வடபகுதி கடல்வளம் அழிவின் விளிம்பில் - சிவமோகன்


தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம்வரை பாதுகாப்பாக இருந்த வடபகுதி கடல் வளம் இன்று அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் இதை இராணுவம் பார்த்துக் கொண்டிருக்கப்போகின்றதா? என்றும் வினா தொடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

முத்துக்குளிக்கும் பூமி என்றும் இரத்தினக்கல் உதிக்கும் பூமி என்றும் அமைதிப் பூங்கா என்றும் ஒட்டுமொத்தத்தில் அழகிய தீவு என்றும் இலங்கை வர்ணிக்கப்பட்டது. ஆனால், இன்று அனைத்தும் அழிக்கப்பட்ட அபாய பூமியாக நாடு மாறிக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் வடக்கில் கடல் வளம் அழிக்கப்படுகின்றது. சட்டவிரோதமாக அட்டைப்பிடிக்கும் நடவடிக்கை நடைபெறுகிறது. கடந்த கால இரத்த வரலாற்று அரசு செய்ததைத்தான் இன்று நல்லாட்சி என்ற போர்வையில் மைத்திரி அரசும் அமைதியாக செய்துவருகிறது. வடக்கில் சாலை கடற்கரையில் அட்டைப்பிடிப்பு தொழில் சட்டவிரோதமான நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கபடுகிறது.

அட்டைப்பிடிப்பு தொழில் பகலில் செய்யப்பட வேண்டும். ஒளியுட்ட்படக்கூடாது. அடிமட்டத்திலுள்ள சங்குகள் அள்ளப்படக்கூடாது. இப்படி பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இரவில் ஒளியுட்டி அளவுவேறுபாடின்றி அட்டைகளை அள்ளிக்கொண்டிருக்கின்றனர். சங்குகளை சாக்கு சாக்குகளாக கொண்டுவந்து வியாபாரம் செய்கின்றனர். இவற்றுக்கு ஆதராங்கள் உண்டு. நானும் நேரில் கண்டுள்ளேன். ஆயிரக்கணக்கான வள்ளங்களில் ஆயிரக்கணக்கான வேற்று மாவட்டத்தவர்கள் அமைச்சர்களின் ஆதரவுடன் சாலை, மாத்தளன், கொக்கனை போன்ற பிரதேசங்களில் சட்டவிரோமாக அட்டைப்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த வருடமும் ஈடுபட்டிருந்தார்கள். இவ்வருடமும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீன்வளம் அழிக்கப்பட்டு மக்கள் வறுமையை தொட்டுக்கொண்டிருக்கின்றனர். சட்டத்துக்கு உட்பட்ட வகையில் அட்டைப்பிடிப்பு இடம்பெற்றால் அதை நாம் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், ஒரு சில அமைச்சர்களின் அடிவருடிகள் இராணுவத்தின் காவலுடன் சட்டவிரோதமாக பிடித்துவருகின்றனர். சட்டவிரோத செயற்பாட்டுக்கு இராணுவம் காவல் காப்பதா? அதேவேளை, இந்திய ரோலர்கள் அள்ளு வலைகளை பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட முறைகளை கையாண்டு முல்லைக்கடலில் இரால் பிடிக்கும் தொழிலை தொடங்கியுள்ளனர். இதனால் எமது மக்கள் பரிதவித்து போயுள்ளனர். இவ்வாறு பல நூற்றுக்கணக்கான ரோலர்கள் முல்லைக் கடற்பரப்பை அலங்கோலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பரந்த கடலில் அனைத்தையும் அழித்து முடிக்கின்றனர். விடுதலைப் புலிகளின் காலம்வரை பாதுகாப்பாக இருந்த வடபகுதி கடல் வளம் இன்று அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதை இராணுவம் பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றதா? சட்டவிரோத நடடிவக்கைகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அரச பாதுகாப்பு படையினர் கரையோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். எமது மீன்வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்காது இந்த அரசாங்கம் அமைதிகாக்குமானால், எமது மண்ணில் அஹிம்சை போராட்டங்கள் முல்லை மண்ணை, மன்னார் தீவை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உண்ணாவிரதங்கள் தானாக உதிக்கும். உயிர்பலிகள் மீண்டும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு சமர்ப்பணம் செய்யப்படும். நல்லாட்சி என்ற உங்கள் பெயர் ஏமாற்று அரசாங்கமாக கூடாது. இந்திய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துங்கள். வெளிமாவட்ட மீனவர்களின் ஊடுருவலையும் தடுத்து நிறுத்துங்கள்  என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila