ஜனாதிபதியின் அறிவிப்பு; பதிலில்லாத ஒரு கேள்வி

maithri“சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதோ, தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குவதோ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது. வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் மனங்களை வென்றெடுப்பதன் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். குறிப்பிட்ட அமைச்சுக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கீழ் வருவதால், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் பங்குகொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். நல்லிணக்கம் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியின் உரை முக்கியமானதாகும். பல விடயங்களை மனம்திறந்து ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
“வடக்கு, கிழக்கில் பெளதீக அபிவிருத்திகளை மேற்கொள்வதன் மூலம் அங்குள்ள மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்பது கடந்த ஆறு மாதங்களில் எமக்குத் தெளிவாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பாராளுமன்றம், அரசியல் மேடைகள் மற்றும் ஊடகங்கள் என பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது” எனத் தெரிவித்த ஜனாதிபதி, “வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்ற பெயர்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இருந்தபோது பெளதீக அபிவிருத்திகள் மூலம் அங்குள்ள மக்கள் திருப்தியடையவில்லை. அவர்களின் உளரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மக்கள் சந்தேகம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இதுவே எம்முன்னால் காணப்படும் பாரிய சவாலாகும்” என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
“தேசிய நல்லிணக்கம்” என அரசாங்கம் சொல்லிக்கொண்டிருந்தாலும் அதற்கான முன்னெடுப்புக்கள் கூட அரசியல் நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருப்பதைப் போல, வீதிகளை அமைப்பதன் மூலமாகவும், கட்டிடங்களைக் கட்டுவதன் மூலமாகவும் மட்டும் மக்களின் மனங்களை வென்றுவிட முடியாது. கடந்த காலங்களில் இது தெளிவாகவே தெரிந்தது. மக்களை வெல்வதற்கான நேர்மையான வேலைத் திட்டம் ஒன்றை மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியவில்லை. போர் வெற்றி என்ற கோஷத்தை தமது அரசியலுக்கான முதலீடாகப் பயன்படுத்திய மகிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்களை வெல்வதற்கான நகர்வுகள் சிங்களக் கடும் போக்காளர்கள் மத்தில் தனக்குள்ள ஆதரவுத் தயளத்தை ஆட்டம்காணச் செயதுவிடும் என அஞ்சினார். போருக்குப்பின்னரான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு இரு இலக்குகளை நோக்கிய நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும். ஒன்று: உடனடிப் பிரச்சினை. இரண்டு அடிப்படைப் பிரச்சினை. அதாவது அரசியல் தீர்வு.
உடனடிப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், இராணுவக் குறைப்பு, காணாமற்போனவர்கள் விவகாரம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைச் செய்வதன் மூலமாகவே மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தன்னுடைய உரையில் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார். “சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதோ, தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குவதோ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது. வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் மனங்களை வென்றெடுப்பதன் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்பதை அடித்துக்கூறியிருக்கும் ஜனாதிபதி, “12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளவர்களை விடுவிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகின்றார்களா?” என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றார்.
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையை விமர்சிப்பவர்களை நோக்கித்தான் இந்தக் கேள்வியை ஜனாதிபதி கேட்டுள்ளார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் அவருடைய ஆதரவுக் குழுக்களும்தான் இது தொடர்பான எதிர்ப் பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றன. இனவாதத்தை விட்டால் தமது அரசியலை நடத்துவதற்கு வேறு எதுவும் இல்லை என்ற நிலை இவர்களுக்கு. இந்த சுயநல அரசியலால், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சிறைகளில் வாட, அவர்களுடைய குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடும் நிலை. இதனைவிட உறவுகளைப் பிரிந்து வாழும் துயரம் வேறு. அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பது நீதிக்கு முரணானது, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எதிரானது என்பதை நன்கு உணர்ந்துகொண்டுள்ள ஒருவராகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தன்னுடைய உரையை நிகழ்த்தியிருக்கின்றார். ஆனால், உரைகள் மட்டும் எதனையும் கொண்டுவந்து தரப்போவதில்லை. தான் சொல்லியிருக்கும் விடயங்களை செயற்படுத்துவதற்கு துணிச்சலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவது ஏன்?
200 க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், அரசாங்கத் தரப்பால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 40 க்கும் குறைவானவர்கள் மட்டுமே கடுமையான பிணை நிபந்தனைகளுடன் வடுதலை செய்யப்பட்டனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான அனைவருமே உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுக்கொண்டிருக்கின்றார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க போன்ற சிங்களத் தலைவர்கள் கூட கைதிகளின் விடுதலையைத்தான் வலியுறுத்துகின்றார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் இப்போது கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்களே என்பதைப் பாராளுமன்றத்தில் வைத்தே பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். அதற்கு எதிராகச் செயற்படுபவர்களையும் கடுமையாகச் சாடியிருக்கின்றார். வரவேற்கப்பட வேண்டிய உரைதான். ஆனால், ஒரேயொரு கேள்விக்குத் தான் ஜனாதிபதி பதிலளிக்கவில்லை: “இன்னுமுள்ள கைதிகளை விடுவிக்க ஏன் மறுக்கிறீர்கள்?”
(ஞாயிறு தினக்குரல்)
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila