யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தியாகத்தை மறந்ததோ!


விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்பான தமிழினத்தின் நிலைமை எப்படி என்பதை இப்போது தமிழ் மக்கள் நேரடியாக அனுபவித்து வருகின்றனர். 
விடுதலைப் புலிகளின் நடவடிக்கை தொடர்பில் நிறைந்த விமர்சனங்கள் உண்டு. அதை எவரும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரை ஆகுதி யாக்கியவர்களின் தியாகத்தை எவரும் விமர்சித்து விட முடியாது. 
அதேநேரம் மாவீரர்களின் குடும்பங்கள் அவர்கள் படுகின்ற துயரங்கள் மட்டும் அந்தந்தக் குடும்பங்க ளுக்காகிப் போனதுதான் மிகப்பெரிய கொடுமை.
விடுதலைப் புலிகளால் ஞானஸ்தானம் வழங்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிக ளின் தோல்விக்குப் பின்னர் எப்படி நடந்து கொள்கிறது என்பதை நாம் நேரில் காண முடிகிறது.
விடுதலைப் புலிகளோடு சேர்ந்து அவர்களை முதன்மைப்படுத்தி, பதவி பெற்றுவிட்டு இப்போது விடுதலைப் புலிகளைக் குறை சொல்பவர்கள் முதலில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கூட்ட மைப்பில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது மிகப் பெரிய தவறல்லவா?
எது எப்படியாயினும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று மெளனமாகி இருப்பது மிகப்பெரும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. 
மகிந்தவின் மிக மோசமான ஆட்சியிலும் மாவீ ரர்களை நினைவுகூர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு இப்போது என்ன நடந்து விட்டது.  
அன்புக்குரிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களே! கல்லறையில் துயில் கொள்ளும் தியாகிகள் உங்கள் சகோதரர்கள் அன்றோ! அவர்களை நீங்கள் மறந்தது ஏன்?
நினைவேந்தல்களைச் செய்து இந்த உலகத் துக்கு தமிழ்ப்  பற்றை வெளிக்காட்டிய நீங்கள் இப்போது விலைபோன சிலரின் சூழ்ச்சியால் சுருண்டு போய் வீட்டீர்களா? உங்களை அவர்கள் அமைப்பு என்ற பெயரால் அடக்கி வைத்துள்ளனரா?
இந்த அடக்குமுறைகளை நீங்கள் இன்னமும் பார்த்துக் கொண்டிருப்பது பயத்திலா அல்லது நமக்கு ஏன் தேவையில்லாத வேலை என்ற நினைப்பிலா?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மரியாதைக்குரிய விரிவுரையாளர்களே! கல்விசாரா உத்தி யோகத்தர்களே! உங்கள் உணர்வுகள் எங்ஙனம் உறங்கிக் கொண்டன. 
இலங்கையில் தமிழின அழிப்பு நடைபெறவில்லை என்ற போது; வடபகுதியில் இருந்து முஸ்லிம் மக் களை வெளியேற்றியமை இனச் சுத்திகரிப்பு என்று கூறியபோதெல்லாம் நீங்கள் பேசாமல் இருப்பதன் பொருள்தான் யாது? 
சம்பிரதாயத்துக்கேனும் ஒரு கண்டன அறிக்கை எழுத முடியாத அளவில் உங்கள் சமூகப் பொறுப்பு-இனப்பற்று கிழிந்து போய்விட்டதா? தியாகத்தின் பெயரால்  சந்தனப்பேழைகளில் தூங்கும் உங்கள் சகோதரர்கள் நவம்பர் 27இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியால் அன்றோ விழித்தெழுவர். நெக்குருகும் இத் திருநாளுக்கும் வில்லங்கம் விலைபோன ஒரு சிலரால் வந்து விட்டதா? 
பெருமதிப்புக்குரிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமே உன் அமைதி! உன் மெளனம்! புரியவில்லை. போராட்டம் முடிந்து விட்டது. இனிப் படையினர், பொலிஸார் குவிக்கப்பட மாட்டார்கள் என்ற நினைப்பால் சுணைப்பு குறைந்து விட்டதோ என்னவோ. எனினும் நன்றி மறந்து விடாதீர்கள். 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அருமந்த மாணவர்களே! உங்கள் உணர்வுகளை விழுங்க ஒருசிலர் உங்களோடு. அதை உடைத்து எறியுங்கள்;  தமிழினத்தின் உரிமைக்காக குரல் கொடுங்கள். இது யுத்தத்தால் எல்லாம் இழந்து ஏதிலிகளாகத் தவிக்கும் இதயங்களின் ஒலிப்பு. 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila