தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துகின்றார்கள். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிலர் போட்டியிட்டதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்கக் கூடிய நாடாளுமன்ற இருக்கைகள் குறைவடைந்து விட்டன. அல்லாவிட்டால் நாடாளுமன்றத்தில் த.தே.கூட்டமைப் பினரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். பேரம் பேசும் நிலைமை அதிகரித்திருக்கும். இப்பொழுதும் த.தே.கூட்ட மைப்பைக் குறைகூறுவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குறைக்கவே சூழ்ச்சி செய் கின்றனர் என்ற பரப்புரைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் எது? அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பது மட்டும் பலமாகுமா? பேரம் பேசுவதற்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையயன்றால் என்ன அடிப்படையில் அல்லது என்ன உறுதி மொழியில் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தனர். அப்பொழுது அருமையான பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததே. அதை ஏன் தவறவிட்டனர் என்பன போன்ற பல வினாக்கள் விடை கிடைக்காத வினாக்களாகவே உள்ளன. தற் பொழுது கூட மைத்திரி-ரணிலின் கூட்டு ஆட்சிக்கு எந்தவித நிபந்தனைகளுமற்ற ஆதரவை எதிர்க்கட்சி என்ற பெயரில் வழங்கி வருவது ஏன் என்பது விளக்கப்படாமலே உள்ளது. இந் நிலையில் இவற்றைப் பற்றி வினா எழுப்புவோரைப் பார்த்து த.தே. கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கூட்டமைப்பின் பலம் எது?
ஓர் அமைப்பின் பலம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அடங்குவதல்ல. பலம் என்பது இனத்தின் உரிமைகளுக்கான உறுதியான இலட்சியக் கொள்கைகளிலும் அதனை அடைய துணிவுடன் உழைப்பதிலேயே உள்ளது. ஆனால் இங்கே என்ன நிலைமை. தேசியம் என்பதை நிலை நிறுத்த எடுக் கப்படுகின்ற முயற்சிகள் எவை? வரலாற்றுத் தாயகம் தனிப் பண்பாடு, தாய்மொழி இவற்றைக் கொண்டது தானே தேசியம். அத்தனையும் நிறைவாகவுள்ள தமிழினத்தின் மீட்சிக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன முயற்சிகளை மேற்கொண் டுள்ளது? கூறுவதற்கு எதுவுமேயில்லை. அது மட்டுமல்ல த.தே.கூட்டமைப்பு வெறுமனே ஒரு நெல்லிக்காய் மூட்டை போன்றதே. எனது கட்சிதான் பெரிய கட்சி. எனவே எமது கருத்துக்கள் தான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். மற்றவை சிறிய கட்சிகள். எனவே இதனைப் பதிவு செய்து ஒரு கட்சியாக ஆக்கமுடியாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமா? பலவீனமா? என்ற வினா எழுவது இயற்கைதானே. எனவே நாடாளுமன்ற உறுப்பினர் கள் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அவர்கள் தனித் தனிக்கட்சிகளே என்பதன் மூலம் த.தே.கூட்டமைப்பு பலமற்ற ஒரு அமைப்பு என்று தானே பொருள்படும்.
வரலாறு காட்டும் பாடம்
1947 இல் மிகவும் பலமான தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்மக்களின் உரிமைக் கான குரலாக ஒலித்தது. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை மிகப்பெரும் தமிழினத் தலைவராகத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் 1949 இல் தந்தை செல்வா, வன்னியசிங்கம், நாகநாதன் போன்றோர் இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கினர். எவரும் பலம் பொருந்திய காங்கிர சைப் பலவீனமாக்குகின்றீர்களே என்று செல்வாவை பார்த்துக் கேள்வி எழுப்பவில்லை.
ஆனால் மக்கள் 1952 இல் நடந்த தேர்தலிலும் பொன்னம்பலத்தையே தலைவராக ஏற்றுக் கொண்டனர். தந்தை செல்வா, காங்கேசன்துறைத் தொகுதியில் தோல்வியடைந்தார். பின்னர் தமிழர் தாயக மெங்கணும் சென்று கொள்கை விளக்கம் செய்து மக்களை விழிப்படையச் செய்து 1956 முதல் 1976 வரை அக்கட்சியைப் பலமுள்ள ஒரு அரசியல் இயக்கமாக வழிநடத்தினார். இந் நிலையிலேயே 1956 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சில தமிழ்ப் பெரியார்கள் தமிழரசுக் கட்சியையும் காங்கிரஸ் கட்சியை யும் போட்டித் தவிர்ப்புச் செய்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வைக்கவேண்டும் என்று முயற்சித்தனர். இம்முயற்சிக்கும் இரு பகுதியினரையும் அழைத்துப் பேசுவதற்கும் காலஞ்சென்ற தலைமை நீதியரசர் சி.நாகலிங்கம் தலைமை தாங்கினார். ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.
ஏனெனில் ஒற்றுமை என்பதன் அடிப்படை என்பது என்ன? நாடாளுமன்றத்திற்கு யார் யார் செல்வது என்பதற்கான தேர்தல் கூட்டணி ஒற்றுமையா? தமிழ்மக்களின் உரிமைகளை அடைவதற்காக ஒரு கொள்கையை வகுத்து அதற்காகப் பாடுபடுவதற்கான ஒற்றுமையா? என்ற வினா அங்கு தந்தை செல்வா தரப்பால் எழுப்பப்பட்டது. இலட்சியமற்ற, அடிப்படைக் கொள்கைகளற்ற நாடாளுமன்ற இருக்கைகளுக்கான ஒற்றுமை என்றால் அது பலன் தராது என்பது தமிழரசுக் கட்சியின் நிலையாக இருந்தது. அதனால் அன்று இரு கட்சிகளும் தனித்தனியாகவே செயற்பட்டன. தமிழரசுக் கட்சி பெரிய கட்சியாக 1976 வரை இருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றம்
1970 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் ஐக் கிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அம்முன்னணி ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றத்தை அரசியல் அமைப்பு அவையாகக்கொண்டு ஒரு புதிய குடியரசு யாப்பை உருவாக்குவதென தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. அதற்கமைய புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது. அப்பொழுது தமிழ் அரசியல் கட்சிகளை இணைத்து ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதற்குத் தமிழர் கூட்டணி எனப் பெயர் சூட்டினர். அத்தமிழர் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திருந்தாலும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.அருளம்பலம், ஆ.தியாகராசா, வீ.ஆனந்தசங்கரி ஆகிய மூவரும் தமிழர் கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்து ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்தனர். 1972 மே 22 இல் புதிய குடியரசு அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது.
முன்னைய அரசியல் யாப்பில் இருந்த சில சலுகைகள் கூடப் பறிக்கப்பட்டுச் சிங்கள பெளத்த குடியரசாக முழு இலங்கைத்தீவும் கொண்டுவரப்பட்டது. இந்த ஆபத்தைத் தடுப்பதற்காகத் தந்தை செல்வா தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடம் தானே சென்று தமிழ்மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி ஓரணியாகச் செயற்பட வேண்டி அவருக்கு அழைப்பு விடுத்தார். ஜீ.ஜீ.பொன்னம் பலமும் அதனை ஏற்றுக்கொண் டார். அதற்கமையவே 1976 ஆம் ஆண்டு தமிழர் கூட்டணி தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்திய வட் டுக்கோட்டை தீர்மானத்தை நிறை வேற்றியது. 1956 இல் ஏற்படாத ஒற்றுமை 1976 இல் ஏற்பட்டது. த.வி.கூட்டணியின் தலைவர்களாக ஜீ.ஜீ.பொன்னம்பலமும் தந்தை செல்வாவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட னர். (விதிவிலக்குடன் தொண்டை மானும் தலைவரில் ஒருவராகக் கொள்ளப்பட்டார்) இது தேர்தல் கூட்டணி யல்ல.
இது முழுக்க முழுக்கத் தமிழினம் சார்ந்த இலட்சியத்திற்காகக் கொள்கைக்காக உழைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணியாகும். தமிழரசுக் கட்சிதான் பெரிய கூட்டணி. தமக்குக் கூட்டணியில் அதிக உரிமை இருக்கவேண்டும் என்று தந்தை செல்வா என்றும் கூறியதில்லை. உண்மை நிலை என்ன வென்றால் தமிழர் விடுதலைக் கூட் டணியின் தோற்றம் ஒரு புதிய இயக்கத்தின் தோற்றமாகும். அதன் பின்னர் தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்ற சிந்தனை அறவே அற்ற ஓர் அமைப்பாக இயங்கு வதே தந்தை செல்வாவின் நோக்கமாக இருந்தது. ஆனால் இன்று இதற்கு முற்றிலும் எதிரான நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு இருக்கின்றது.
தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சியைத் தொடர்ந்து வைத்திருக்க எடுத்த முனைப்பும் தமிழ்க் காங்கிரஸ் பின்னர் தனித்து இயங்க வழக்காடு மன்றம் வரை சென்றதும் பிந்திய தலைமைகளின் ஒற்றுமையின்மையையே காட்டின. அத்துடன் அன்று செல்வா, ஜீ.ஜீ.ஏற்படுத்திய கூட்டணி இன்று திசைமாறிப் போய் மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது. அத் தமிழர் விடுதலைக் கூட்டணியைக் காப்பாற்றத் தவறியவர்களை அழைத்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தமிழினத் தலைவர் பிரபாகரன் நிறுவினார். 2009 வரை கட்சி வேறுபாடுகளைக் காட்டாமல் இருந்து வந்தவர்கள் பின்னர் முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் பின்னர் கூட்டமைப்பில் தாங்கள் பெரிய கட்சி என்றும் மற்றையவர்கள் சிறிய கட்சியினர் என்றும் கூறித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதியாது காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
தமிழரசு, தமிழ்க்காங்கிரஸ் என்ற வேறுபாடுகளை மறந்து ஒரேயணி யாகத் தமிழரின் விடுதலையையே நோக்காகக் கொண்டு பணியாற்றவே தமிழர் விடுதலைக் கூட்டணி பதிவு செய்யப்பட்டது. அங்கு வேற்று மைகள் மறக்கப்பட்டன. பெரிய கட்சி, சின்ன கட்சி என்ற பாகுபாடு மறக்கப்பட்டது. ஆனால் இங்கு தேர்தல் மாத்திரமே சிந்தனை. கட்சி கள் தங்கள் அடையாளங்களை வைத்துக் கொண்டு கூட்டமைப்பு என்று கூறு வது கொள்கைகளுக்காகவோ இலட்சியத்திற்காகவோ அல்ல.
இந்த வேறுபாடுகள்தான் த.வி.கூட்டமைப்பின் பலவீனம். இந்தப் பலவீனம் தான் தமிழர் விடுதலைக் கூட் டமைப்பை பலமில்லாததாக்குகின்றது இதனைச் சரிசெய்யாமல் வீணாக வெளியே இருந்து யாரோ கூட்ட மைப்பைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக எழுதிப்பேசி மக்களை ஏமாற்றலாம் என்று சிலர் நினைக் கின்றனர்.
வெறுமனே தேசியம் என்பது பெயராக இல்லாமல் அடிப்படை இலட்சியமாகக் கொள்ளப்பட்டு அந்தத் தேசியத்தை நிலை நாட்டத் தாயகம் தேவை என்று வலியுறுத்த ஒரு அமைப்பு இருக்கவேண்டும். அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலட்சியமாக இருந் தால் கட்சிகளைக் கலைத்துவிட்டு ஒரே பெயரில் இயங்கவேண்டும். அதனைப் பதிவு செய்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் வேறு எவரும் த.தே.கூட்டமைப்பைப் பலவீனமடையச் செய்யமுடியாது. எட்ட நிற்பதாகக் கருதப்படுபவர்களும் ஒன் றிணைந்து வர மக்கள் முயற்சிப்பர். ஆனால் செல்வாவால் கட்டி எழுப்பப்பட்ட இலட்சியக் கனவை மறந்து அவரது கொள்கைகளுக்கு முற்றாக எதிரான நிலைப்பாட்டுடன் அரசியல் செய்தால் அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப் படுத்துவதேயன்றி வேறு எதுவும் அதனைப் பலவீனப்படுத்த முடியாது.
வெறும் சொற்களான சாணக்கியம், இராஜதந்திரம் என்பன தொடர்ந்தும் மக்களை ஏமாற்றப் பயன்படா என்பதைப் புரிந்து கொண்டு தமிழினத்திற்காக உழைக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு முன்வராவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னைத் தானே பலவீனப்படுத்துவதை எவரா லும் தடுத்து நிறுத்த முடியாது.