கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்? – யதீந்திரா

sampanthan-hakeemஇந்த ஆண்டு இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அதில் முதன்மையானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. இந்த தீர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பான தகவல்கள் ஆங்காங்கே தெற்கின் அரசில் தலைவர்களின் கருத்துக்களிலிருந்து ஊகிக்கப்படுகிறது. அவ்வாறான கருத்துக்களிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்வைக்கப்படவுள்ள அல்லது கிடைக்கவுள்ள அரசியல் தீர்வு இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ்தான் நிகழவுள்ளது. இதற்கான ஒரு வகை மாதிரியாகவே தாம் ஒஸ்ரியன் அரசியல் யாப்பை கருத்தில் கொள்வதாக அண்மையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். தற்போது புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களின் கருத்தறியும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க குழு ஒன்றையும் (Constitutional Reforms Committee Calls For Public Opinion) நியமித்திருக்கின்றார். அது 24 பேர்களை உள்ளடக்கியிருக்கிறது.

இவ்வாறு பல விடயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற போதிலும் கூட, இவை தொடர்பில் மக்களுக்கு அறிவூட்ட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அசைவற்றிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இது தொடர்பில் ஒரு சில விவாதங்கள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. ஆனால் கிழக்கில் இது தொடர்பில் எவ்வித அசைவும் தெரியவில்லை. கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களும் இது தொடர்பில் கரிசனை காண்பித்ததாக தெரியவில்லை. கிழக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள், புத்திஜீவிகள் என்போரும் இதன் ஆபத்தை உணர்ந்திருப்பதாக தெரியவில்லை.
தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டப்பட்ட ஒரு சில நம்பிக்கைகள் இருக்கின்றன. அந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இதுவரை தமிழ் மக்களின் சார்பிலான அரசியல் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் கூட, அது போன்றதொரு நம்பிக்கையை முதலீடாகக் கொண்டுதான் கூட்டமைப்பு மக்களின் ஆதரவை பெற்றிருந்தது. கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலான அரசியல் வரலாற்றை பகிர்ந்துகொண்ட தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் நான் மேலே குறிப்பிட்ட, ஊட்டப்பட்ட நம்பிக்கையை முதலீடாகக் கொண்டு இயங்கிய அனுபவத்தை கொண்டவர்களே.
ஓர் உயர்ந்த இலக்கை கொண்டிருப்பது தவறான விடயமென்று எவரும் கூற முடியாது. ஆனால் ஒன்றை முன்வைத்துவிட்டோம் என்பதற்காக மாற்று வழிமுறைகள் குறித்து சிந்திக்காமல் இருப்பதும் தவறாகும். ஏனெனில் ஜனநாயக முறைமை என்பது முற்றிலுமான சர்வலோக நிவாரணியல்ல. அது ஓர் உயர்ந்த இலக்கை நோக்கிய பயணம். பயணத்தின் போது பல இடங்களில் தங்கித்தான் செல்ல வேண்டியேற்படும். ஜனநாயக முறைமையின் வெற்றியென்பது குறிப்பிட்ட நாட்டின் வாழும் மக்களின் பண்புமாற்றம், கடந்தகால தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும் மனோபாவம் போன்றவற்றில் தங்கியிருக்கிறது. இவையெல்லாம் சரியாக இருந்தாலும் கூட குறிப்பிட்ட நாடு அமைந்திருக்கும் பூகோள அமைவிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு நாட்டின் உள்ளக நிலைமைகளை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றது. இவற்றை அனுசரித்து செல்ல வேண்டிய நிர்பந்தத்தையும் புறக்கணிக்க முடியாது.
எனவே அடிப்படையில், ஜனநாயக வழிமுறை என்பது அனுபவங்கள், பின்னர் தவறுகள், அதன் பின்னர் அதிலிருந்து கற்றுக் கொள்ளும் அனுபவங்கள் என்பதாகவே நகரும். இன்று உலகளவில் ஜனநாயகத்தின் வகைமாதிரியாக திகழும் அமெரிக்காவின் ஜனநாயகம் தொடர்பில் கூட பலவாறான விவாதங்கள் உண்டு. அமெரிக்க ஜனநாயகத்தைக் கூட குழந்தைப்பருவத்தில் இருப்பதாக கூறும் அமெரிக்க அறிஞர்களும் இல்லாமலில்லை. இவ்வாறானதொரு யதார்த்தத்தை கருத்தில் கொண்டுதான், தற்போது நடைபெறவுள்ள நிகழ்வுகளையும் நாம் உற்று நோக்க வேண்டியிருக்கிறது.
இன்று நடைபெறும் தமிழ் அரசியல் விவாதங்களில் கிழக்கு பெருமளவிற்கு கருத்தில் கொள்ளப்படவில்லை. வரவிருக்கும் புதிய அரசியல் யாப்பு எவ்வாறானதொரு அதிகாரப்பகிர்வு முறைமையை உள்ளடக்கியிருக்கப் போகிறது என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. ஆனால் தெற்கில் இடம்பெறும் விவாதங்களை உற்று நோக்கினால், அதிகாரப்பகிர்வு முறைமையானது ஒற்றையாட்சியின் கீழ்தான் இடம்பெறப் போகிறது. ஏனெனில் இந்த ஒற்றையாட்சியே தங்களின் பாதுகாப்பு என்று சிங்கள சமூகம் கருதுகிறது.
எனவே ரணிலோ, மைத்திரியோ, சந்திரிக்காவோ இந்த விடயத்தை தளர்த்தும் விசப்பரீட்சையில் இறங்கப் போவதில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் எவ்வாறான பரிந்துரைகளை தமிழர் தரப்பு முன்வைக்கப் போகிறது? அவ்வாறு முன்வைக்கப்படும் பரிந்துரைகளில் ஒன்று இல்லாவிட்டால் அதற்கு மாற்று என்ன என்பதை எவ்வாறு முன்வைக்கப் போகிறது என்றவாறான கேள்விகள் எழுகின்றன. இதற்கு இதுவரை தமிழ்ச் சூழலில் பதில் இல்லை. இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள் சார்பில் தாம் ஓர் அரசியல் தீர்வு யோசனையை முன்வைக்கப்போவதாக புதிதாக தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேரவை கூறகிறது. அது ஒரு நல்ல முயற்சி. ஆனால் அங்கும் மாற்று யோசனை இருக்குமா? ஏனெனில் தமிழர் பேரவை ஓர் அரசியல் வரைவை செய்து கூட்டமைப்பிடமோ அல்லது அரசாங்கத்திடம்தான் கொடுக்கப் போகிறது. இதேபோன்று முஸ்லிம்கள் மத்தியிலிருந்தும் வரைவுகள் முன்வைக்கப்படும். இவ்வாறான சூழலில், ‘அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்னும் வாதத்தை முன்வைக்க முடியுமா? அவ்வாறு முன்வைப்பதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மை என்ன? இப்படியான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.
உதாரணமாக, வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்கள் சார்பான அடிப்படையான அரசில் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் இதிலுள்ள நடைமுறைப் பிரச்சினைகள் நோக்கப்பட வேண்டும். தெற்கின் விவாதங்களை உற்று நோக்கினால், வடக்கு – கிழக்கை ஓர் அலகாகக் கொண்டு அரசியல் தீர்வொன்றை முன்வைக்கக்கூடிய சூழல் இல்லை. ஏனெனில் இந்த விடயம் கொழும்பு சார்ந்ததாக அல்லாமல், கிழக்கின் பிறிதொரு சமூகம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஏனெனில் கிழக்கு ஒரு தனி மாகாணமாக நிர்வகிக்கப்படுவதால் நன்மை அடைந்தவர்கள் முஸ்லிம் சமூகத்தினரேயாகும். எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு அவ்வளவு எளிதாக இணங்கப் போவதில்லை. அவ்வாறு இணங்க வேண்டுமாயின் தங்களின் பாதுகாப்பு என்ன என்னும் கேள்வியே அவர்கள் பக்கத்தில் இருந்து எழும். எனவே இப்பொழுது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது அரசாங்கத்தின் பொறுப்பிலிருந்து விலகி, பிறிதொரு சமூகமான முஸ்லிம்களின் பிரச்சினையாக உருமாறுகிறது.
கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்?
இந்த இடத்தில் கிழக்கிலிருந்து எழவேண்டிய குரல், வடக்கு கிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு என்ன? கிழக்கின் சிவில் சமூகமும் புத்திஜீவிகளும் இவ்வாறானதொரு கேள்வியிலிருந்தே சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் வடக்கு – கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு என்னும் சுலோகத்தை தொடர்ந்து காவிக் கொண்டிருப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை கையாள முடியாது. அது நிகழாவிட்டால் மாற்று ஏற்பாடு என்ன என்பதைத்தான் தமிழர் தரப்பு சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த விடயத்தில் அதிக பொறுப்புள்ள கிழக்கின் மூத்த தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கிறார். அவர் பல விடயங்களில் மௌனமாக இருப்பதன் காரணமாகவே இப்பத்தியும் அவர் மீது விமர்சனங்களை முன்வைக்க முயல்கிறது.
கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைத்து வருகின்றனர். பதினொரு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு, ஏழு உறுப்பினர்களை வைத்திருக்கும் முஸ்லிம் காங்கிரசுடன் பேரம் பேசி, முதலமைச்சர் பதவியை தக்கவைப்பதில் தோல்வியடைந்தது. இதற்கு ஒரு சப்பைக்கட்டு காரணமாக, வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு இது உதவும் என்றும் கூறிக் கொண்டது. உண்மையில் இதற்கும் வடக்கு – கிழக்கு இணைப்பிற்கும் ஒரு தொடர்பும் இல்லை. உண்மையில் இது தமிழர் தரப்பின் ஒரு பலவீனத்துடனும், முஸ்லிம் காங்கிரசின் ஒரு தந்திரோபாயத்துடனும் தொடர்புபட்டிருந்தது. அதாவது, அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த தயா கமகே, தனக்கு முதலமைச்சர் பதவியை தருவதற்கு இணங்கினால், ஆட்சியமைப்பதற்குரிய ஆதரவை தன்னால் திரட்டமுடியும் என்னும் திட்டமொன்றுடன் கூட்டமைப்பை அணுகியிருந்தார். அதேவேளை, மூன்று மாதங்களின் பின்னர் அதனை கூட்டமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு, தான் வெளியேறிவிடுவதாகவும் கூறியிருந்தார்.
இது தொடர்பில் பலசுற்று பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. இதில் கலந்து கொண்ட அனுபவம் இந்த பத்தியாளருக்கும் உண்டு. ஆனால் ஒரு சிங்களவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, சம்பந்தனும், அப்போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும், தற்போது கிழக்கு மாகாண சபையில் கல்வி அமைச்சராகவும் இருக்கின்ற தண்டாயுபாணியும் எதிர்த்திருந்தனர். கூட்டமைப்பின் ஏனைய கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அதில் உடன்பாடு இருந்தாலும் கூட, அதற்காக அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியாமல் இருந்தது. இந்த விடயத்தையே முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய பலமாக்கிக் கொண்டது.
கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிங்கள உறுப்பினர்களுடன் இணைந்து ஆட்சியமைக்கும் தந்திரோபாயம் தமிழர்களுக்குத் தெரியாது என்பதைக் விளங்கிக்கொண்டே, முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் விடாப்பிடியாக இருந்தது. இறுதியில் முஸ்லிம் காங்கிரசே வென்றது. பதினொரு உறுப்பினர்களை வைத்திருந்தும் கூட, கூட்டமைப்பால் பேரம்பேசல் அரசியலை சரியாக கையாள முடியவில்லை. தந்திரோபாய ரீதியில் எங்களாலும் முடியும் என்பதை காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாககூட இதனை தமிழரசு கட்சி பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதனை செய்யும் வல்லமை இன்மையால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. ஆனால் அன்று ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிங்களவருடன் இணைய முடியாது என்று வாதிட்டவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிச் செயற்படுகின்றனர். கிழக்கு மாகாண சபையில் தவறாக தெரிந்த ஒரு விடயம், தேசிய அரங்கில் எவ்வாறு சரியாக தெரிகிறது?
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தில் முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்பு சார்ந்து சிந்திப்பது எந்தவகையிலும் தவறானதல்ல. அதேபோன்று வடக்கு – கிழக்கு இணைக்கப்படாவிட்டால், கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு என்ன என்னும் கேள்வியை எழுப்ப வேண்டியதும் தமிழர் தரப்பில் தவிர்த்துச் செல்லவே முடியாத விடயமாகும். இது தொடர்பில் வடக்கிலிருக்கும் தலைவர்கள் அக்கறை காட்டாது விட்டால் அதனை ஒரு தவறாகவும் கொள்ள முடியாது. ஏனெனில் கிழக்கின் சிக்கலான பிரச்சினைகளை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கலாம்.
ஒரு புதிய அரசியல் யாப்பு வரவிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனை தனித்துவமானதும் சிக்கலானதும் என்னும் விடயம் வெளிக்கொணரப்படாது போகுமானால், அது கிழக்கின் எதிர்கால தமிழ் தலைமுறையினருக்கு செய்கின்ற அநியாயமாகவே அமையும்.
நன்றி : பொங்குதமிழ்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila