உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னர் வடகிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய எல்லை நிர்ணயம் உள்ளடங்கலாக தனது பரிந்துரைகளை இலங்கை தமிழர் மகா சபை கையளித்துள்ளதாக அதன் தலைவர் கே. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அண்மையில் நடந்த சர்வக கட்சிக் கூட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னர் மீள் எல்லை நிர்ணயம் குறித்த பரிந்துரைகளை அரசியல் கட்சிகள் முன் வைக்கலாம் என ஜனாதிபதி கோரியதற்கு இணங்கவே இவ்வாறு முன் வைக்கப்பட்டுள்ளது.
தமிழர் மகா சபை முன் வைத்த பரிந்துரைகள்
யாழ்.மாவட்டத்தில் நல்லூர் பிரதேசம் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்றது. ஆகவே யாழ்ப்பாணம் நல்லூர் மாநகர சபை எனப்பெயர் மாற்றப்படவேண்டும். நல்லூர் பிரதேச சபையானது திருநெல்வேலி பிரதேச சபையாக மாற்றப்படவேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் கண்டாவளை பிரதேச சபையொன்று அமைக்கப்படவேண்டும். அத்துடன் கிளிநொச்சி பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்த வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும். தற்போதே மக்கள் மீள்குடியேறி வருகின்றார்கள். எனவே அம்மாவட்டத்தில் வட்டாரங்கள் வகுக்கப்படும்போது மக்கள் தொகையின் அடிப்படையிலேயே வகுக்க வேண்டும். வெலி ஓயா போன்ற பல பகுதிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவை தொடர்பாக ஆராயப்படவேண்டும்.
திருமலை மாவட்டத்தினை பொறுத்தவரையில் 1940ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் திருமலை நகரசபையை மாநகர சபையாக தரமுயர்த்தவேண்டும். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையை உப்புவெளி பிரதேச சபையெனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும்.
கந்தளாய் பிரதேசத்திற்கு சதுர்வேதிமங்களம் என்ற பெயர் மாற்றம் மீளவும் வழங்கப்படவேண்டும். அத்துடன் தென்னமரவடி, ஆலங்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழ் பிரதிநிதித்துவங்கள் இழக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. ஆகவே வட்டார எல்லைகள் நிர்ணயம்செய்யப்படும்போது நிலத்தொடரற்ற பிரதேசங்களை ஒன்றிணைப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் நிலவிவரும் பிரச்சினையான தமிழ் பிரிவுக்கான பிரதேச சபை கோரிக்கை காணப்படுகின்றது. கல்முனை தமிழ் பிரிவுக்கு தனிப்பிரதேச சபை உருவாக்கப்பட்டு பிரதேச செயலாளர் உள்வாங்கப்படவேண்டும்.
வீரமுனை வட்டாரம் உருவாக்கப்படுவதோடு நாவிதன்வெளி பிரதேச சபையுடன் சம்மாந்துறை பகுதியில் காணப் படும் தமிழ் பகுதிகள் இணைக்கப் பட வேண்டும்.
அதேபோன்று புத்தளம் மாவட்டத்திலும் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. குறிப்பாக ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபையா னது உடப்பு பிரதேச சபையாக மாற்றப் படவேண்டும் என்றார்.