தினையளவேனும் தீங்கு இழைத்திடாதீர்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அன்பு வணக்கம். பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவது பற்றி அறிந்தோம்; நன்று. மகிந்த ராஜபக்­ ஜனாதிபதியாக இருந்த போது தெரிவுக்குழு என்ற அமைப்பை உருவாக்கி அதில் தங்களைக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.  

எனினும் தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதற்கு தாங்கள் உடன்படவில்லை. அதில் நியாயங்களும் உண்டு. அப்போது அமைச்சராக இருந்த ராஜித சேனாரட்ன, “நான் உத்தரவாதம் அளிக்கிறேன் நீங்கள் தெரிவுக் குழுவுக்கு வாருங்கள்”என்று கூட் டமைப்பினராகிய உங்களை அழைத்திருந்தார். எனினும் அதே ராஜித சேனாரட்ன, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வருவதற்காக அரும் பாடுபட்டார்.  
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மீது அவருக்கு ஏற்பட்ட வெறுப்பே அவர் மைத்திரியு டன் இணைந்து போவதற்குக் காரணமாயிற்று.

எனவே புதிய ஆட்சியில் நல்லாட்சி நடக்கிறதோ? இல்லையோ? தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள் இருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதன் பின்னணி, தமிழ் மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டம் என்பது மறுக்கமுடியாத காரணமாகும். 

முப்பது ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தை உலக நாடுகளின் உதவியுடன் மகிந்த அரசு முடிவு றுத்தினாலும், யுத்தத்தின்போது உலக நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை நிறைவேற்றத் தவறியமையும் மகிந்த செய்த மகா தவறு.

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த பேரவலம் தமிழின அழிப்பாகவே பார்க்கப்பட்டது. இத்தகையதோர் நிலையில் மகிந்த ராஜபக்ச­ தரப்பின் மீதும் படைத் தரப்பு மீதும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்மொழியப்பட்ட போது, 
சிங்களத் தலைவர்களும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் சேர்ந்து ஒரு திட்டத்தை தயாரித்தன.
 
அத்திட்டம் மகிந்த ராஜபக்­ச­வை ஆட்சியில் இருந்து இறக்குவது; புதிய ஆட்சியை நல்லாட்சியாக அமைப்பது; தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பதாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது டன் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவை வழங்கினர்.

ஆக, மகிந்தவை ஆட்சியில் இருந்து விலக்கிய தமிழ் மக்களுக்கு ஆட்சித் தலைவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லதோர் தீர்வை பெற்றுக் கொடுப்பது கட்டாயமானதாகும். 

இவ்விடயத்தில் இலங்கை அரசு தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க வருகிறது என்பதற்குப் பின்னால், எங்கள் இளம் பிள்ளைகளின் உயிர்த்தி யாகங்களும் தமிழ் மக்களின் அர்ப்பணிப்பும் உள்ளது என்பதை மறந்துவிடலாகாது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை அரசு முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்ற பிரமை ஏதேனும் உங்களிடம் இருக்குமாயின் முதலில் அதனை அடியோடு துரத்தி விடுங்கள்.
ஏனெனில் மேற்குறித்த பிரமை தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு பாதகமாக அமையும். ஆக, அன்புக்குரிய கூட்டமைப்பின் தலைவர்களே! எங்கள் மக்களின் இழப்புக்களை, துயரங்களை,

தியாகங்களை மறந்து அவர்கள் தருகின்ற தீர்வே தீர்வு என்றிராமல் எங்கள் இனத்தின் சுதந்திரமான-நிம்மதியான வாழ்வுக்கும் இனப்பிரச்சினை என்று இனி எக்காலத்திலும் உச்சரிக்கப்படாமலும் இருக்கக் கூடியதான தீர்வுத் திட்டத்தையே நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதைவிடுத்து அவர்கள் தருவதை நீங்கள் வாங்கினால் அது தமிழ் மக்களுக்கு இழைக்கும் மகா துரோகமாகும். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila