தில், மரம் நடுகை திட்டத்தினை ஆரம்பித்திருப்பது, எமது உணர்வுகளோடும், நினைவுகளோடும், வாழும் மிக முக்கியமான மாதம்.
கார்த்திகை மாதம் 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடுகின்ற ஒவ்வொரு மரங்களும், பயன்தரும் என்பதற்கு அப்பால், விடுதலையையும் தரும் என்ற எண்ணங்களோடு, எமது முயற்சிகள் வீண் போகாது, தொடர்ந்தும் செயற்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.