இராணுவ பிடியிலிருந்து காணிகளை விடுவியுங்கள் (நல்லிணக்கத்துக்கு அமெரிக்கா வலியுறுத்து)


இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் ஏமி சீரைட், விசாரணைகளின் போதான சந்தர்ப்பங்களில் இலங்கை அரசு நல்லிணக்கத்துடன் நம்பகமான நீதிப்  பொறிமுறைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் கலாநிதி ஏமி சீரைட், மனித நேய உதவி, இயற்கை அனர்த்தங்களில் உதவுதல், மற்றும் வெளிநாட்டு அமைதிகாக்கும் செயற்பாடுகளில் அதிகரித்த பங்கேற்பு என்பவற்றில் இலங்கை பாதுகாப்புப் படையினர் வகிக்கக் கூடிய எதிர்கால வகிபாகம் குறித்து ஆராய்ந்ததாக, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதுகாப்பு துறை மறுசீரமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் செயற்பாடுகளுக்கு பயிற்சியளித்தல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வர ஆகியோரை, பிரதி உதவிச் செயலாளர் சீரைட் சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன், கூட்டுப்படைகளின் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்த பிரதி உதவிச் செயலாளர் சீரைட் அவர்கள், காணிகளை திரும்ப வழங்குதல், நல்லிணக்கம் மற்றும் நம்பகமான நீதி பொறியமைப்புக்கான தேவையை வலியுறுத்தியதுடன், எதிர்கால பாதுகாப்பு தேவைகள் குறித்தும் பேசினார்.

மேலும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை சந்திப்பதில் முன்னுரிமை வழங்கிய பிரதி உதவிச் செயலாளர் சீரைட், “இராணுவக் கொள்கை மற்றும் பாதுகாப்பு உறவுகளை தெரிவிப்பதில் சிவில் சமூகங்கள் பிரதான பங்கினை வகிக்கின்றன” என்ற கருத்தினை வலியுறுத்தினார்.

இந்நிலையில், இராணுவத் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது, நம்பகத்தன்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களது கரிசனைகளையும், அவர் வெளிப்படுத்தினார். நிலக்கண்ணி வெடி அகற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலக்கண்ணி வெடி அகற்றல் குறித்து கலந்துரையாடிய அவர், “இலங்கையில் நிலக்கண்ணி வெடி பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதில் அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது” என்றார்.

1993ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நிலக்கண்ணி வெடி அகற்றலுக்காக 6 பில்லியன் ரூபாய்களை (43 மில்லியன் அமெ. டொலர்) உதவியாக அமெரிக்கா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila