அன்புக்குரிய வாசகப் பெருமக்களே! உங்கள் வலம்புரிக்கு இன்று வயது 16 நிறைவடைகின்றது.
இன்று போல் இருக்கிறது அன்றைய ஆரம்பம். 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வலம்புரி வெளிவந்த போது இதன் எதிர்காலம் எப்படியாக அமையும் என்று பலரும் நினைத்ததுண்டு.
இறைவனின் கருணையும் உங்களின் பேராதரவும் வலம்புரியின் நிலைபேற்றுக்கு வித்திட்டன. கட ந்த 16ஆண்டுகளில் வலம்புரி நடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. யுத்த சூழ்நிலைகளும் எமது மக்கள் பட்ட அவலங்களும் எங்களைக் கடுமையாகப் பாதித்தன.
தமிழ் மக்கள் விடுகின்ற கண்ணீருக்கு எப்போது முடிவு கிடைக்கும் என்ற ஏக்கமும் தவிப்பும் எங்களை நெருடிக் கொண்டே இருக்கிறது.
பத்திரிகைத்தொழில் என்பது புனிதமானது. தர்மம் நிறைந்தது. எப்போதும் தர்மத்தின் வழியில்-எவருக்கும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என் பதில் என்றும் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
அதேநேரம் அறம் தழைப்பதற்காக குரல் கொடுப் பதும் எமது பணி என்பதில் மாற்றுக் கருத்தை ஒரு போதும் நாம் கொண்டிருக்கவில்லை. குருசேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் யுத்தம் நடக்கிறது. தர்மம் வெல்வதற்காக கண்ணபரமாத்மா பாண்டவர் பக்கம் தேர்ச் சாரதியாக நிற்கிறார்.
குருசேத்திரத்தில் பார்த்தசாரதி வலம்புரிச் சங்கு எடுத்து ஒலி எழுப்பியதன் பேறாகக் கிடைத்ததுதான் கீதோபதேசம்.
தர்மம் வெல்ல வேண்டும் என்றால் இறைவன் நமக்குச் சாரதியாகவும் வருவான் என்ற உண்மையை வெளிப்படுத்துவதுதான் மகாபாரதத்தின் அடிப்படை.
அன்புக்குரிய எம் உறவுகளே! நீங்கள் வழங்கி வரும் பேராதரவால் வலம்புரி சூரிய சந்திரர் உள்ள வரை இந்த மண்ணில் நிலைத்து நிற்கும் என்பது எங்கள் திடமான நம்பிக்கை.
வலம்புரி மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக என்றும் நாம் நடப்போம் என்பதை இச் சந்தர்ப்பத்தில் உறுதிப்படுத்துகின்றோம். சில சந்தர்ப்பங்களில் வலம்புரி சிலருக்கு எதிராக எழுதுவதாக கருத்துரைக்கின்றவர்களும் உள்ளனர். அவர்களின் கருத்துத் தொடர்பில் நாம் ஒருபோதும் கவனம் செலுத்தாதவர்கள் அல்ல.
எம்மைப் பொறுத்த வரை எங்கள் மக்கள் பாவங்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு ஆற்றொணாது அழுகின்றனர். எனவே ஒரு பெரும் அவலம் நடந்த மண்ணில், மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் நேர்மையோடும் தங்கள் மக்களுக்கு விசுவாசமாகவும் செயற்பட வேண்டியது கட்டாயமானது என்பதை எவரும் மறுதலிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் வெளிப்படைத்தன்மை என்பது கட்டாய மானதே. இரகசியம் பாதுகாத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்கின்ற போது தான் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகும் எனில் இரகசியத்தன்மை எதற்கானது?
ஆக, அன்புக்குரிய தமிழ் அரசியல் தலைவர்களே! வெளிப்படைத்தன்மையோடு செயலாற்றுங்கள். தமிழ் மக்கள் உங்கள் மீது நிச்சயம் நம்பிக்கை கொள்வர். அப்போது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் இலக்கை நோக்கி நகரும் என்பது நிறுத்திட்டமான உண்மை.