இதில் 5 மாவட்டங்களையும் சேர்ந்த கைவினை கலைஞர்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் உரை நிகழ்த்துகையில், கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டல்களின் கீழ் இன்று பல கிராமங்களில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மகளீர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றின் செயற்பாடுகள் முன்னேற்றகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் குறிப்பாக மகளீர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தமது செயற்பாடுகளை மிகவும் முனைப்புடன் ஆற்றி வருவது பாராட்டுதற்குரியது. கடந்தகால கொடிய யுத்தத்தின் பின்னர் பல குடும்பங்களில் பெண்கள் தமது கணவன்மாரை இழந்து பிள்ளைகளை இழந்து பெற்றோர்களை இழந்து நிர்க்கதியாகி நின்ற நிலையில், பொருள் தேடலில் ஈடுபடக் கூடிய தந்தை, கணவன், ஆண் பிள்ளைகள் அற்ற நிலையில், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டு வாழக் கூடிய பல குடும்பங்களுக்கு இவ்வாறான அமைப்புக்கள் உதவுங் கரங்களாக வாழ்க்கைக்கு ஒளியூட்டக் கூடிய அமைப்புக்களாக விளங்கி வந்துள்ளன. யுத்தத்தின் காரணமாக ஒரு கணத்திலேயே பலரின் வாழ்க்கை முறைமைகள் தலைகீழாக மாற்றப்பட்டன. அப்போது வாழும் வகை தெரியாது தத்தித் திணறிய பல பெண்கள் இவ்வாறான மகளீர் அமைப்புக்கள் மூலம் தாமும் வாழ்க்கையில் முனைந்து முன்னேறக் கூடியவர்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுக் கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளனர். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வடபகுதிக்கு விஜயம் செய்த அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்குப் பல விதமான மாலைகள் சூட்டப்பட்டன. பூமாலைகள், சந்தனமாலைகள், மணிமாலைகள், பனை ஓலைக் கீற்றுக்களால் உருவாக்கப்பட்ட மாலைகள் எனப் பலவிதமான மாலைகள் அவரின் வரவேற்பின் போது அவருக்குச் சூட்டப்பட்டது. அவர் மிகவும் குறிப்பாகப் பனை ஓலைக் கீற்றுக்களில் இருந்து செய்யப்பட்ட அந்த அழகிய மாலைகளை தன்னுடன் எடுத்துச் சென்றார். இதனைக் கண்ணுற்ற நான் எங்கிருந்து இம்மாலைகளைப் பெற்றீர்கள் என ஏற்பாட்டாளர்களிடம் வினவிய போது ஒரு மகளிர் கிராமிய அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களால் விற்பனைக்காகத் தயாரிக்கப்பட்டவை என்று பதில் வந்தது. தொடர்ந்தும் அவர்களின் செயற்பாடுகளைப் பற்றி அறிய முற்பட்ட போது அழகிய மாலைகள், பூக்கள், மற்றும் திருமண நிகழ்வுகளில் வழங்கப்படும் Rich Cake போன்ற உணவுப் பண்டங்களை வைத்து அன்பளிப்புச் செய்யக்கூடிய அழகிய சிறிய ஓலைப் பெட்டிகள் எனப் பல பொருட்கள் அங்கு தயாரிக்கப்படுவதையும் அவற்றின் மூலம் கணிசமான வருமானங்களையும் பெற்றுக் கொள்வதையும் அறிய முடிந்தது. குறிப்பாக மட்டுவில் பிரதேசம் மற்றும் முருகண்டிப் பிரதேசங்களில் பெண்கள் அமைப்புக்கள் மிகச் சிறப்புடன் வீட்டுக் கைத்தொழில்களில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. “பட்டிக்” சீலைகளில் அச்சேற்றுவதும் இப்பொழுது பிரபல்யம் அடைந்து வருகின்றது. எமது வடமாகாண சபையின் விவசாய அமைச்சு எம்முடன் இணைந்து கொண்டு கார்த்திகை மாதத்தில் “ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்ற தொனியில் மரக்கன்றுகளை நாட்டுகின்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிகழ்வுகளின் போது முருகண்டிப் பிரதேசப் பகுதியில் இயங்கும் மகளீர் அமைப்புக்கள் தாமாகவே முன்வந்து எவருடைய அழைப்புக்களோ அல்லது கோரிக்கைகளோ இன்றி 8500 மரக்கன்றுகளைத் தாமாகவே அப்பிரதேசங்களில் நாட்டி எமக்கு பூரண ஆதரவைத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்! மேலும் மகளிர் அணிகளில் அங்கம் வகிக்கும் பெண்கள் ஒரு குழுவாக இணைந்து கொண்டு சுழற்சி முறையில் மிகக் குறைந்த வட்டியுடனான கடன் வழங்கல் போன்ற அரிய பல சேவைகள் மூலம் தம்மையும் வளர்த்துக் கொண்டு தம்முடன் இணைந்தவர்களையும் ஒரு சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்வது ஏனையோருக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது. அவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவது எமது கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கடமையாகும். ஆண்களோ பெண்களோ கல்வி கற்றல் செயற்பாடுகளை ஓரளவு சிறப்பாக அல்லது அதிலும் குறைவாக நிறைவு செய்த பின்னர் அவர்களுட் பலர் வேலைதேடி எமது காரியாலயத்தை நோக்கி வாரா வாரம் படை எடுக்கின்றார்கள். ஆனால் இவர்களில் ஒரு சிலருக்கே எம்மால் உதவ முடிகின்றது. பலரிடம் நாம் சுயதொழில் பற்றி பேசிப்பார்கின்றோம். ஆனால் அவர்கள் அதைச் செவிமடுப்பதாகத் தெரியவில்லை. அப்படியானவர்களுக்கு இது போன்ற கண்காட்சிகள், கைப்பணி வேலைகள் மீதும் குடிசைக் கைத்தொழில்கள் மீதும் ஆர்வத்தை உண்டுபண்ணும் என நம்புகின்றேன். அண்மையில் பத்திரிகை ஒன்றில் காணப்பட்ட ஒரு சிறு செய்தி எனது மனதைத் தொட்டது. 27 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் மிகச் சிறப்பாகத் தமது கல்விச் செயற்பாட்டை முடித்துக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்களையும் பெற்ற பின்னர் அரசாங்கத் திணைக்களங்களிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ சேவையாற்ற விரும்பாது தனது சுய தொழில் மூலமாக அதாவது பனை ஈர்க்கினால் சுழகு பின்னுகின்ற தொழிலை மேற்கொண்டு மாதாந்தம் இலட்சக்கணக்கான ரூபாய்களை வருமானமாகப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டருந்தது. எமது முன்னோர்கள் மிகக் குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ நாம் ஆண், பெண், குழந்தை, குட்டி என்று அனைவரும் ஓடி ஓடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை. காரணம் வீண் விரயங்கள். அதிக மின் பாவனை, ஆடம்பரச் செலவுகள், தேவையற்ற கொண்டாட்டங்கள் என பல வழிகளில் அனாவசியச் செலவீனங்களைத் தேடிக் கொண்டு அல்லல்ப் படுகின்றோம். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது. இவற்றில் இருந்து நாம் விடுபட வேண்டும். தமிழினத்தின் தற்போதைய நிலை, அதன் வருங்காலம் பற்றிச் சிந்தித்தால் எமக்குப் பொறுப்புணர்ச்சி தானே வந்து விடும். வீண் பொழுதைக் களிப்பதிலும் வெட்டிப் பேச்சுப் பேசுவதிலும் இருந்து எம்மை விலக்கிக் கொண்டு நாட்டுக்கு நன்மை தரும் நடவடிக்கைகளில் ஈடுபட முன்வரவேண்டும் என்று கருதுகின்றேன். இன்றைய இந்தக் கண்காட்சியானது பல குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் ஒளி கொடுக்கக்கூடிய வழிகளை எடுத்தியம்பும் ஒரு முன்மாதிரியான நிகழ்வாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் கிடையாது. ஒவ்வொரு அமைப்புக்களினதும் விசேட செயற்பாடுகளையும் ஆக்கங்களையும் குணாதிசயங்களையும் அவர்களினால் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான அமைப்புக்கள் மென்மேலும் சிறப்புடன் செயற்பட்டு நாம் எவர்க்குஞ் சளைத்தவர்கள் அல்ல என்ற செய்தியைக் கூறக் கூடிய வகையில் செயலாற்ற வேண்டும் எனதெரிவித்தார். |
கைவினைப் பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
Related Post:
Add Comments