தமிழக உறவுகள் அவல வாழ்வில் இருந்து விடுபடப் பிரார்த்திக்கின்றோம்! முதல்வர் விக்னேஸ்வரன்

நினைத்துப் பார்க்க முடியாத துயரினைத் தமிழகம் இன்று சந்தித்திருக்கின்றது.
வானம் பிளந்தது போலக் கொட்டித் தீர்த்த மழை ஆற்றுப்படுத்தவே முடியாத அளவுக்குத் தமிழகத்தினை வாட்டி வதைத்திருக்கின்றது.
தமிழகமே வெள்ளக்காடாகிப் பல இலட்சம் மக்கள் தமது சொந்த வீட்டில் வாழமுடியாத நிலையில் இடம்பெயர்ந்து அவலத்துக்குள்ளாகியிருக்கின்றார்கள்;.
தாழ்நிலங்களில் வாழ்ந்த ஏழை மக்களில் பலரது உயிர்கள்கூட இழக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பல்லாண்டுகளாக மக்கள் சிறுகச்சிறுகச் சேமித்த, சேகரித்த சொத்துக்கள்கூட அழிவடைந்திருக்கின்றன.
வார்த்தைகளுக்குள் விபரிக்கமுடியாத துயர் நிறைந்த இவ்வாறான வாழ்க்கையைத் தமிழகத்திலிருக்கும் எங்களுடைய தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்.
எமது மண்ணில் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்கள் செத்து வீழ்ந்த போது தானாடாவிட்டாலுந் தன் தசை ஆடும் என்பதுபோல முதலில் வீதியில் இறங்கியவர்கள் தமிழக மக்களே.
அவர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் சர்வதேச அரங்கையே உலுக்கும் அளவுக்கு வீரியம் பெற்றிருந்தன.
அவ்வாறான எங்களுடைய தமிழுறவுகள் இன்று இயற்கைச் சீற்றத்தால் ஆற்றொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அவர்களின் துயரமுந் துன்பமும் எம்மக்கள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.
எங்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து மீண்ட சம்பவங்களும் தற்போது நிகழ்ந்துள்ளன.
மீண்டும் அவ்வாறான நிலையேற்படுமோ என்ற பயம் இல்லாமல் இல்லை.
ஆனாலும் தமிழகத்துடன் ஒப்பிடுகின்ற போது அங்கு நிகழ்ந்திருக்கின்ற பேரிடருக்கு நிகரான பாதிப்பினை எங்கள் மக்கள் சந்திக்கவில்லை.
பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வடமாகாண மக்கள் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை இன்றைய எமது அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கும்.
பாதிக்கப்பட்ட மக்கள் தமது அவல நிலையிலிருந்து விரைவில் விடுபட நாம் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
இலங்கை
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila