தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அரசின் மாயமான்கள் துள்ளி வரலாம்


இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி நாம் அனைவரும் பேசித் கொள்கின்றோம். அதேநேரம் தமிழ் மக்கள் வேறுவிதமான கஷ்டங்களை அனுபவித்தால் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாக அவர்கள் உணர மாட்டார்கள் என்ற அடிப்படையில், இனப்பிரச்சினைக்கான தீர்வை வலுக்குறைப்புச் செய்வதில் அரசு தீவிரமாக உள்ளது. 

அதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தை நலினப்படுத்தும் வகையில் புதுப்புதுக் குழப் பங்களைக் கொண்டு வருவதிலும் அரசு தீவிரமாக உள்ளது.
இந்த இராஜதந்திரம் இன்று நேற்று அல்ல நீண்டகாலமாக இலங்கை ஆட்சியாளர்களால் பிர யோகிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. 

எந்தையும் தாயும் அவர் முந்தையரும் வாழ்ந்த நிலத்தில் இருந்து எங்களைத் துரத்துவது; 20 ஆண் டுகளுக்கு மேலாக அதை படைத்தரப்பின் கையில் வைத்திருப்பது; பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெய ரில், எல்லாம் அழிக்கப்பட்ட எங்கள் மண்ணை வெறுமையாக எங்களிடம் ஒப்படைப்பது. இதன் மூலம்  பிரச்சினை தீர்க்கப்படுவதாக காட்டுவது என்ற தொடர் நாடகத்துக்கு இங்கு குறைவே இல்லை.  

ஆழ்கடலில் மீன்பிடித்து வந்த எங்கள் கடற்தொழிலாளர்களை கடலுக்குச் செல்லாதே என்று தடுப்பது. ஐயா! கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன என்று நாம் கெஞ்ச, மேலாடை எதுவுமின்றி கோவணத்துடன் மட்டும் கடலுக்குச் சென்று தொழில் செய்யலாம். ஆழ்கடலை எட்டியும் பார்க்கக்கூடாது எனக் கண்டிப்பான உத்தரவு பிறப்பிப்பது உட்பட, 
இருந்ததை இல்லாமல் செய்வது; இல்லாமல் செய்ததை தந்தது போல காட்டுவது போன்ற  திருக் கூத்துக்கள் நம் மண்ணில் அரங்கேறியவண்ணம் உள்ளன.

ஆக, தாமே உருவாக்கிய பிரச்சினையை தமிழர்களின் பிரச்சினையாகக் காட்டி அதை தீர்த்து வைப் பது போல பாசாங்கு செய்கின்ற இராஜதந்திரத்தையே இலங்கை அரசுகள் தொழிலாகக் கொண்டதால், இன்னமும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்துக்குக் கிட்டவும் இலங்கை ஆட் சியாளர்கள் வரவில்லை. 

நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பதில் எங்களிடம் ஏதேனும் தீர்வு வரைபுகள்  உண்டா? என்றால் அதற்கான விடை இல்லை என்பதாகவே இருக்கும்.

அப்படியானால் இலங்கை அரசு இனப்பிரச் சினைக்கான தீர்வாக சில மாயமான்களை ஏவிவிடும். மாயமானே! நிஜமானது என்று நம்புகின்றவர்கள் நம்மிடம் இருந்தால் முடிவு அசோக வனச் சிறையாகவே இருக்கும். சிறை மீட்க இராமபூமி மைந்தர்கள் வரவே மாட்டார்கள். 

ஆகையால் இலங்கை அரசு ஏவி விடுகின்ற புதுப்புது தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற அதேநேரம், எங்களின் பிரச்சினைக் குத் தீர்வு என்ன? என்பதை அனைத்துத் தமிழ்த் தரப்புகளும் ஒன்று கூடி வரையறை செய்து, பொது மக்களின் பார்வைக்கு அதனைச் சமர்ப்பித்து- அங்கீகாரம் பெற்ற ஒரு முழுமையான தீர்வு வரைபை நாம் தயார் செய்ய வேண்டும்.  

அதன் பின்னர் சாட்சாத் ஈஸ்வரன் வந்தாலும் அதுவே எங்களுக்கான தீர்வு என்பதை உறுதி படக் கூற முடியும். 

இதற்கான ஏற்பாடுகளை புத்திஜீவிகளும் சிவில் சமூக அமைப்புகளும் செய்வது காலத்தின் கட்டாய பணியாகும். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila