ஆகவே விக்கினேஸ்வரன் ஐயாவை, எமது மக்கள் இறை அருள் கொண்ட ஒருவராக, ஒரு காலத்தின் பதிவாக, வரலாற்று ரீதியாக தந்தை செல்வநாயகத்துக்குப்பிறகு, தலைவர் பிரபாகரனுக்குப்பிறகு, ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தமது தலைவராகப்பார்க்கின்றனர். அவரை கட்சியை விட்டு விலக்கவேண்டும் என்றவிதமான எண்ணங்கள் யாருக்கும் இல்லை.’ என்று, யாழ்.கிளி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கனடாவில் 10.11.2015 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்றோ, ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பை விக்கினேஸ்வரனிடம் கையளிக்கத்தயார்’ என்று சும்மா ஒப்புக்கு கூறிக்கொண்டு…
மறுபுறம் அவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி நிறுத்திவைத்து கேள்விக்கேட்டு தண்டிக்கத்துடிக்கும், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டுவந்து அவரைப்பதவி களைந்து வீட்டுக்கு அனுப்ப சதித்திட்டம் தீட்டும், சம்பந்தன் – சுமந்திரன் – மாவை தரப்பினர் உள்ளநிலையில், சிறீதரன் எம்.பி விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு சார்பாக ஆதரவுக்குரல் கொடுக்காமல்’ இருப்பதன் மர்மம் தான் என்ன?
இரு தரப்புப்போரில் யார் பக்கம் கை ஓங்குகின்றதோ, அந்தப்பக்கம் தாவிவிடும் மதில் மேல் பூனையாக சிறீதரன் காத்திருக்கின்றாரா?
சிறீதரனின் கருத்துப்படியே நோக்கின்… ‘விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு என்று பெரும் மக்கள் செல்வாக்கும் ஆதரவும் உண்டு. அவரை மக்கள் தேசியத்தலைவர் பிரபாகரனின் நிலையில் வைத்து நேசிக்கின்றார்கள்.’
அப்படியென்றால், தன்னை நேசிக்கும் அந்த மக்களுக்காக, அவர்களின் நலனை முன்னிறுத்தி ஏதோவொரு கட்சியையோ – அமைப்பையோ தொடங்குவதற்கு, அன்றி அதில் அங்கத்துவம் வகிப்பதற்கு விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு முழுக்க முழுக்கவும் உரிமை உண்டு.
இந்தநிலையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ எனும், மக்களின் அரசியலுரிமை மற்றும் வாழ்வுரிமையை பாதுகாக்கும் மக்கள் நலன் பேணும் அமைப்பின் இணைத்தலைவர் பதவியை விக்கினேஸ்வரன் ஐயா ஏற்றிருப்பது தொடர்பில், அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும், பழிச்சொல்லையும் சுமத்தி அவரை கலகக்காரனாக மக்கள் மத்தியில் சித்திரித்து, சம்பந்தன் – சுமந்திரன் – மாவை தரப்பினர் பகிரங்கமாக விமர்சித்து செயல்பட்டுவருகின்றனர்.
தந்தை செல்வா – பிரபாகரனுக்கு பின்னர், தமிழ் மக்களின் ஒரே தலைவர் விக்கினேஸ்வரனே! – என்று தெரிவித்துள்ள சிறீதரன்,
இந்த சந்தர்ப்பத்தில், ‘விக்னேஸ்வரன் ஐயா மக்களின் தலைவன். அந்த மக்கள் தலைவன் தன் கடமையை செய்துள்ளார். ஒரு தலைவனுக்குரிய இலட்சணம் அதுவே.’ என்று, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு சார்பாக குரல் கொடுத்து, சம்பந்தன் – சுமந்திரன் – மாவை தரப்பினரின் குரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்துவருவதானது, ‘இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? தனக்கு ஒரு கவலையும் இல்லை.’ எனும் அவரது இரு மனோநிலைப்போக்கையும், இரட்டை வேடத்தையும் சந்தி சிரிக்க அம்பலத்துகின்றது.
‘தமிழ் மக்கள் பேரவை’ இன் உருவாக்கம் தொடர்பில், ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேள்வி கேட்கும்போது, ‘எனக்கு இப்ப நேரம் இல்ல’ எனக்கூறி மழுப்பல் காரணம் சொல்லி தப்பித்து வருகின்றார் சிறீதரன்.
-கவரிமான்-