கனவுலகில் முதுகு சொறிதல் - கலாநிதி சேரமான்

tamil makkal peravai(இது தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்படுவதற்கு ஒருநாள் முன்னர் 18.12.2015 அன்று எழுதியது)
வடதமிழீழ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உருவாகி வரும் புதிய அணி இராஜவரோதயம் சம்பந்தர் அவர்களை ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்குத் தள்ளி விட்டிருப்பதை அண்மைக் கால நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன.
2009 மே 18இற்குப் பின்னரான சூழமைவில் தானே ஈழத்தமிழர்களின் தனியொரு தலைவனாகத் திகழும் தகுதிக்குரியவர் என்று இறுமாந்திருந்த சம்பந்தரின் ஏதேச்சாதிகாரக் கனவு வடதமிழீழ முதலமைச்சரின் அரசியல் எழுச்சியால் மெல்ல மெல்லக் கலைக்கப்பட்டு வருகின்றது. என்னதான் வடதமிழீழ முதலமைச்சர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தாலும், அவரை எதிர்த்து அரசியல் செய்வது தமது தலையைத் தாமே சுவற்றில் மோதிக் கொள்வதற்கு ஒப்பானதாகவே அமையும் என்ற யதார்த்தத்தையும், இதுகாறும் சம்பந்தருக்குப் பரிவட்டம் கட்டியவர்களும் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள். சம்பந்தர் காட்டிய வழியில் சென்று தாம் ஆட்சிபீடமேற்றிய மைத்திரி-ரணில் அரசாங்கம் உருப்படியாக எதனையும் சாதிக்கப் போவதில்லை என்ற யதார்த்தத்தைத் தமிழீழ தாயக மக்களும் புரிந்து கொள்ளத் தொடங்கியிருப்பது இதற்கொரு காரணம் எனலாம்.
அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், நயினாதீவிற்கு நாகதீப என்ற சிங்களப் பெயர் சூட்டியமை போன்ற விடயங்களில் ரணில்-மைத்திரி அரசாங்கம் கைக்கொள்ளும் அணுகுமுறை சம்பந்தரின் நல்லிணக்க அரசியலால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை என்ற யதார்த்தத்தையே தமிழீழ தாயக மக்களுக்கு உணர்த்தியிருக்கின்றது. மறுபுறத்தில் இனவழிப்புக்கான நீதி, பன்னாட்டு நீதி விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், தமிழீழ தாயகத்தை விட்டு சிங்களப் படைகளை வெளியேற்றுதல் போன்ற விடயங்களில் வடதமிழீழ முதலமைச்சர் எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு அவரை ஈழத்தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர வைத்துள்ளது. இன்று வடதமிழீழத்திற்கு மட்டும் முதலமைச்சராகத் திகழும் விக்னேஸ்வரன் அவர்கள் எதிர்காலத்தில் தென்தமிழீழத்திற்குமான முதலமைச்சராகவும் பரிணமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இப்பொழுது பலரிடையே காணப்படுகின்றது.
ஆக, இப்பொழுது கடைப்பிடிக்கும் உறுதியான நிலைப்பாட்டை வடதமிழீழ முதலமைச்சர் தொடர்ந்தும் கைக்கொள்வாராக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் மக்களையும் நல்லிணக்கத்தின் பெயரில் அடிபணிவு நிலைக்கு இட்டுச் செல்வதற்கு சம்பந்தரும், அவரது பட்டத்து வாரிசான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரனும் எடுக்கும் முயற்சிகள் மண்கவ்வும் என்றே நாம் கருதலாம். இதுதான் இன்றைய யதார்த்தம்.
ஆனால் இவ் யதார்த்தத்தை கனவுலகில் சஞ்சாரம் செய்து தமிழ்த் தேசிய அரசியலில் சவாரி செய்ய முற்படும் சிலர் உணர்வதாகத் தெரியவில்லை.
தான் வகுத்த அடிபணிவு அரசியல் பாதையில் பயணிப்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகமும், அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களும், ஏனைய புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புக்களும் மறுத்த நிலையில், அவற்றைப் பிளவுபடுத்திச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் நோக்கத்துடன் கே.பி அவர்களால் உருவாக்கப்பட்டதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பாகும்.
இதன் தலைவராக விளங்கும் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களுக்கு நெடுநாளாகவே ஓர் ஆசை இருந்தது. தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்குப் பின்னர் தானே தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. பாலா அண்ணையின் உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்புலத்தில் 2003ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பொழுது அந்தப் பதவி தனக்குக் கிட்டும் என்று உருத்திரகுமாரன் கனவு கண்டார். தென்சூடானிய மக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவுடன் இடைக்கால நிர்வாக அதிகாரம் கிட்டியது போன்று தமிழீழ மக்களுக்கும் அமெரிக்காவின் ஆதரவுடன் இடைக்கால நிர்வாகத்தைத் தன்னால் பெற்றுத் தர முடியும் என்று தமிழீழத் தேசியத் தலைவருக்கு வாக்குறுதியளித்து அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞராகத் தான் உயர முடியும் என்று உருத்திரகுமாரன் கற்பனையில் மிதந்தார். ஆனால் பாலா அண்ணையின் உடல்நிலை தேறி மீண்டும் சில மாதங்களில் அரசியல் அரங்கில் அவர் களமிறங்கிய பொழுது உருத்திரகுமாரனின் கனவு கலைந்து போனது.
ஆனாலும் உருத்திரகுமாரன் விடுவதாயில்லை. பாலா அண்ணையின் மறைவுக்குப் பின்னர் முதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் ஒட்டியுறவாட முற்பட்டும், அதன் பின்னர் பா.நடேசன் அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்த முயற்சித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞராவதற்குக் கடும் பிரயத்தனம் எடுத்தார். ஆனால் அவை எவையும் கைகூடவில்லை. இவ்வாறு மாறி மாறித் தான் கண்ட கனவுகள் அனைத்தும் கலைக்கப்பட்டுத் துன்பக் கடலில் மூழ்கியிருந்த உருத்திரகுமாரனுக்கு, கே.பி மேற்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரகடனமும், அவரது கைது நாடகமும் வரப்பிரசாதமாக அமைந்தது.
அத்தோடு பாலா அண்ணையின் இடத்திற்கு வரவேண்டும் என்று தான் கண்ட கனவுகளைக் கலைத்து விட்டுத் தமிழீழத் தேசியத் தலைவரின் இடத்தில் அமர்ந்து கொள்ளும் கனவில் உருத்திரகுமாரன் சஞ்சரிக்கத் தொடங்கினார். தனது கற்பனையின் உச்ச கட்டமாக தமிழீழ நாடாளுமன்றம் என்றும், தமிழீழ அமைச்சரவை என்றும் பல்வேறு கோமாளிக்கூத்துக்களை அரங்கேற்றி இறுதியில் தனக்குத் தானே தமிழீழத்தின் பிரதம மந்திரிப் பதவி வழங்கி உருத்திரகுமாரன் முடிசூடிக் கொண்டார்.
ஆரம்பத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் பிரகடனத்தை கே.பி மேற்கொண்ட பொழுது, அதன் கவர்ச்சிகரமான பெயரால் மயங்கிப் போய் அதன் பின்னால் சென்றவர்கள் பலர். எத்தனையோ பேர் பல நூறு யூரோக்களையும், டொலர்களையும், பவுண்களையும் கட்டுப் பணமாகச் செலுத்தித் தேர்தலில் குதித்தார்கள். வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அதன் பின்னர் தான் அவர்களுக்குப் புரிந்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு செல்லாக்காசு என்பது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அகால மரணமெய்தி சில ஆண்டுகள் கடந்து விட்டன. ஆறரை ஆண்டுகளுக்கு முன்னர் அதில் ஏதோ இருப்பதாக எண்ணி அதன் பின்னால் சென்ற பலர் அது வெடித்துப் பஞ்சாகப் பறக்கும் ஓர் இலவம் பழம் என்பதை உணர்ந்து விட்டார்கள்.
ஆரம்பத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகத் தமது நேரத்தையும், உழைப்பையும் அர்ப்பணித்து செயற்பட்ட பலர் கறிவேப்பிலை போன்று உருத்திரகுமாரனால் தூக்கியெறியப்பட்டு விட்டார்கள். இப்பொழுது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது உருத்திரகுமாரனுக்கு ஜால்ரா போடுபவர்களின் கூடாரமாக மாறிவிட்டது.
தென்சூடானில் தூதரகம் அமைப்பாகக் கூறிச் சிறுமிகளுடன் பாலியல் முறைகேட்டில் உருத்திரகுமாரனின் அடிவருடிகள் ஈடுபட்டு ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தியது உருத்திரகுமாரனால் தூக்கியெறியப்பட்ட அவரது முன்னாள் துணைப் பிரதமர் கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்களால் ஏற்கனவே போட்டுடைக்கப்பட்ட ஒன்று.
இப்பொழுது இளம்பெண்கள் பலர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று கேள்வியுற்றதும் ‘தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்ற கதையாகத் தொலைதூரத்திற்கு ஓடும் அளவிற்கு உருத்திரகுமாரனைச் சுற்றியிருக்கும் அவரது அமைச்சர்களினதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கூறிக் கொள்வோரினதும் ஒழுக்க நடத்தைகள் அமைந்திருக்கின்றன.
ஆக, அகால மரணமெய்தி வெறும் சடலமாக மாறியிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வர்ணப்பூச்சுக்களால் அலங்கரித்து மம்மி அரசியல் செய்யும் முயற்சியிலேயே இப்பொழுது உருத்திரகுமாரன் இறங்கியுள்ளார்.
தமிழீழ சுதந்திர சாசனம் எழுதுகின்றோம், பன்னாட்டு விசாரணைக்குக் கையெழுத்துத் திரட்டுகின்றோம் என்றெல்லாம் உருத்திரகுமாரனும் அவரது அடிவருடிகளும் மேற்கொண்ட செப்படி வித்தைகள் எல்லாம் இப்பொழுது பிசுபிசுத்துப் போன நிலையில் தனது இருப்பை மக்களுக்கு நினைவூட்டிக் கொள்வதற்காக அடிக்கடி அறிக்கைகளை வெளியிடுவதையே தனது தேசியப் பணியாக எண்ணி உருத்திரகுமாரன் அறிக்கை வெளியிடுகின்றார்.
யாரும் உருத்திரகுமாரனைப் பற்றியோ, அன்றி அவரால் வெளியிடும் அறிக்கைகளைப் பற்றியோ அலட்டிக் கொள்வதில்லை. நாமும் சிறிது காலம் உருத்திரகுமாரனின் விடயத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டுதான் இருந்தோம். நாம் மட்டுமல்ல, எமது மக்களும் சரி, உலக இராசதந்திரிகளும் சரி, எவருமே உருத்திரகுமாரனையோ, அவரது தலைமையிலான கும்பலையோ ஒரு பொருட்டாக எடுத்தது கிடையாது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழீழ தாயகத்தில் தமிழீழ நடைமுறை அரசு இயங்கிய பொழுது கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டு இராசதந்திரிகளும் கிளிநொச்சி சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இந்நிலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ‘மறைந்திருக்கும்’ இன்றைய சூழமைவிலும் தொடர்கின்றது. ஆட்கள் தான் மாறியிருக்கின்றார்களே தவிர காட்சிகள் மாறவில்லை. கொழும்பில் சிங்கள ஆட்சியாளர்களைச் சந்திக்கும் வெளிநாட்டு இராசதந்திரிகள், அடுத்த படியாக யாழ்ப்பாணம் சென்று வடதமிழீழ முதலமைச்சரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கும் நடைமுறையைப் பின்பற்றுகின்றார்கள்.
தமிழீழ நடைமுறை அரசு இயங்கிய பொழுது இன்னுமொரு மேலதிக நடைமுறை வெளிநாட்டு இராசதந்திரிகளால் கடைப்பிடிக்கப்பட்டது. கிளிநொச்சி செல்லும் ஒவ்வொரு இராசதந்திரியும், அதன் முன்னரோ பின்னரோ இலண்டன் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் பாலா அண்ணையையும் சந்திப்பார்கள். தமிழீழத் தேசியத் தலைவரையும், பாலா அண்ணையையும் ஒன்றாகக் கிளிநொச்சியில் சந்திக்கும் பொழுது மட்டுமே இலண்டன் செல்வதை அவர்கள் தவிர்த்துக் கொள்வார்கள். இதற்குக் காரணம் அங்கீகரிக்கப்படாத தமிழீழத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராசதந்திரியாக அன்று பாலா அண்ணையை உலகம் கருதியதுதான்.
இன்று உருத்திரகுமாரனையும் தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராக, அல்லது குறைந்த பட்சம் புலம்பெயர் தமிழர்களின் தலைவராக உலகம் கருதியிருந்தால், யாழ்ப்பாணத்தில் வடதமிழீழ முதலமைச்சரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்ததும் நியூயோர்க் சென்று உருத்திரகுமாரனையும் அவர்கள் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவுமே நடைபெறுவதில்லை. ஏனென்றால் உருத்திரகுமாரனை ஒரு பொருட்டாகத் தமிழர்கள் மட்டுமன்றி எவருமே கருதுவதில்லை.
அப்படிப்பட்ட உருத்திரகுமாரன் அண்மையில் தனது அரசவைக் கூட்டம் என்ற கேலிப்பட்டாளத்தை ஒன்றுகூட்டி உரையொன்றை நிகழ்த்தியிருக்கின்றார். அதில் யதார்த்த அரசியலின் பெயரில் எந்த விதத்திலும் தமிழ் மக்களுக்குப் பயன்தராத பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிப்பதாகவும், ஆனால் எதிர்நீச்சல் போட்டாலும் சரியான பாதையில் தானும், தனது நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பயணிப்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிந்தித்தும், தன்னைப் புகழ்ந்தும் உருத்திரகுமாரன் சுயபுராணம் பாடியிருக்கின்றார். அதை நாம் உட்பட எவருமே கண்டு கொள்ளவில்லை என்பது வேறு விடயம்.
சம்பந்தரின் அடிபணிவு அரசியலுக்கு மாற்றீடாக வடதமிழீழ முதலமைச்சர் விக்னேஸ்வரன் திகழ்கின்றார் என்ற வகையில் சம்பந்தரைப் பற்றியோ, அன்றி அவரது பட்டத்து இளவரசரான சுமந்திரனைப் பற்றியோ யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்பதும் வேறு விடயம்.
ஆனால் இங்கு வேடிக்கை என்னவென்றால் உருத்திரகுமாரன் பாடிய சுயபுராணத்தை எழுதிக் கொடுத்த அவரது மதிமந்திரியான தர்மலிங்கம் சர்வேந்திரா என்பவர் அதற்கு பொழிப்புரை வழங்கியிருப்பதுதான். ஏதோ உருத்திரகுமாரனின் உரையில் பல பூடகமான அரசியல் கருத்துக்கள் மறைந்திருப்பது போன்றும், அதற்கு விளக்கம் கொடுப்பதே தனது தலையாய கடமை போன்றும் சர்வேந்திரா பொழிப்புரை எழுதியுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலை கே.பி உருவாக்கியதே சர்வேந்திராவை நம்பியே தவிர உருத்திரகுமாரனை நம்பியல்ல. உருத்திரகுமாரன் கே.பியின் ஒரு கைப்பாவை. அவருக்குத் தனது கற்பனைகள் நிறைவேறுவது போன்ற மாயை இருந்தாலே போதும்.
ஆனால் சர்வேந்திரா அப்படியல்ல. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலின் பின் இயந்திரமாகத் திரைமறைவில் இருந்து இயங்குபவர் அவர். கனவுலகில் தமிழீழத்தின் சக்கரவர்த்தியாக மிதந்து, கானல்நீரில் கப்பலோட்டி, வெற்று மணலில் மாளிகைகள் எழுப்பும் உருத்திரகுமாரனுக்கு முதுகு சொறிவதே தனது தேசியப் பணி என்ற அர்ப்பணிப்போடு செயற்படுபவர் சர்வேந்திரா. உருத்திரகுமாரன் என்ற முன் இயந்திரம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற தொடருந்து வண்டியை அதன் இலக்கில் கொண்டு செல்லத் தவறினாலும், சர்வே (சர்வேந்திரா) என்ற பின் இயந்திரம் அதனைக் கே.பி அவர்கள் வகுத்த பாதையில் இட்டுச் செல்லும் என்று நீண்ட காலமாகப் பீற்றிக் கொள்பவர் சர்வேந்திரா.
அதனால்தான் என்னவோ, கனவுலகில் இருந்து மீள்வதற்கு உருத்திரகுமாரன் முற்பட்டாலும் சர்வேந்திரா விடுவதாயில்லை. அவரைத் தொடர்ந்து கற்பனையுலகில் அமிழ்த்தி வைத்து கே.பியின் தமிழினச் சிதைப்புக் கனவை நிறைவேற்றுவதில் சர்வேந்திரா தீவிரமாக உள்ளார்.
தமிழீழ மக்களினது மட்டுமன்றி, உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்றவராக இன்று மிளிர்பவர் வடதமிழீழ முதலமைச்சர் விக்னேஸ்வரன். சம்பந்தரின் அடித்தொண்டு அரசியலுக்கு விக்னேஸ்வரன் முற்றுப்புள்ளி வைப்பார் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இன்று தமிழர்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. தமிழீழத் தேசியத் தலைவரின் தொடர்பை இழந்தநிலையில், வழிகாட்ட மீகானின்றி நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் போன்று தவித்த ஈழத்தமிழர்களின் அபிமானத்திற்கு உரியவராக விக்னேஸ்வரன் அவர்கள் பரிணமித்துள்ளார். தனது அரசியல் பிரவேசத்தின் பொழுது விக்னேஸ்வரன் எடுத்த சில முடிவுகளையிட்டும், வெளியிட்ட கருத்துக்களையிட்டும் அதிருப்தியடைந்த நாம் கூட இன்று அவர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்.
ஒரு புறத்தில் சம்பந்தன் என்ற கப்பல் மெல்ல மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளது. மறுபுறத்தில் விக்னேஸ்வரன் என்ற நம்பிக்கை நட்சத்திரம் மிளிரத் தொடங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஏற்கனவே அகால மரணமெய்திய உருத்திரகுமாரனின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற சடலம் உழுத்து நாற்றமெடுக்கத் தொடங்கி விடும்.
அந்த நிலை வரும் பொழுது சர்வேந்திராவையும், உருத்திரகுமாரனையும் தவிர வேறு எவரும் கனவுலகில் முதுகு சொறியப் போவதில்லை. இதனைப் புரிந்து கொண்டு வெளியில் வருவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் தயாராகி வருகின்றார்கள். அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும், மக்களவைகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் முற்படுவது இதனால்தான்.
அவர்களின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அவர்களை அரவணைத்து செயற்படுவது தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் கடப்பாடாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila