தமிழுக்கு அமிழ்து என்று பெயர். அமிழ்து என்பதை திரும்பத்திரும்பச் சொல்லிப் பாருங்கள். அமிழ்து என்பது தமிழ் என்று ஒலிப்பதை உணர்வீர்கள். இதனால்தான் தமிழும் அமிழ்தும் ஒன்று என்றாயிற்று. எங்களின் உயிராக இருக்கக்கூடிய தமிழ் இன்று எத்துணை துயரங்களைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் தமிழர்கள் தமது உரிமைக் காக, பேரினவாதத்துடன் மட்டுமே போராட வேண்டியிருந்தது. ஆனால் இன்று நிலைமை அதுவன்று. தமிழ் வாழ்வதற்காக இன்று பலருடன் போராட வேண்டிய துர்ப்பாக்கியநிலை இருக்கிறதே அது தான் மிகப்பெரிய துன்பம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு சுயநல வாழ்வு வாழுகின்ற அர்ப்பத்தனங்கள் எந்தவித கூச்சமுமின்றி அரங்கேறியுள்ளபோது, பாவம் தமிழினம் என்று சொல் வதைத்தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியவில்லை. நடந்து முடிந்த போராட்டங்களில் பின்பான எங்கள் நிலைமை எப்படி உள்ளது என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். எங்களின் இனம் மீண்டும் தழைப்பதற்கான வழி வகைகள் ஏதேனும் தெரிகிறதா?
நாட்டின் தலைநகரில் இருந்து கொண்டு தமிழ் அரசியல் வியாபாரம் நடந்தேறுகின்ற போதிலும் எங்கள் புத்திஜீவிகள், சமூக அக்கறை கொண்டவர்கள் மெளனமாகவே இருந்து விடுகின்றனர்.
இத்தகையதொரு ஆபத்தான சூழ்நிலையில் இருந்து தமிழினம் தப்பிப் பிழைத்து தலைநிமிர வேண்டுமாயின் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தங்களின் உரிமையை ஜனநாயக ரீதியில் பெறுவதற்காக குரல் கொடுக்க வேண்டும்.
நம் அரசியல் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நாம் நம்பி அனைத்துப் பொறுப்பையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டால்; அரசியல் தலைகளுக்கு பேரம் பேசுகின்ற இந்தக் காலகட்டத்தில் எங்கள் நிலை என்னவாவது.
ஆகையால் அன்புக்குரிய தமிழ் மக்களே! எல்லாக் காலமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பது மடமைத்தனம். அதேநேரம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்று இலங்கை அரசுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கின்ற இந்த வேளையில், நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும். இந்தத்தீர் வோடு எங்கள் மக்கள் இந்த நாட்டில் நிம்மதியாக- சுதந்திரமாக வாழ்வதற்கு வழி காணப்பட வேண்டும்.
இதற்காகவே தமிழ் மக்கள் பேரவை உதயமாகியிருக்கிறது. அரசியலில் இறங்கினால்தான்-தேர்தலில் நின்றால்தான்-கட்சி அமைத்தால்தான் தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசமுடியுமா என்ன?
தமிழ் மக்களின் பொது அமைப்பாக இருந்து கொண்டும் உரிமைக்காக குரல் கொடுக்க முடியும். இந்திய தேசத்துக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த அண்ணல் காந்தி அரசியல் நடத்தினாரா என்ன?
ஆக, அரசியலில் இருந்து கொண்டு அதன் மூலமே பேரம் பேச முடியும் என்ற பிழையான கற்பிதங்களை காட்டியதன் பயனாக, தமிழ் மக்கள் பேரவை என்ற மக்கள் அமைப்பை அரசியல் கட்சியாகப் பார்க்கின்ற துரதிர்ஷ்டம் நடந்து கொண்டிருக்கிறது.
எதுவாயினும் அன்புக்குரிய புத்திஜீவிகளே! தமிழ்ப் பற்றாளர்களே! தமிழ் மக்கள் பேரவைக்கு உங்கள் ஆலோசனைகளைக் கொடுத்து ஒரு வலு வான-நடைமுறைக்குச் சாத்தியமான-நிரந்தரமான அரசியல் தீர்வை உருவாக்குங்கள். அதனை சிங்கள மக்கள் மத்தியிலும் எடுத்துச் சென்று அன்புக்குரிய சிங்கள மக்களே! இலங்கைத் தீவில் நாங்கள் சுதந்திரமாக வாழ்வது உங்களுக்கு இடைஞ் சலா? என்று கேளுங்கள். உங்களுக்குரிய உரிமைகள் எங்களுக்கு இருப்பதை நீங்கள் எதிர்ப்பது நியாயமா? என்று வினவுங்கள்.
எங்களின் நியாயமான தீர்வுத்திட்டம் இதுதான். இதை நிறைவேற்ற உங்கள் ஆதரவைத் தாருங்கள். நீங்களும் நாங்களும் சேர்ந்து இலங்கைத் திருநாட்டை வளப்படுத்துவோம் என்று கூறுங்கள்.