உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. வடபுலத்தின் பெறுபேறுகள் திருப்தியாக அமை ந்துள்ளன என்பது பொதுக்கருத்து. உரிய பகுப்பாய்வுகள் செய்யும் போதே பெறுபேற்றின் தன்மையை மதிப் பிட முடியும். எனினும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்ற மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர் களின் எதிர்காலம் குறித்துக் கவனம் செலுத்துவது மிகமிக அவசியமாகும்.
பொதுவில் இலங்கையின் கல்வி முறைமையானது அரச உத்தியோகத்தை எதிர்பார்த்தது என்ற குற் றச்சாட்டுக்கள் தாராளமாக உள்ளன.
சமகாலக் கல்வி முறை; சுயதொழில் முயற்சிகள், கம்பனிக் கட்டமைப்புகள், உற்பத்தி தொழில் முயற்சிகள் உள்ளிட்ட துறைகளுக்கு ஆளணியைத் தரவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத, ஆனால் பரீட் சையில் சித்தியடைந்த - சித்தியடையாத ஏகப்பட்ட மாணவர்களுக்கு உரிய வழிகாட்டல்கள் வழங்கப்ப டாத பட்சத்தில், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாக இருக்கும் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
பொதுவில் க.பொ.த உயர்தரத்தில் சித்தி; பல்கலைக்கழக அனுமதி; பட்டத்தை நிறைவு செய்தல்; வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் அங்கத்துவம் பெறுதல்; போராட்டங்களை நடத்தி அரச உத்தியோக ங்கள் பெறுதல் என்ற செயல் ஒழுங்கில் எங்கள் இளைஞர்களின் ஆற்றல்கள் - ஆளுமைகள் - செயற் திறன்கள் பாழாகிப் போகின்றன.
அரச சேவை என்பதை கடந்து புதிய தொழில் துறைகளில் துணிவோடு இறங்கி சாதனை படைக்க நினைக்கின்ற தற்துணிவையும் ஆற்றலையும் உரு வாக்குகின்ற கட்டமைப்புகள் எங்கள் மண்ணில் தேவைப்படுகின்றன.
எங்கள் வடபுலத்தை எடுத்து நோக்குகின்ற போது எத்தனையோ தொழில்துறைகளில் வேலைவாய்ப்புகள் இருந்த போதிலும் தொழில்துறைசார் அறிவுடையவர்கள் எங்களிடம் இல்லை என்ற குற்றச்சாட்டை சாதாரணமாக எவரும் கருதி விடலாகாது.
ஏ9 பாதைதிறக்கப்பட்டதைத் தொடர்ந்து எங்கள் மண்ணில் ஏற்பட்ட வேலைவாய்ப்புக்களுக்காக தென்பகுதியில் இருந்து மனித வளத்தை வரவழைக்க வேண்டிய நிலைமை இருக்கின்றது. இத்தகைய நிலைமைகள் தொடர்பில் யார் கவலை கொண்டாலும் அது அர்த்தமற்றது.
ஏனெனில் எங்களிடம் இருக்கக்கூடிய உழைக்கும் வர்க்கத்திற்கு நாங்கள் உரிய தொழில்சார் அறிவை வழங்கத் தவறிவிட்டோம்.
எனவே இத்தகைய தவறுகளைத் தொடர்ந்தும் விடாமல் எங்கள் மாணவர்கள், இளைஞர்களின் வாண்மையை விருத்தி செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது அவசியம்.
இதுதவிர, தொழில்சார் பயிற்சிகளை வழங்கக் கூடிய அமைப்புகள் வடபுலத்தில் இயங்குகின்ற போதிலும் அதன்மூலம் பயன்பெறுவதில் இளைஞர்களிடம் ஆர்வமும் அக்கறையும் இல்லாத சூழ்நிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
எனவே க.பொ.த உயர்தர பரீட்சைக்கு பின்பான- எங்கள் பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள், தொடர் கல்விக்கான சந்தர்ப்பங்கள் குறித்து கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும்.
தொழிற்படை என்ற வகுதிக்குள் அடங்கக்கூடிய மனிதவளம் கவனிப்பின்றி விடப்படுமாக இருந்தால், அது எங்கள் பண்பாட்டு கலாசாரங்களில் கடும் எதிர்த் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உணரப்பட வேண்டும்.