இராமபிரானின் பட்டாபிஷேகத்தை தடுத்து நிறுத்தியமை மந்தரை எனும் கூனியையே சாரும்.
தசரதமன்னன் தன் முதுமை அறிந்து மூத்த மைந்தனாகிய இராமபிரானுக்கு பட்டாபிஷேகம் செய்வதாக அறிவித்தார்.
அந்த அறிவிப்பால் அயோத்தி மாநகர் முழுவதும் அகமகிழ்ந்தது.
ஆனாலும் மந்தரை மட்டும் அகத் துன்ப மடைந்தார். இராமருக்குப் பட்டாபிஷேகம் நடப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நினைப்பைத் தவிர அவரிடம் வேறு எதுவுமில்லை.
ஊண், உறக்கம் மறந்தவளாக, தன் தோழி கைகேயியிடம் இராம பட்டாபிஷேகத்தைத் தடுத்து நிறுத்தலாம் என்று யோசனை செய்கிறார்.
தசரத மனையில் கைகேயியின் தோழி என்பதைத் தவிர வேறு எந்த வகிபங்கையும் கொண்டிராத கூனி நினைப்பை அரங்கேற்றி யதுதான் ஆச்சரியமான விடயம்.
கூனியின் சூழ்ச்சியால், இராமர் காடேக; தசரத மன்னன் உயிர் பிரிய; அயோத்தி மாநகரின் சிம்மாசனத்தில் பாதுகை இருக்க, பரதன் தாளா வேதனையுற, ஒட்டுமொத்தத்தில் தசரத ரின் குடும்பமும் அயோத்தி மக்களும் துன்பக் கடலில் வீழ்ந்தனர்.
இவையயல்லாம் கூனியின் கெட்ட சிந்தனையால் வந்த வினை.
சரி, இராமபிரானின் பட்டாபிஷேகத்தைத் தடுத்து நிறுத்தி பதினான்கு ஆண்டுகள் இராமரைக் காட்டுக்கு அனுப்புவதாக கூனி திட்டமிடக் காரணம் என்ன என்றால், வலுவான காரணம் எதுவுமில்லை.
தன் சிறு வயதில் மண் உருண்டை செய்து அதனை மந்தரையின் கூன் முதுகில் எறிந்ததைத் தவிர வேறு எந்த நிந்தையும் இராமர் செய்தாரில்லை.
அதிலும் சிறுபிள்ளையாக, விளையாட்டுத் தனத்தில் செய்த செயல் மீது இத்துணை தூரம் கூனி ஆத்திரம் கொண்டாள் என்றால் விதி விளையாடுகிறது என்பதுதான் அதன் பொருள்.
கெளதம முனிவரின் சாபத்தால் கல்லாய் கிடந்த அகலிகைக்கு இராமபிரானின் கால் தூசி பட்டு சாப விமோசனம் கிடைக்கும் அளவில் தெய்வ அவதாரத் தன்மை பொருந்திய இராம ருக்கு, கூனி மீது மண் உருண்டை எறிந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என் பது தெரியாமல் போனது விந்தையே.
சரி, இராமரால் சில காரியங்கள் ஆக வேண்டும் என்றால் பட்டாபிஷேகத்தைத் தடுக்கும் பணியை வசிட்டரே செய்திருக்கலாமல்லவா? ஆனால் அப்படி நடக்கவில்லை.
சபிக்கப்பட்ட கூனியால் அந்தக் காரியம் நடந்தது என்பதனூடு நல்ல காரியங்களைக் கெட்டவர்களே தடுப்பர் என்ற தத்துவம் உணர்த் தப்படுகிறது.
இந்த வகையில்தான் புதிய அரசியலமைப் புச் சீர்திருத்தத்தைத் தடுக்க இப்போது மகிந்ததரப்பு தயாராகிவிட்டது.
இதேபோன்று முன்னம் ஒரு தடவை சந்திரிகா அம்மையார் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க அதனை ரணில் தரப்பு எரித்தது.
ஆக, தீவினையாளர் மாறி மாறி ஆட்சியில் இருக்கையில் அரசியலமைப்பல்ல எதுவுமே எங்களுக்கு கிடையாது என்பதைப் புரிவது தான் இங்கு முக்கியமானது.