தமிழின அழிப்பை ஒரு குரலில் முன்னெடுக்கும் சிறிசேன-சுமந்திரன்-சந்திரிகா


“போர்க்குற்ற     விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் எவரும் ஒருபோதும் நியமிக்கப்படவும் மாட்டார்கள் அதற்கென வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகள் எதுவும் பெறப்படவும் மாட்டாது” என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி வானொலிக்கான பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் இது பற்றி பிபிசி வானொலி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு. எம்.ஏ. சுமந்திரனிடம் 26ஆம் தேதி கேள்வி எழுப்பிய போது ஜனாதிபதியின் இவ் அப்பட்டமான அறிவித்தல் பற்றி மௌனம் சாதிக்க முடியாத நிலையில் சுமந்திரன் பின்வருமாறு பதிலளித்தார்.
அப்படி ஜனாதிபதி கூறியது தவறு என்றும் தாம் அதை ஆட்சேபிப்பதாகவும் கூறினார். அப்போது மீண்டும் பிபிசி அவரிடம் பின்வருமாறு கேள்வி கேட்டது. அதாவது வெளிநாட்டு நிபுணர்கள், நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணை என்ற பிரேரணையை ஐநா மனித உரிமை ஆணையத்தில் முன்வைத்தவராகவும், அந்த தீர்மானத்தில் இணைப் பங்காளராகவும் காணப்படும் ஜனாதிபதி அதனை மீறுவது எப்படி நியாயமாகும் என்று கூறியதுடன் ஏன் இப்படி அவர் மாறியுள்ளார் என்று கேட்ட போது சுமந்திரன் பின்வருமாறு பதிலளித்தார்.
அவர் கூறிய அதே வார்த்தைகளின் படி “சில பல அழுத்தங்கள் காரணமாக அவர் அப்படி கூறியிருக்கலாம்” என்று வேலிக்கு ஓணான் சாட்சி போல ஜனாதிபதியை பாதுகாக்க முற்பட்ட சுமந்திரன் தீடீரென விழித்துக் கொண்டு அவர் கூறியவற்றிற்கு நான் சாட்டுப் போக்கு கூற வரவில்லை என்று அதனை மழுப்பினார். அதாவது ஜனாதிபதியை பாதுகாக்க சாட்டுப் போக்கு சொல்லும் மனோநிலையில் பதிலளித்த சுமந்திரன் தனது பதிலால் தான் சிக்குண்டு போய்விட்டேன் என்பதை உணர்ந்த மறுகணமே அதனை சமாளிப்பதற்காக மேற்கண்டவாறு சாட்டுப் போக்கு வார்த்தைகளை தொடர்ந்தார் என்பதே உண்மை.
சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற மனநிலையைக் கொண்டவர்கள் அல்ல என்ற உண்மையை வரலாறு திரும்பத் திரும்ப நிரூபித்து இருக்கிறது. இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும், சுமந்திரனுக்கும் ஊடகங்கள் வாயிலாக திரும்பத் திரும்பப் பலரும் நினைவூட்டி உள்ளனர்.
ஆனால் “கெடுகுடி சொற்கேளாது” என்பது போல கூட்டமைப்பினர் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாய் செயற்பட்டு வருகின்றனர். அல்லது இதில் மேற்படி கூட்டமைப்பினருக்கு வேறுவிதமான நலன்களும் உள்நோக்கங்களும் இருக்க வேண்டும். எது எப்படியோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி இருவிடயங்களையும் அம்பலப்படுத்திவிட்டார்.
முதலாவது எந்தொரு சிங்களத் தலைவனும் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்கத் தயாரில்லை என்பது. இரண்டாவது தமது கபட நாடகத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்தே செயற்படுத்துவது என்பதாகும்.
சர்வதேச விசாரணை என்ற ஆபத்தில் இருந்து சிங்கள அரசை பாதுகாப்பதற்கான ரணில்-சிறிசேனாவின் முயற்சிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அப்பட்டமாக ஒத்துழைத்தது. அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்ற நிலையில் இப்போது கைவிரிக்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது.
