கொழும்பை அச்சுறுத்தியுள்ள மண்ணெண்ணை... நேரடி ரிப்போர்ட்!

இயற்கையானது மனித செயற்பாடுகள் மற்றும் இயற்கையின் கோரம் ஆகிய இரு வழிகளிலும் சமீப காலமாக பல அழிவுகளை சந்தித்து வருகின்றது. 
இந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் இன்று பாரிய அச்சுறுத்தலொன்றை எதிர்நோக்கியுள்ளனர்.

இலங்கைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்படுகின்ற எரிபொருள் கடலிலிருந்து குழாய் மூலம் முத்துராஜவல எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
பெற்றோல், டீசல், எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல எரிவாயுக்கள் குழாய் மூலம் முத்துராஜவல எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பரிமாற்றப்படுகின்றன.
இந்த குழாயானது கடல் மற்றும் கலப்பு மார்க்கமாக பொருத்தப்பட்டு, முத்துராஜவல எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எரிபொருள் அனுப்பி வைக்கப்படுகின்றது.
இந்த பின்னணியில், திக்கோவிட்ட - லுணாவ கலப்பு பகுதியில் கடந்த 31ம் திகதி மண்ணெண்ணை குழாயில் கசிவு ஏற்பட்டு பெருமளவான எரிபொருள் வெளியேறியிருந்தது.
இவ்வாறு வெளியேறிய எரிபொருள் நீருடன் கலந்துள்ளமையை அங்கு சென்ற எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
கடந்த ஆறு தினங்களில் சுமார் 52800 லீட்டர் மண்ணெண்ணைய் கசிந்துள்ளதாக கரையோர பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கசிவு ஏற்பட்டு ஆறு தினங்களின் பின்னர் இந்த குழாய் இன்று திருத்தப்பட்டுள்ள போதிலும், எண்ணெய் கசிவால் அந்த பகுதி வாழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிப்பொருள் நீருடன் கலந்துள்ளமையினால், அந்த நீரை பயன்படுத்தும் தமக்கு இன்று தோல் நோய்களும் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி வாழ் மக்கள் எம்மிடம் கூறினர்.
அத்துடன், இந்த எரிபொருள் கசிவினால் தமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியிலுள்ள மீனவர்கள் லங்காசிறியிடம் குறிப்பிட்டனர்.
இவ்வாறான பின்னணியிலேயே இந்த குழாய் திருத்தப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆறு வருடங்களுக்கு முன்பாகவே குறித்த குழாய் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழாய் அமைக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக இந்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கரையோர பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.
இருந்த போதிலும், குறித்த பகுதியில் எரிவாயு குழாய் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதேச மக்கள், அந்த குழாய் வெடித்திருக்கும் பட்சத்தில் பாரிய அழிவொன்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டனர்.
அத்துடன், அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, கூட்டுறவு விற்பனை நிலையங்களில் சில பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கடிதமொன்றை வழங்கியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
எனினும், தமக்கு அது போதுமானதாக இல்லை எனவும், அரசாங்கம் தம்மை ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, மக்கள் கூறிய விடயங்கள் தொடர்பில் மேலும் விரிவாக ஆராயும் முகமாக லங்காசிறி குழுவினர் கரையோர பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் கலப்புக்குள் படகில் பயணித்தனர்.
எரிபொருள் கசிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை உறுதி செய்யும் வகையிலான பல சான்றுகளை நீரில் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila