ஜெனிவாத் தீர்மானம் என்பதும் அதனை நடைமுறைப்படுத்தும் பொறிமுறை என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக செல்லாக் காசாகி வருகிறது.
இங்கு குறிப்பிடப்படும் தீர்மானமானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதை குறிப்பது.
முதல் மூன்று ஆண்டுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் வகையில் அமெரிக்கா முன்னெடுத்த தீர்மானங்களுக்கும், கடந்தாண்டு அதே அமெரிக்கா முன்னெடுத்த தீர்மானத்துக்குமிடையில் வேறுபாடுண்டு.
முதல் மூன்றும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் அவரது சகோதரர்களையும் இலக்கு வைத்தது. கடந்த வருடத் தீர்மானமானது மகிந்த ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், மைத்திரி – ரணில் அரசின்மீது மென்போக்கு நடவடிக்கைக்காகக் கொண்டுவரப்பட்டது.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமானது, கடந்த வருட தீர்மானத்துக்கு துணைஅனுசரணையாக இலங்கை அரசாங்கமே அமைந்ததுதான்.
போர்க்குற்றத்துக்கான விசாரணைக்கு கலப்பு நீதிப் பொறிமுறையை இந்தத் தீர்மானம் முன்மொழிந்தது. இதனை இலங்கை அரசு பூரணமாக ஏற்றுக் கொண்டதால் தன்னை துணைஅனுசரணையாக்கியது.
கலப்பு நீதிப் பொறிமுறையென்பது இருவகை விளக்கங்களைக் கொண்டது என்பதை இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த வாரமே இப்பத்தியில் சுட்டிக்காட்டி எழுதியது ஞாபகத்தில் உள்ளது.
கலப்பு நீதிப் பொறிமுறையென்று பொதுப்படையாகப் பார்க்கையில் வெளிநாட்டு நீதிபதிகளையும் சட்டநிபுணர்களையும் இணைத்து நடத்தும் விசாரணையென்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
மறுபுறத்தில், வெளிநாட்டுச் சட்டத்துறையினருடன் அவ்வப்போது உரையாடி, கூட்டம் நடத்தி, கலந்து பேசி கருத்துகளை உள்வாங்குவது மட்டுமே என்பது இங்கு மறைபொருளாகவுள்ளது.
இதன் பிரகாரம் ஆழ்ந்து நோக்கின் விசாரணை நடத்துபவர்கள் முழுக்க முழுக்க உள்நாட்டு நீதித்துறையினரேயென்று நன்கு தெரிய வரும். இதனையே இப்போது ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் தத்தமது மொழிநடையில் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லையென்று ஜனாதிபதி ஒரேயடியாக அடித்துக் கூறிவிட்டார்.
இலங்கைப் பிரச்சனை இலங்கையின் சட்டதிட்டங்களுக்கமையவே தீர்க்கப்படும் என்று கூறியுள்ள இவர் உள்நாட்டுப் பிரச்சனையை தீர்ப்பதற்கு வெளிநாட்டின் நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை என்றும் அறிவித்துள்ளார்.
போர்க்கால குற்றங்கள் உள்நாட்டு விசாரணை மூலம் தீர்க்கப்படாத காரணத்தால்தான் ஜெனிவாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதையும், அதன் அடிப்படையிலேயே கலப்பு நீதிப் பொறிமுறை முடிவெடுக்கப்பட்டது என்பதையும், இதனை இலங்கை அரசு ஏற்றே துணைஅனுசரணையானது என்பதையும் ஜனாதிபதி மைத்திரிபால ஒரு வருடத்துள் மறந்து விட்டார் போலும்.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ஜெனிவாவில் ஒற்றைக் காலில் நின்ற இலங்கை அரசு, இப்போது இரண்டு கால்களை நிலத்தில் ஊன்றியவாறு தீர்மானத்தை நடைமுறைப்படுத் அடியோடு மறுக்கிறது.
போர்க்குற்றத்துக்காக எவரையும் தண்டிக்க அனுமதிக்கப் போவதில்லையென்று இவர் அடிக்கடி கூறிவருவதன் அடிப்படை என்னவென்பது புரியாததல்ல.
மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் மைத்திரியும் ஓர் அமைச்சராக இருந்தவர் என்பதால் தனது முன்னாள் தலைவரையும் அவரது சகோதரர்களையும் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இவருக்குண்டு.
இவ்விடயத்தில் மைத்திரிக்கு அனுசரணையாக ரணில் விக்கிரமசிங்க இயங்குவது விசனத்துக்குரியது. உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிப் பொறிமுறை அனுசரiணாயக இருக்குமென்று ரணில் கூறிய செய்தி வெளிவந்த பத்திரிகைகளின் மை காய்வதற்கு முன்னர், வழக்கம்போல ஒரு குத்துக்கரணம் அவர் அடித்துவிட்டார்.
சனல் 4 தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய செவ்வியில் அப்படி எதுவுமே கூறவில்லையென்பது அவருடைய பின்னைய கூற்று. “நாங்கள் ரோம் உடன்படிக்கையில் கையொப்பம் இடவில்லை. எனவே சர்வதேசப் போர்க்குற்ற விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம்” என்பது இவரது வாதம்.
தைப்பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்துக்கு பிரதம அதிதியாகச் சென்றிருந்த ரணில், அந்தத் தமிழர் திருநாளில் தமிழரின் மரண அறிவித்தலை வாசித்தவர். காணாமற் போனவர்கள் மரணமானவர்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்று நிரூபிக்கப்படாத தகவலைப் பொறுப்பற்ற முறையில் தெரிவித்த பிரதமர் இவர்.
வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளக விசாரணையில் அனுமதிப்பதில்லை என்ற முடிவில் தாமும் ஜனாதிபதியும் ஒத்த கருத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இவர்கள் இருவருக்குமிடையில் நீயா நானா என்னும் அரசியல் போட்டி இடம்பெற்று வருவது பகிரங்க ரகசியம். ஆனால் தமிழர்களுக்கு நீதி வழங்க மறுக்கும் விடயத்தில் இவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள்.
வடமாகாண சபைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த அரசாங்கத்தின்மீது தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் உண்மையானவையென்பது இப்போது அனைவராலும் உணர முடிகிறது.
மைத்திரியும் ரணிலும் எடுக்கும் எந்த முடிவையும் சரியெனக் கூறி கருத்து வெளியிடும் அமைச்சர் ஒருவர் உள்ளார். “போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் தலையிட அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது” என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனரட்ண கூறியுள்ளார்.
“இலங்கையைச் சர்வதேசத்திடம் விற்கவோ, எமது இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கவோ இன்றைய அரசு தயாரில்லை என்றும் இவர் கூறியிருப்பதன் அர்த்தம் என்ன?
போர்க்காலக் குற்றங்களை நேர்மையாக இலங்கை விசாரணை நடத்தத் தவறியதால்தான் சர்வதேச உதவியை ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றியது. இதன் அர்த்தம் சர்வதேசத்திடம் இலங்கையை விற்பதன்று.
எவராவது எப்போதாவத தவறு செய்தால் மட்டுமே அவரைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்று சொல்வது பொருத்தமான வாசகம். இராணுவத்தைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்றால் இராணுவம் தவறு செய்தது என்றுதானே அர்த்தம்.
இப்படியாக ஜெனிவா தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசு தாறுமாறான கருத்துகளை வெளியிட்டு வரும் வேளையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அடுத்த மாதம் இலங்கைக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்.
முன்னைய ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்குச் சென்றபோது அவருக்கு வழங்கப்பட்;ட ஷசிங்கள மரியாதை|யே தற்போதைய ஆணையாளருக்கும் வழங்கப்படும் போலத் தெரிகிறது.
இதன் பின்னணியில் மைத்திரி – ரணில் கூட்டிலான நல்லாட்சியே தொழிற்படுவது நன்றாகத் தெரிகிறது.