இனப்படுகொலைக்கான கொள்கையை வகுத்தோர், அதை திட்டமிட்டோர் என்ற வட்டத்தைச் சார்ந்த சிங்கள அரசியல் தலைவர்களும், உயர் சிவில் அதிகாரிகளும் இராணுவ தலைமைப் பீடத்தினரும் விசாரணையில் இருந்து முற்றிலும் பாதுகாக்கப்பட்டுவிட்டனர். இப்போது உள்நாட்டு விசாரணை என்பது இனப்படுகொலை கொள்கை வகுப்பு நடைமுறைப்படுத்தல் சம்பந்தமான பெருந்தலைவர்கள், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள், சிவில் அதிகாரிகள் என்போரைத் தவிர்த்து இராணுவ நடவடிக்கையின் போது ஏற்பட்ட கொள்கைக் குற்றமல்ல அதை நடைமுறைப்படுத்தலில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தவறு (ழுpநசயவழையெட நுசசழச) என்ற வகையில் சில சிப்பாய்களை அதுவும் கண்துடைப்பாக விசாரிக்கப் போகிறார்கள். இப்படியான திட்டமிடலை ஆரம்பத்திலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ரணில்-சிறிசேன அரசாங்கமும் சேர்ந்து வடிவமைத்தது என்று கருதவே இடமிருக்கிறது.
இருதினங்களுக்கு முன் ( ஜனவரி 27ஆம் தேதி ) சுடர்ஒளி பத்திரிகைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அளித்திருந்த நேர்காணலில் கூறிய கருத்துக்கள் இதனை நிருபிக்கும் தன்மை கொண்டவையாய் உள்ளன. அதாவது..
கேள்வி: நீங்கள் முன்னர் உங்களது காலத்தில் முன்மொழிந்த அதிமேம்பட்ட தீர்வை இப்போது வழங்கப்போவதில்லை என்கிறீர்கள். அப்படியானால் அதிகபட்சத் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடவேண்டுமா?
சந்திரிகாவின் பதில்: அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக தனியான அலகுகள் இருக்குமிடத்தில் அந்தளவு தூரத்திற்கு ( பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பெயரில் முன்மொழியப் பட்ட தீர்வு யோசனை போன்று) பயணிக்க வேண்டியதில்லை எனக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஏனையவர்களும் கூறியிருக்கின்றனர்.
ஜனாதிபதி சிறிசேனாவின் மேற்படி இத்தகைய மோசமான அறிவித்தலைக் கேட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போர்க்கொடி உயர்த்தவில்லை என்பது இதனையே நிரூபிக்கிறது. உண்மையில் கூட்டணி உடனடியாக கொழும்பில் இவ் அறிவிப்புக்கு எதிராக ஒரு நேரடி சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். இனியாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை செய்தாக வேண்டும். தமிழ் மக்களை சிங்களவர்கள் ஏமாற்றுவதைவிட தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றுவது என்பது ஒரு நம்பிக்கை மோசடியாகும்.
இப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் சூத்திரதாரியாக இருக்கும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான வெளிப்படையான இனப்படுகொலை பற்றி மறைக்க முடியாத நிலையில் தற்போது சந்திரிகா பாட்டி வடை சுட்ட கதை சொல்வது போல கதை சொல்லத் தொடங்கியுள்ளார்.
அதாவது சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் நவாலி தேவாலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருந்த நிலையில் விமானம் குண்டுமாரி பொழிந்தது. இதில் நூற்றுக்கணக்கில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியோர், நோயுற்றோர் என பலதரப்பட்ட மக்களும் மாண்டு மடிந்தனர். இந்த விமானக் குண்டுவீச்சுக்காக இராணுவவத்தினர் முன் தான் கோபப்பட்டு கத்திப் பேசியதாக சந்திரிகா இப்போது கதை அளக்கின்றார்.
மேற்படி பத்திரிகைக்கு அளித்த நேர்காணல் பகுதியை நோக்குவோம்.
கேள்வி: 1995ம்ஆண்டு உங்களுடைய ஆட்சிக் காலத்தின் போது நவாலித் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்களுக்கு எப்படியாக பொறுப்புக் கூறப் போகின்றீர்கள்?
சந்திரிகாவின் பதில்: யுத்தத்தின் போது நவாலிச் சம்பவம் மட்டுமன்றி மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றன. யுத்தத்தின் போது நிறைய விடயங்கள் இடம்பெறுவதுண்டு. பதவியிலுள்ள அரசாங்கம் அதற்கான பொறுப்புக்களை ஏற்கவேண்டும். இந்தச் சம்பவம் (நவாலி தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதல்) தொடர்பாக எனக்கு அறியத்தந்த வேளையில் நான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டமொன்றில் பங்குபற்றிக் கொண்டிருந்தேன். உண்மையில் நான் இராணுத் தரப்பினரையும் விமானப் படையினரையும் நோக்கி உரத்துக் கத்தினேன். அது ஒரு தவறு. சிறிய முகாம் போன்று விடுதலைப்புலிகள் ஒன்றுகூடுமிடத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்துவதாக அவர்கள் எண்ணியிருந்தனர். அதற்கருகில் அப்படியொன்று இருந்தது. ஆனால் அவர்கள் தமது இலக்கைத் தவறவிட்டு தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர். அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. என்ன இடம்பெற்றிருந்தாலும் விமானப்படை இராணுவம் அரசாங்கம் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அப்படியென்றால் அந்த விமான குண்டுவீச்சுத் தொடர்பான படையினர் மீது ஏன் அப்போது சந்திரிகா நடவடிக்கை எடுக்கவில்லை? இது அவருடைய பொய் முகத்தை படம் பிடித்துக்காட்டப் போதுமானது.
மேலும் அவரது பின்வரும் பதிலின் மூலம் இதற்கான உள்மன இனவாத நோக்கை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
கேள்வி: கருணா பிள்ளையான் போன்றவர்கள் வெளியில் இருக்கையில் இன்னமும் விடுவிக்கப்படாமலுள்ள அரசியல் கைதிகள் பற்றி?
சந்திரிகாவின் பதில்: கருணா, பிள்ளையானை விடுவித்தது எமது தவறல்ல மஹிந்தவே அதனைச் செய்திருந்தார். குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் சிலர் விடுவிக்கப்படவுள்ளனர். இதனைத் தவிர நூற்றுக்கும் குறைவான இன்னுமொரு தொகுதிக் கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளனர். சாட்சியங்களுடன் நிருபிக்கப்படக்கூடியதாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அந்தக் கைதிகளை விடுவிக்க முடியும் என நான் நினைக்கவில்லை. எந்த வழக்குகளும் இல்லாமல் இருப்பவர்களை விடுவிக்க முடியும். போர்க்குற்றங்களுக்காக இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்களான நீங்கள் கேட்கின்றீர்கள் . அப்படியானால் ஏன் பிரபாகரனின் படையினர் போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்படக் கூடாது எனக் கேட்கின்றேன். மக்களைக் கொன்றமைக்காகவே அவர்கள் சிறைகளில் உள்ளனர். இராணுவத்தினரை மாத்திரம் ஏன் தண்டிக்க வேண்டும். ஏன் பிரபாகரனின் படையினர் தண்டிக்கப்படக் கூடாது.
இதன்படி பார்த்தால் சந்திரிகாவின் காலத்தில் நவாலி தேவாலயத்தின் மீதான குண்டுவீச்சு, நாகர்கோவிலடி பாடசாலையின் மீதான விமான குண்டுவீச்சுப் படுகொலை, 600க்கும் மேற்பட்ட பொதுமக்களை புதைத்துள்ள செம்மணி படுகொலை போல் மக்களைக் கொன்ற சிங்கள இராணுவ குற்றவாளிகள் யாரையாவது சந்திரிகா சிறையிலிட்டிருந்தாரா?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila