நமது இலங்கை நாட்டில் தமிழ் மொழியும் சிங்கள மொழியும் நாட்டங்கலுக்குமான தேசிய மொழிகளாகவும் நிர்வாக மொழிகளாகவும் அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளமையும் ஒரு குடிமகன் தனது தாய் மொழியில் நாட்டின் எப்பகுதியிலும் தனது அன்றாடக் கடமைகளை அரச நிறுவனங்களுடன் ஆற்றிக் கொள்ளவுள்ள உரிமைகள் தொடர்பாகவும் கடந்த வாரங்களில் இப்பகுதியில் விளக்கியிருந்தேன்.
அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள மொழியுரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக முறையிட்டு நிவாரணம் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.
மொழியுரிமைகள் மீறப்படும் போது அவற்றைச் சுட்டிக்காட்டி உரிய மொழியுரிமையைப் பெற்றுக் கொள்ள வழியிருந்தும் அதைத் தமிழ் மக்களோ தமிழ் மக்கள் பிரதிநிதிகளோ தமிழ்த் தரப்பின் அமைப்புகளோ பயன்படுத்துவதில்லை. தமது மொழியுரிமை மறுக்கப்படும் போது அதைச் சுட்டிக்காட்டி குரல் கொடுப்பதுமில்லை.
இது நிவாரணம் பெற்றுக் கொள்ளவுள்ள வழிமுறைகள் தெரியாததாலா அல்லது அசமந்தப் போக்கா என்பது புரியவில்லை.
எது எவ்வாறிருப்பினும் மொழியுரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக முறையிட்டு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ள வழிமுறைகளையும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பதும் பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமல்ல மொழியுரிமையைப் பெற்றுக் கொள்ள நிலைநிறுத்த உதவியாயும் அமையும்.
அரசியலமைப்பின் 3 ஆம் மற்றும் 4 ஆம் அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள ஏதேனும் அடிப்படை உரிமைகள் மீறப்படுமிடத்து அதாவது மொழியுரிமை ஆட்சித்துறைசார் நடவடிக்கையால் மீறப்படுமிடத்து அரசியலமைப்பின் 126 (1) ஆம் உறுப்புரைக்கிணங்க உயர்நீதிமன்றத்திடமிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
இவ்வாறு மொழியுரிமை மீறப்படுதல் தொடர்பிலான பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கும் தீர்மானம் மேற்கொள்வதற்கும் உயர்நீதிமன்றம் பிரத்தியேகமான நியாயாதிக்கம் கொண்டிருக்கும்.
மொழியுரிமைகள் மீறப்படுவது தொடர்பில் 1991 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க அரச கருமமொழிகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் எவரேனும் பாதிக்கப்பட்ட ஒருவர் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறு முறைப்பாடு செய்து நூற்றி இருபது நாட்களுக்குள் பரிசீலனை முடிவுகள் முறைப்பாட்டாளருக்கு அரச கரும மொழிகள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட வேண்டும்.
19 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் பரிசீலனை செய்யாத போது அந்த முடிவினை முறைப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும்.
ஆணைக்குழுவின் திருப்திக்கேற் ப முறைப்பாடு நிரூபிக்கப்படாதவிடத்து அது பற்றி 23 பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் முறைப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும்.
மேற்கூறபட்ட முடிவுகள் கிடைக்கப் பெற்ற பின் முப்பது நாட்களுக்குள் 27 ஆம் பிரிவின் நிவாரணத்துக்காக 24(1) ஆம் பிரிவின் கீழ் உயர்நீதிமன்றத்துக்கு மனுச் செய்யலாம்.
மேல் நீதிமன்றத்திலிருந்து மொழியுரிமை தொடர்பான நிவாரணம் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்கச் சட்டத்தின் படி யாராவது ஒருவர் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்து ஆணைக்குழு 23 ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்திற்கு அறிக்கை ஊடாகத் தனது விதப்புரைகளை நடைமுறைப்படுத்தும் படி அறிவித்த நிலையில் அவ்வறிக்கை பெறப்பட்டு 90 நாட்களுக்குள் குறித்த விதப்புரை நடைமுறைப்படுத்தப்படாத போது முறைப்பாடு செய்தவர் வசிக்கும் மாகாணத்தில் அரசியல் யாப்பின் 154 ஆம் உறுப்புரையின் படி தாபிக்கப்பட்டுள்ள மாகாண மேல் நீதிமன்றத்துக்கு நிவாரணம் கோரி மனுச் செய்யலாம்.
அரச கரும மொழிகள் ஆணையாளரின் விதப்புரையை நடைமுறைப்படுத்த வேண்டிய காலம் பூர்த்தியாகி 90 நாட்களுக்குள் 27 ஆம் பிரிவின் படி எழுத்து மூலமாக சட்டமா அதிபருக்கு அறிவித்த பின் முறைப்பாடு செய்தவர் அல்லது அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளரால் பிரிவு 25 (1) இன் கீழ் மேல் நீதிமன்றத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொள்ள மனுச் செய்ய முடியும்.
பகிரங்க அதாவது அரச அலுவலரொருவர் தனது உத்தியோக பூர்வ கடமைகளைச் செய்யும் போது அரச கரும மொழிகள் தொடர்பான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
அரச நிறுவனமொன்றுடன் தனது மொழியில் கடிதப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் ஆவணப் பிரதிப் பொழிப்பு மற்றும் மொழி பெயர்ப்பை பெற்றுக் கொள்வதற்கும் ஒருவருக்கு உரிமையுள்ளது. அதை மீறும் உதாசீனம் செய்யும் அரச அலுவலர் நீதவான் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத குற்றப் பணமோ அல்லது மூன்று மாதங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ வழங்க வழியுள்ளது.
சிங்கள மொழியோ அல்லது தமிழ் மொழியோ நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்படும் இடப்பரப்பில் மாற்று மொழியைச் சேர்ந்தவர் அரச நிறுவனங்களுடன் தனது மொழியில் கடிதப் பரிமாற்றம் செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஏதேனும் அலுவலக முறையான இடாப்பை பதிவேட்டை, வெளியீட்டை அல்லது வேறு ஆவணத்தை சோதனை செய்வதற்கும் பொழிப்புகளை எடுப்பதற்கும் ஒருவருக்கு சட்டரீதியான உரிமையுள்ள போது அவற்றின் மொழி பெயர்ப்பை அதாவது கோருபவர் விரும்பும் மொழியில் பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த உரிமை அரசியல் அமைப்பின் 16 ஆவது திருத்தத்தின் 22 (2) உறுப்புரையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 16 ஆம் திருத்தத்தின் திருத்தப்பட்ட உறுப்புரை 22(3) இன் படி தமிழ் மொழி நிர்வாக மொழியாக பயன்படுத்தப்படும் இடப்பரப்பில் பொது மகனொருவர் சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ அரச நிறுவனங்களிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளவுள்ள உரிமைபோன்று சிங்கள மொழி நிர்வாக மொழியாயுள்ள இடப்பரப்பிலுள்ள அரச நிறுவனங்களிலிருந்து தமிழர் ஒருவர் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுள்ளது.
நிர்வாக மொழியை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகள் கூறப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீறுவதோ புறக்கணிப்பதோ உதாசீனம் செய்வதோ குற்றமாகவும் கொள்ளப்படுகின்றது. சட்டங்கள் பல இருந்த போதிலும் இவை ஏன் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதை ஆராய வேண்டும்.
நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையின் மூலமோ மொழிப் புறக்கணிப்பே என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது போன்ற நிலையில் எல்லாமே தட்டிக் கழிக்கப்படுகின்றது. நாட்டின் அடிப்படை பிரச்சினை தீர எவருமே நல்லெண்ணத்துடன் சிந்திப்பதில்லை. தமிழர் தரப்பு மொழி ரீதியாகப் பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படுவதாயில்லை.
நாட்டிலே இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட ஒருவரையொருவர் புரிந்து கொள்ள மொழியறிவு அவசியம். அதற்காக தமிழர் தமிழ் மொழியையோ சிங்களவர் சிங்கள மொழியையோ விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. இரு மொழியறிவையும் பெறவும் மாற்று மொழியை மதிக்கவும் வேண்டும்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மொழியுரிமையை நிலைநாட்ட அரசியலமைப்பின் வழிகாட்டலின் படி நீதிமன்றங்களிலும் அரச கரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்து சிலவற்றில் நிவாரணமும் பெற்றுக் கொடுத்துள்ளது.
மத்திய வங்கியால் வெளியிடப்படும் பண நோட்டுகளில் உள்ளடக்கப்படும் முக்கிய தகவல்கள் சிங்களத்தில் மட்டும் உள்ளமையை குறிப்பிட்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நீதிமன்றத்தை நாடியதன் பலனாக முக்கிய தகவல்கள் சிங்களத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெற வழி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல மொழி தொடர்பான முறைப்பாடுகளைக் குறித்த நிலையம் மேற்கொண்டு நிவாரணம் பெற எத்தனித்துள்ளது. அதற்குத் தமிழ் மக்கள் நன்றி செலுத்த வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அன்றைய தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மொழியுரிமை மீறப்பட்டால் வழக்குத் தொடுப்பதாக எச்சரித்திருந்தமையையும் நினைவிற் கொள்ள வேண்டும். கூறியது போல் வழக்குத் தொடுக்காவிட்டாலும் அதற்கான உரிமை உண்டென்பதை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மொழியை இந்நாட்டின் நிர்வாக மொழியாகப் பயன்படுத்த போதிய சட்ட விதிகள் இருப்பதையும் அது மீறப்படும் போது அதைச் சுட்டிக்காட்டி நிவாரணம் பெற வழியிருந்த போதிலும் அவற்றைத் தெரிந்து கொள்ளாமலிருப்பதே தெரிந்தும் அலட்சியமாக இருப்பதோ சமூக நலனுக்கும் இருப்புக்கும் பங்கமேற்படுத்துவதாகும்.