தேர்தலில் வாக்களிப்பதோடு எங்கள் கடமை முடிந்து விடுகிறது என்ற நினைப்பை மக்கள் கொண்டி ருப்பதால்தான் மக்கள் பிரதிநிதிகள் தமக்கு வாக்களித்த மக்களை மறந்து விடுகின்றனர்.
வாக்களிப்பது மட்டுமே எங்கள் உரிமை என்பதாக நிலைமை இருந்தால், இந்த யுகத்தில் தமிழினம் விமோசனம் பெறமுடியாது.
எனவே நாங்கள் வாக்களித்த பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? அவர்களின் பணி என்ன? தேர்தலில் வெற்றியடைந்த பின்பு எத்தனை தடவைகள் மக் களைச் சந்திக்க இவர்கள் வருகின்றனர் போன்ற விடயங்களைக் கவனிப்பதுடன் பாராளுமன்றத்தில்; மாகாண சபையில் இந்த உறுப்பினர்கள் எந்தளவு தூரம் நாகரிகமாக நடந்து கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எது செய்தாலும் அது சரி என்றோ; இவர்கள் தொடர்பில் ஊடகங்கள் தெரிவிப்பவைதான் உண்மையானவை என்றோ மக்கள் நினைத்தால், அது மிகப்பெரும் கேட்டைத் தரும். எனவே தங்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டை மக்கள் நேரடியாக அவதானிக்க வேண்டும்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் தங்கள் பிரதிநிதிகளை சந்தித்து மக்கள் முறையிட முடியுமா? அதற்கான ஏற்பாடுகள் உண்டா? என்பன பற்றியும் மக்கள் அறிவது மிகமிகக் கட்டாயமானதாகும்.
இதற்கு மேலாக ஊடகங்களில் வருகின்ற செய்திகள், கட்டுரைகள் தொடர்பில் மக்கள் மெய்ப்பொருள் காணவேண்டும்.
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார் வள்ளுவர்.
ஆக, பக்கச்சார்புடைய ஊடகங்கள் பலதையும் கூறிக்கொள்ளும். அதுபற்றி மக்கள் அலட்டிக் கொள்ளாமல் எது உண்மை ; எது பொய்; எது கற்பனை என்பவற்றை கண்டறியும் போது ஊடகங்களும் நிச்சயம் நடுவுநிலைத்தன்மைக்கு வந்தாக வேண்டும்.
ஆகையால் அனைத்து செம்மைக்கும் அடிப்படை மக்கள் விழிப்பாக இருப்பதுதான். மக்களை விழிப்பு நிலையில் வைத்திருப்பதற்கு மக்கள்அமைப்புகள் கடுமையாகப் பாடுபடவேண்டும்.
நேற்றையதினம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தன்னை மிகமோசமான வார்த்தைப் பிர யோகங்களால் திட்டினார் என்று மிகுந்த கவலையுடன் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, போரின் இறுதியில் படையினரால் கூட்டிச் செல்லப்பட்டு காணாமல் போன ஒரு போராளியின் மனைவிக்கு இதுவே கதி என்றால், அதிலும் மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவரே அவரைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டினார் எனில், இவர்களின் பதவி எதற்கானது? இவர்களால் மக்களுக்கு ஏற்படக் கூடிய நன்மை என்ன? என்பது பற்றி அரசியல் தலை மைகள் சிந்திக்கவும் பெண்கள் அமைப்புகள் கவனம் செலுத்தவும் தயாராக வேண்டும்.
கூடவே ஊடகங்கள் யார் பக்கமும் சாராமல், காணாமல்போன ஒரு போராளியின் மனைவியை -வடக்கு மாகாண சபையின் உறுப்பினரை, இன்னொரு உறுப்பினர் தகாத வார்த்தையால் திட்டினாரா? என்பதை இருதரப்பிடமும் கேட்டறிந்து அவற்றை வெளிப்படுத்த வேண்டும். இதைப் பக்கச் சார்பற்று நீதியோடும் நடுநிலையோடு செய்வது கட்டாயமானதாகும்.
இவற்றுக்கும் மேலாக, தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றி சிந்திக்கவேண்டியவர்கள் தமிழ் மக்களே அன்றி வேறு யாருமிலர்.
ஆக, எச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடன் தொடர்புபட்ட அனைத்துத் தளங்களிலும் விழிப்பாக இருப்பதென்பது அவசியமாகும். அப்போது தான் மக்கள் பிரதிநிதிகள் தமக்குரிய கடமைகளை-பொறுப்புக்களை உணர்ந்து அதற்கு ஏற்றால்போல் செயற்படுவர்.