வட மாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 640 பேருக்கான நியமன கடிதங்கள் இன்றையதினம் வழங்கி வைக்க பட்டுள்ளது.
அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிறிது சிறிதாக எமது வடமாகாணம் மலர்ச்சி பெற்று வருகின்றது என்பதற்கு இன்றைய தினம் ஒரு உதாரணம். வெளிப்படைத் தன்மை, தகைமை அடிப்படை, நேர்மையான நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கி எமது மாகாணம் முன்னோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.
வடமாகாணத்திலே வேலையில்லாது இருப்பது எப்பேர்ப்பட்ட சமூகச் சிக்கல்களைத் தருகின்றது என்பதை நான் கூறி எவருந் தெரிய வேண்டியதில்லை. வேலை செய்ய முடியுமான அனைவரும் பொறுப்பான வேலைகளில் அமர்த்தப்பட வேண்டும் என்பது தான் எமது அவா, ஆசை, எதிர்பார்ப்பு. அதனை அவ்வளவு இலேசாக நடைமுறைப்படுத்த முடியாது.
பலர் அரசாங்க வேலை மட்டுமே வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடி வருகின்றனர். அது தவறு. இன்று அரசாங்கம் ஒன்று ஒரு நாட்டில் தனித்து இயங்குவது என்பது கடினமானது. தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் எனப் பலவும் அரசாங்கங்களுக்கு ஒத்திசைவாக நடந்து சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய நிலை வந்துள்ளது.
எனவே எமது இளைஞர் யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க முன்வர வேண்டும். தன்னம்பிக்கையுடன் தொழில் முயற்சியாளராக மாற முன்வர வேண்டும். இன்று பல்துறை வணிகர்களாக, தொழில் விற்பன்னர்களாக, சமூகத்தின் பலம் பொருந்திய பகுதியினராக இருப்பவர்கள் பழைய சிந்தனைகளை விடுத்துப் புதிதாகச் சிந்தித்து முன்னேறியவர்கள் என்பதை நாம் மறத்தலாகாது.
அரசாங்க உத்தியோகத்தர்களாகப் பதவியேற்கும் எங்களிடம் இதைப் பற்றியெல்லாம் ஏன் கூறுகின்றீர்கள் என்று நீங்கள் வியப்படையலாம். நீங்கள் அதிர்ஷ்டம் பெற்றவர்கள். அரசாங்கத்தினால் பொறுப்பேற்று நடத்தப்படப் போகின்றவர்கள்.
உங்களுக்கென்று சில விடயங்களை நான் எடுத்துக் கூறுவேன். சுமார் 40, 50 வருடங்களுக்கு முன் அனைத்து நியமனங்களும் மத்திய அரசினாலேயே வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் வர்த்தமானி மூலமாக விண்ணப்பங்கள் கோரப்படுவன. தகுதியான விண்ணப்பதாரிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைப்பார்கள்.
அதன் பின் போட்டிப் பரீட்சை நடைபெறும். அப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அதில்த்; தேர்வானவர்களுக்கு நியமனத்தைப் பெறுவதற்கான கடிதத்தைப் பெற்றுக் கொள்ளும் படி தகவல் அனுப்பப்படும். நியமனக் கடிதத்தைப் பெறும் வரை எந்த இடத்திற்கு அனுப்பப் போகின்றார்கள் என்ற எந்தத் தகவலும் பெற்றுக் கொள்ள முடியாது.
நியமனக் கடிதம் வழங்கப்பட்டதும் அதில் களுத்துறைக் கச்சேரியில் கடமையைப் பொறுப்பேற்கவும் அல்லது நுவரெலியாவில் உள்ள ஒரு காரியாலயத்தில் பொறுப்பேற்கவும் அல்லது தங்காலைக்கு உடனே வந்து சேரவும் எனக் குறிப்பிட்டு இலங்கை முழுவதிலும் உள்ள பல பகுதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுவன.
அதில் ஒருவர் அல்லது இருவர் வடபகுதியில் உள்ள ஏதாவது ஒரு அலுவலகத்திற்கு தெரிவாகிவிட்டால் அவர்கள் லொத்தர் சீட்டிழுப்பில் ஒரு கோடி ரூபா பரிசு பெற்றதற்கு ஒப்பான சந்தோசத்தில் இருப்பார்கள்.
தேர்வானவர்கள் எந்த மேன்முறையீடும் செய்ய முடியாது அல்லது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியாது. நியமித்த இடங்களுக்குப் போய்ச் சேருவதற்கு இடம், வலங் கூடத் தெரியாத நிலையில் தெரிந்தவர்களின் உதவியுடன் சென்று கடமையைப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. இது தான் அன்றைய நடைமுறை. மத்தியின் செல்வாக்கு மிகப் பலமாகப் பரவியிருந்த காலமது.
பின்னர் தான் மத்தியின் அதிகாரங்களைப் பரவலாக்கஞ் செய்ய வேண்டும் என்ற கருத்து வேரூன்றியது. மாகாணங்கள் மத்தியின் சில கடமைகளைத் தான் எடுத்துச் செய்தது.
உங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு எதுவித கஸ்டமும் இல்லை. வடமாகாணத்தில் இருக்கின்ற ஏதோ ஒரு காரியாலயத்திற்குத் தான் உங்கள் நியமனங்கள் கிடைக்கப் போகின்றன. வட பகுதியில் உள்ள எந்த மூலைமுடுக்காயினும் ஆகக் கூடியது 3-4 மணித்தியாலங்களுக்குள் சென்று விட முடியும். தீவுகளுக்குக் கூட விரைவில் சென்று விடலாம்.
என்னுடைய நீதிமன்றத்தில் அந்தக் காலத்தில் வேலைசெய்த ஒரு சிங்களப் பெண்மணி சுமார் நூறுமைல் தூரத்தைத் தினமும் இரயிலில் கடந்து வந்து வேலை செய்து விட்டு திரும்பவும் அந்த நூறு மைல் திரும்பிச் சென்றமை எனக்கு நினைவுக்கு வருகின்றது. அந்த விதத்தில் உங்கள் வாழ்விடங்களுக்கு அண்மையில் உங்கள் வேலைத் தளங்கள் அமைந்துள்ளன என்பது உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு பேறு.
அப்படியிருந்தும் உங்களில் பலர் அம்மாவுக்குச் சுகம் இல்லை, அப்பா இயலாமல் படுத்திருக்கின்றார், தங்கை சோதனை எடுக்கின்றார் என பல நொண்டிச் சாட்டுக்களுடன் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு அலுவலகத்தில் கடமையாற்ற அனுமதிக்கும் படி மேன்முறையீடு செய்வீர்கள்.
உங்கள் மேன்முறையீட்டுக்கான பதிலை இப்பொழுதே தெரிவித்துவிடுகின்றேன். நியமனங்கள் வழங்கப்படுவது அரச அலுவலகங்களில் உள்ள கடமைகளை முறையாகவும் பொறுப்புடனும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கேயாகும். அதை விடுத்து உங்கள் பிரத்தியேகத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அல்ல என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
அரச அலுவலகங்களில் நியமனங்கள் பெற்றவுடன் தான் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதே நியமனங்கள் ஒரு பிரத்தியேக வங்கியிலோ அல்லது நிறுவனத்திலோ கிடைக்கப் பெற்றால் எந்த வித மறுப்பும் இன்றி உங்கள் கடமைகளை முழு நேரமும் ஓய்வு ஒழிச்சல் இன்றி புரிய வேண்டும். இல்லா விட்டால் அடுத்த நிமிடம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.
அண்மையில் ஒரு வங்கி திறப்பு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். அங்கு கடமையில் புதிதாக இணைந்து கொண்ட ஒரு உத்தியோகத்தரைத் தற்செயலாக எனக்குத் தெரிந்த ஒருவர் சந்திக்க நேர்ந்தது. “கடமைகள் எப்படி போகின்றன?” என அவர் அந்த உத்தியோகத்தரிடம் வினவினார். மிகவுந் துக்கப்பட்டு அவர் கூறினாராம் “காலை 8.30 மணிக்கு வங்கிக்குச் சென்றால் இரவு 9.30 மணி வரையும் கடமையாற்ற வேண்டும். அதன் பின்னர் எனது கணக்கு வழக்குகளை முடித்து வீட்டிற்கு நான் செல்ல இரவு 10.00 மணி ஆகிவிடும்” என்று கூறினாராம். அதிசயப்பட்டார் எனது நண்பர்;. “வேறு வழி இல்லை. சற்றுக் காலத்திற்கு பொறுத்துக் கொள்ளுங்கள். விடிவு கிடைக்கும்” என அமைதிப்படுத்திவிட்டு வந்தார் அவர்.
நீங்கள் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையே கடமை புரியப் போகின்றீர்கள். தற்செயலாகச் சற்று நேரம் தங்கி நின்று வேலை செய்ய நேர்ந்தால் அதற்கு மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவன.
