இராமர் காடு சென்றபோது தசரதரும் உடன் சென்றிருந்தால்...


தசரதச் சக்கரவர்த்தியிடம் அவர் மனையாள் கைகேயி இரண்டு வரங்களை கேட்கிறாள். அதில் ஒன்று; இராமர் பதினான்கு ஆண்டுகள் காடு செல்ல வேண்டும். மற்றையது; என் மகன் பரதன் நாடாள வேண்டும். 
ஏற்கெனவே இரு வரங்கள் தருவதாக சத்தியம் செய்து கொடுத்த தசரதனால் எதுவும் செய்ய முடியவில்லை. 

இராமர் காடேகுவதையாவது விட்டுவிடு என்று கைகேயிடம் கெஞ்சுகிறார் தசரதர். கைகேயி விடுவதாக இல்லை. 

அயோத்தி மன்னராக முடிசூட்டப்பட இருந்த இராமரை பதினான்கு ஆண்டுகள் காடு செல்லுமாறும் பரதனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் என்றும் இராமருக்குச் செய்தி சொல்லப்படுகிறது. 

செய்தி அறிந்ததும் சீதா, இலட்சுமணர் சகிதம் இராமர் காடேகிறார். இராமர் காடேகினார் என்ற செய்தியை தசரதன் அறிந்ததும் புத்திரசோகம் தாங்க முடியாமல் மரணித்து விடுகிறார். 

யாருக்கும் நடக்கக் கூடாத சம்பவம் தசரதருக்கு நடந்து விட்டது. இதை விதி வலிமை என்று கூறினாலும் தசரதனின் மதிக்குறைவும் காரணம் என்பதை சொல்லித்தானாக வேண்டும். 

ஆம், இராமாயணத்தில் தசரதனின் மதி மறைப்பு மூன்று இடங்களில் வெளிப்படுகிறது. ஒன்று; வேட்டையாடச்சென்ற தசரதர் ஆற்றில் தண்ணீர் எடுக்கும் ஒலியை மான் தண்ணீர் குடிப்பதாகக் கருதி முனிபுங்கவரின் புதல்வரை அம்பு எய்தி உயிர் போக்கியமை. 

இரண்டாவது; தன் மனையாள் கைகேயிக்கு இரண்டு வரங்களைக் கொடுத்து, நீ விரும்பும் போது பெற்றுக் கொள்க என்று கூறியமை.

மூன்றாவது; இராமர் 14 ஆண்டுகள் காடு செல்ல வேண்டும் எனக் கைகேயி கேட்டபோது,
கைகேயி! இராமர் காடேகினால் நானும் இராமனோடு சேர்ந்து காடு செல்வேன் என்று கூறாமை என்பனவே அந்த மூன்று தவறுகளாகும். 

இராமரோடு சீதாதேவியும் இலட்சுமணனும் காடு செல்லும் போது தசரதரும் உடன் செல்வதில்      தவறில்லை. தசரதர் காடு சென்றால் அவர் மனைவிகளாகிய கைகேயி, கோசலை, சுமத்திரை ஆகிய மூவரும் காடு செல்ல வேண்டும். 

ஆக, இராமர் காடு செல்ல வேண்டும் என்ற வரத்தை கைகேயி கைவிட்டிருப்பாள். எனினும் தசரதருக்கு அப்படி ஒரு மதி வேலை செய்யவில்லை.
சிலவேளை இராமரோடு சேர்ந்து தசரதரும் காடு சென்றிருந்தால், மாயமான் வந்தபோது சீதைக்குக் காவலாக தசரதர் இருந்திருப்பார் அல்லவா? 

ஆக, தசரதரின் மதிக்குறைவு நிலைமைகளை மிக மோசமாக்கியது. தசரதரின்  இராசதந்திரம் அற்ற செயற்பாடு போன்ற பல சம்பவங்கள் உலகில் நிறைவே நடந்துள்ளன.
ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றுகிறவர்கள் எப்போதும் எங்கும் இருப்பார்கள். 

இப்போதெல்லாம் தமிழ் மக்களின் நிலைமைகளை பார்க்கின்றபோது எத்தனையோ முறைகளின் ஊடாக நாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என் பது தெரிகிறது. அதில் ஒன்றாக “கிராம இராச்சியம்” என்ற புதிய பூதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இப்படியே எங்கள் பிரச்சினைகள் திசை திருப்பப்படும் போது நாங்களும் சில தீர்மானங்களை எடுத்தாக வேண்டும். 

எங்களை ஏமாற்ற இலங்கை அரசு இனியும் நினைத்தால் எங்கள் பாராளுமன்றப் பதவிகளை தூக்கி எறியவும் தயங்கமாட்டோம் என்று ஒரு சம்பிரதாயத்துக்கேனும் கூறி நாங்களும் உசாராக இருக்கிறோம் என்பதைக் காட்டுவது கட்டாயம். 

ஜனநாயகம் என்பது ஆமாம் போடுவது, எல் லாவற்றுக்கும் இணங்கிச் செல்லுவது மட்டுமல்ல; நீதியை ஆணித்தரமாக எடுத்துரைப்பதும் ஜனநாயகம் என்பது உணரப்பட வேண்டும்.    ”   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila