வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தலைமையில் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட குழுவொன்றே நிதி அமைச்சரினை சந்தித்து பிரச்சினை பற்றி பேச்சுக்களினை நடத்தியுள்ளது.
வடமாகாணசபை தெரிவாகி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமக்கு சொகுசு காருக்கான பெமிட் அனுமதி இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லையெனவும் அதனை வழங்கக்கோரியே இச்சந்திப்பு நடந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் வடமாகாண அமைச்சர்கள் மற்றும் பேரவை தலைவர் போன்றோர் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லையென தெரியவருகின்றது.
குறித்த சந்திப்பினை முக்கியத்துவமிக்கதாக நிதி அமைச்சர் கருதியிருக்கவில்லையெனவும் அத்துடன் புதிய வரவு செலவு திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான பெமிட் நடைமுறை கூட நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் தெரிவான மாகாணசபையென்ற வகையில் தமக்கு சலுகை வழங்கவேண்டுமென ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்ததாக தெரியவருகின்றது.
முன்னதாக யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவரிற்கும் சொகுசு கார்களை இலவசமாக வழங்க முன்வந்திருந்த போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.