பாதிக்கப்பட்ட மக்கள் கவலை. இராஜாங்க அமைச்சர் விஜயகலா நடவடிக்கை எடுப்பரா?
பெண் தலைமை தாங்கும் மற்றும் கணவனை இழந்த பெண்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிலையம் கடந்த மாதம் 13 ஆம் திகதி கிளிநொச்சியில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவினால் திறந்த வைக்கப்பட்டது.
ஆனால் அன்றைய நாளை தவிர இன்று வரை குறித்த அலுவலகம் எவ்வித செயற்பாடுகளும் இன்றி பூட்டப்பட்டே காணப்படுகிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
இவ்வருடம் ஜனவரி மாதம் கிளிநொச்சி வருகைதந்த பிரதமர் ரனில் விக்கிரசிங்க அவர்கள் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது பெண்களின் நல்களை அடிப்படையாக கொண்டு அவர்களின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தேசிய நிலையம் ஒன்றினை கிளிநொச்சியில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்
அந்த வகையில் மேற்படி அலுவலகம் கடந்த மாதம் 13 ஆம் திகதி குறித்த அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் எந்தவொரு ஆளணியும் நியமிக்கப்படவில்லை இதனால் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நாளை தவிர பூட்டியே காணப்படுகிறது.
ஆளணியை நியமிக்காது ஏற்கெனவே இருந்த கட்டிடத்தில் பெயர் பலகை வைத்து அலுவலகத்தை திறந்து விட்டு தற்போது அதனை பூட்டி வைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிலும் அதிகளவு பெண்களை தலைமைதாங்கும் குடும்பங்களை கொண்ட கிளிநொசியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இது தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பரா எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெண் தலைமைத்தாங்கும் மற்றும் கணவனை இழந்த பெண்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வைகயிலும் மேற்படி நிலையத்தினால் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் குறித்த நிலையமானது தேசிய நிலையம் என்பதனால் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பெண் தலைமைத்தாங்கும் மற்றும் கணவனை இழந்து பெண்களின் விடயங்கள் இங்கு கையாளப்படும் என்றும் பெரியளவில் அறிவிக்கப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடைபெறாதது வருத்தமளிக்கிறது என கிளிநொச்சியில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்ந்த பல பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.