சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு உதவ மாட்டாது


உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பார் வள்ளுவர். 

நட்புக்கு விளக்கம் கூறிய வள்ளுவர் பெருமான் நட்பு என்றால் என்ன வேகத்தில் உதவி புரிய வேண்டும் எனில்,

ஒருவரின் ஆடை குலைகின்ற போது அவரது கையானது வேகமாக பற்றிப் பிடித்துக் கொள்கிறதோ அதேபோன்று நட்பும் உதவ வேண்டும்.

அப்படியானால் உதவி என்பது உதவி தேவைப்படுகின்ற போது கிடைக்க வேண்டும்.  அதிலும் உடனடியாக கிடைக்க வேண்டும்.

ஐயா, பசிக்கிறது கொஞ்சம் உணவு தாருங்கள் என்று கேட்கும் போது உதவாதவர்கள் எதிர்காலத்தில் உதவுவார்கள் என்று நினைப்பது மடமைத்தனம்.

இதேபோன்றுதான் சர்வதேச சமூகம் எங்களைக் கைவிடாது. எங்களுக்கு உதவும் என்றொரு கதை தமிழ் அரசியல் தலைமையால் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நம் சிற்றறிவுக்கு எட்டியவரை, ஈழத் தமிழ் மக்களுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உதவமாட்டாது என்பது நிறுதிட்டமான உண்மை.

சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசுடன் ஒத்து - இணங்கிச் செல்வதையே தனது இலட்சியமாகக் கொண்டுள்ளது. 

வன்னிப் போர் நடந்த போது தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திடம் கைகூப்பி எங்களைக் காப்பாற்றுங்கள் என மன்றாடினர்.

ஆனால் சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் கொலையுண்டு போனாலும் பரவாயில்லை என்றவாறு வன்னி மண்ணை விட்டு வெளியேறியது.

போருக்குப் பின்பு சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டபோது, 
வாய்திறந்து தமிழ் மக்களை விட்டு விடுங்கள் என சர்வதேச சமூகம் கூறவில்லை. அப்படிக் கூறினாலும் அதை இலங்கை அரசு கேட்டும் இராது.

தவிர, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்றுவரை போரின் கொடூரத்தை அனுபவித்துக் அணு அணுவாக வதைபட்டுக் கொண் டிருக்கிறார்கள்.

சர்வதேச சமூகம், அதன் பிரதிநிதிகள் இலங்கைக்கும் தமிழர் தாயகத்துக்கும் வந்து போகின்றனர்.

நடந்தது ஏதும் உண்டா எனில்? ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசம் இலங்கை அரசுக்கு வழங்கியதைத் தவிர வேறு எதுவும் இல்லை எனலாம். 

ஆக, சர்வதேச சமூகம் உதவுவது என்றால், போர் நடந்து கொண்டிருக்கும் போது எங்களுக்கு உதவியிருக்க வேண்டும்.

தங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைத்த பின் அவர்களைக் காணவில்லை என்ற போது சர்வதேச சமூகம் கேட்டிருக்க வேண்டும் அல்லது மூன்று இலட்சம் தமிழ் மக்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்த போது சர்வதேசம் இலங்கை அரசை அதட்டியிருக்க வேண்டும்.

இவை எதனையும் செய்யாத சர்வதேச சமூகம் இனிமேல்தான் தமிழ் மக்களுக்கு உதவுமென்றால் இதைவிட்ட ஏமாற்றுத்தனம் வேறு எதுவுமாக இராது.

ஆகையால், எந்த விடயத்திலும் தமிழ் மக்கள் மிகவும் நிதானமாக நடந்து கொள்வது மிக அவசியம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila