2016ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் உறுதிபடக் கூறியுள்ளார்.
இலங்கை அரசை நம்பி சம்பந்தர் உறுதிபடக் கூறமுடியுமா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
ஆக, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் மட்டுமே இலங்கை அரசு சர்வதேச சமூகத்தை சமாளிக்க முடியும் என்ற அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என சம்பந்தர் நம்பியிருக்கலாம். எதுவாயினும் 2016இல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தருக்கு வழங்கியிருக்கலாம். இந்தச் சந்தர்ப்பம் தமிழ் மக்கள் மீது கொண்ட அனுதாபத்தால் ஏற்பட்டதன்று.
மாறாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தவிர்ப்பதற்காக, பிரதமர் ரணில் மேற்போந்த உறுதிமொழியை சம்பந்தருக்கு வழங்கியிருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணையை தமிழ்த் தரப்பு வலியுறுத்துமாக இருந்தால், நிலைமை சிக்கலாகும் என்ற அடிப்படையில் 2016இல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விடும். சர்வதேச விசாரணை என்பதை வலியுறுத்தாமல் மெளனமாக இருங்கள் என்று பிரதமர் ரணில் கூற, அதனை நம்பிய சம்பந்தர் போனது போகட்டும் நடப்பதைப் பார்க்கலாம் என்று தனக்கு விசுவாசமானவரையும் இரண்டு சிங்களச் சட்டத் தரணிகளையும் ஜெனிவாவுக்கு அனுப்பி விட,
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த தமிழ் மக் களுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பலத்த ஏமாற்றமே கிடைத்தது.
என்ன செய்வது? பிரதமருக்கு ஆதரவான வரை நாங்கள் ஜெனிவாவுக்கு அனுப்பி எங்கள் தலையில் நாங்களே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்ட கவலையால் போர் தந்த இழப்புக்களால் துவண்டுபோன தமிழினம் தன் விதியை நொந்து கொண்டது.
கூடவே, சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் அமெரிக்காவும் ஈழத் தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது. எங்கள் இனத்தின் அரசியல் தலைமையின் பலவீனத்தால் ஏற்பட்ட பெரும் தோல்வியின் மத்தியில்,
சம்பந்தர் ஐயா கூறியபடி 2016இல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற ஊசலாடும் நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழ் மக்களுக்கு எஞ்சியிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, 2016இல் தீர்வு காணப்படும் என்றால் தீர்வு எது? என்ற கேள்வி எழவே செய்யும். இங்குதான் அவர்கள் தருவதை நாம் வாங்கிக் கொள்வது தீர்வா? அல்லது நாங்கள் கேட்பதை அவர்கள் தருவது தீர்வா? என்பது புரியாமலே உள்ளது.
அவர்கள் தருவதை நாங்கள் ஏற்பதாக இருந்தால் எங்களிடம் எந்தத் தீர்வுத்திட்டமும் இருக்கத் தேவையில்லை.
மாறாக நாங்கள் கேட்பதை அவர்கள் தருவதாக இருந்தால் எங்களிடம் தீர்வுத்திட்டம் கட்டாயம் இருக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு விடயங்களில் எது சரியானது என்பதை மக்கள் தீர்மானித்துக் கொள்வதே பொருத்துடையது.