ஆகவே மற்றவர்கள் முன்னர் பட்ட பாட்டையும், தற்பொழுது மற்றைய நிறுவனங்களில் உங்களைப் போன்றவர்கள் படும்பாட்டையும் ஒப்பு நோக்கினால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது உங்களுக்குப் புரிந்து விடும். அந்த அதிர்ஷ்டத்தை அசட்டை செய்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
உங்களுக்கு வழங்கப்பட்ட கடமை நிலையங்களில் உங்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டு மிகவும் வினைத்திறனுடனும் விரைவாகவும் நேர்மையுடனும் உங்கள் கடமைகளை ஆற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
காரியாலயங்களில் வழவழவென்று சக அலுவலர்களுடன், ஊழியர்களுடன் சதா பேசிக் கொண்டிருப்பதைப் பழகிக் கொள்ளாதீர்கள். வேலையில் இருக்கும் போது அரசியல் பேசுவதை ஒரு பழக்கமாக்காதீர்கள். கட்டுப்பாடற்று கடமைகளை மறந்து பணிகளில் ஈடுபடுவதைப் பழகிக் கொள்ளாதீர்கள்.
ஏனெனில் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நிறையத் தேவைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
எங்களை நாடி வருகின்ற பொது மக்கள் மீது எரிந்து விழாது அவர்களைப் பரிவுடன் அணுகி அவர்களின் தேவைகளை நிறைவு செய்யப் பழகுங்கள். சாதி, சமயம் பார்க்கப் போகாதீர்கள். அவர்கள் யாவரும் மனித இனத்தவரே என்பதை மனதில் நிறுத்தி கடமைகளில் ஈடுபடுங்கள். சட்டத்திற்கு அமைவாக வேலை செய்யப் பழகுங்கள். சென்ற காலங்களில் அரசியல் சகல மட்டங்களிலும் அரசோச்சியது. அதை இனியேனும் நிறுத்துவோமாக. அரசியலானது எமது மக்களுக்கு வழங்க வேண்டிய வசதிகளைத் தடைசெய்யாதிருக்க உங்கள் அனைவரதும் அனுசரணையை வேண்டி நிற்கின்றேன்.
கெட்டிக்கார அலுவலர் ஒருவர் அண்மையில் என்னைக் காண வந்தார். அவரைத் தற்போது ஓரம் கட்டியுள்ளோம். அவர் செய்த தவறு என்னவென்றால் எந்தக் கண்ட கண்ட அரசியல்வாதியும் அவரை அணுகி “அது செய், இது செய்” என்று பிழையான நடவடிக்கைகளை அரசியல் காரணங்களுக்காகச் செய்து தாருங்கள் என்று கேட்டால் தனது அறிவையும் அனுபவத்தையும் பாவித்து பிழையான நடவடிக்கைகளைச் சட்டத்திற்கு முரண்படாத முறையில் எவ்வாறு செய்வது என்று அறிந்து அவற்றைச் செய்து கொடுப்பார். அவற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலர். உதாரணத்திற்குத் தகைமை அடிப்படையில் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பதவியை ஒரு அரசியல்வாதியின் தகைமையற்ற அடிவருடிக்குத் தாரை வார்த்துக் கொடுக்க அவர் அடியெடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் சாபமோ என்னவோ தற்போது அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இவ்வாறான தரமற்ற செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். சட்ட திட்டங்களை அறிந்து, அவற்றை மதித்து, மக்கள் நலம் பேணும் விதத்தில் கடமையாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
அப்போது தான் நீங்கள் சிறந்த உத்தியோகத்தர்களாகப் பரிணமிக்க முடியும். நீங்கள் அரச சேவையில் நீடித்திருப்பதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன.
ஆகவே உங்கள் எதிர்காலம் சுபீட்சமானதாகவும் ஒளியுள்ளதுமாக அமைய, மக்களின் நற்கீர்த்தியையும் நல்லெண்ணத்தையும் பெற நீங்கள் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும்.
வடமாகாண நிர்வாகச் சக்கரத்தின் சைக்கிள் கம்பிகள் போன்றவர்கள் நீங்கள். நீங்கள் முறையாகக் கடமையாற்றினால்த்தான் வடமாகாண நிர்வாகம் முழுமையாக முயன்று முன்னேறும். நீங்கள் ஒவ்வொருவரும் அதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் அனைவரும் சிறந்த உத்தியோகத்தர்கள், ஊழியர்களாக எதிர்காலத்தில் மிளிர இச் சந்தர்ப்பத்தில் உங்களை வாழ்த்தி உங்கள் நியமனக்கடிதங்களை இன்று பெற்றுக் கொண்டு உங்கள் உங்கள் கடமை நிலையங்களுக்கு மகிழ்ச்சியுடன் செல்லுங்கள் என தெரிவித்தார்.