2016ஆம் ஆண்டின் பிறப்போடு புதிய திட்டங்க ளையும் அமுல்படுத்துவது கட்டாயமானதாகும். ஒவ்வொரு ஆண்டையும் ஒவ்வொரு நோக்கில் நகர்த்திச் செல்கின்ற நடைமுறை உலகம் முழுவதிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தமிழர் தாயகத்தின் தேவைகள் தொடர்பில் 2016ஆம் ஆண்டிலும் பொருத்தமான இலக்குகளைத் திட்டமிட்டு அவற்றை அடைவதற்கான வியூகங்களை அமைப்பது கட்டாயமானதாகும்.
கடந்த 30 ஆண்டுகால யுத்தம் எங்கள் இனத்தை பல்வழிகளிலும் தாக்கியுள்ளது. இந்நிலையில் நிலமற்றவர்கள், வீடற்றவர்கள், தொழில்வாய்ப்பு அற்றவர்கள் என்ற எத்தனையோ குறைகள் பிரச்சினைகளுடன் வாழுகின்ற அவல நிலையை போக்குவது தொடர்பில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
இளம் வயதினர் வேலையற்று இருப்பார்களா யின் அதனால் பல்வேறு பிரச்சினைகள் முளைப்பெடுக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இளம் சமூகத்தை வழிப்படுத்துவதென்பதில் வேலைவாய்ப்பு என்பது முக்கிய இடத்தைப் பெறுகிறது. வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலைமை யானது இளம் சமூகத்தை பிறழ்வான பாதைக்கு நகர்த்திச் செல்லும்.
எனவே வேலைவாய்ப்பு என்பது மிக மிக அவசியமானதாகும். இங்கு வேலைவாய்ப்பு என்பதில் சுயதொழில் முயற்சி மற்றும் விவசாயம், கைத்தொழில்துறை என்பன கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.
பொதுவில் தமிழர் தாயகத்தின் தொழில் முயற்சி என்பது வர்த்தகமாக இருக்கின்றதே தவிர உற்பத்தி முயற்சியாக இல்லை. விவசாயம் என்பது எங்களிடம் இன்று வெறுப்புக்குரிய தொழிலாகி விட்டது. இதனால் ஒரு காலத்தில் குடும்பம் முழுவதும் வேளாண்மை தொழிலில் ஈடுபட்ட நிலைமை மாறிப் போயிற்று.
இதேவேளை சுயதொழில் முயற்சி என்பது எங்களிடம் அறவே இல்லை எனலாம். இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஏகப்பட்ட சனத்தொகையைக் கொண்டிருந்த போதிலும் அங்கு வேலைவாய்ப்பு என்பதில் சுயதொழில் முயற்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் எங்களிடம் சுயதொழில் முயற்சி என்பது இன்னமும் எழுகை பெறாமல் இருப்பது வேதனைக்குரியது.
பிரதான வீதியில் நிலம் இருந்தால் கடை கட்டு வது என்பதைத் தவிர, வேறு எதுவும் எங்களுக் குத் தெரியாமல் உள்ளது. அதிலும் கடை கட்டுவது என்ற செயற்பாடும் வாடகைக்கு விடுவதற்கானது என்பதற்குள் இருக்கக்கூடிய எங்களின் அறியாமை ஏற்புடையதன்று.
எனவே ஒரு புறத்தில் எங்கள் மக்களின் உரிமை சார் விடயம் என்பது கவனிக்கப்படும் அதேநேரம், எங்கள் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி, சமூக நிலைமை ஆகியன தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் எங்கள் மக்களின் வாழ்வியல் பற்றிய எண்ணத்துடன் கூடிய திட்டமிடல்களும் அமுல்படுத்தல்களும் அவசியம். எங்கள் மக்களின் ஏழ்மையைப் போக்குவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் விட்டால் நிலைமை மோசமாவது தவிர்க்க முடியாததே.