வடக்கில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடமாகாணசபையினை புறந்தள்ளி மத்திய அரசு தனது அதிகாரங்களை செலுத்தும் நடவடிக்கைகளிற்கு எதிராக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இலங்கை மத்திய அரசு மற்றும் அமைச்சுக்கள் தன்னிச்சையாக மாவட்ட செயலகங்கள்,பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அமைப்புக்களின் ஊடாக இத்தகைய பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு வடமாகாண முதலமைச்சர் கடிதமனுப்பியுள்ளார்.
எனினும் அதற்கு பதிலனுப்பியுள்ள ஜனாதிபதியின் செயலாளர் இம்முயற்சிகளிற்கு ஒத்துழைக்க வட மாகாணசபையினை கோரியுள்ளார்.
இதே கருத்தை ஏனைய மாகாணசபைகளும் கொண்டுள்ள நிலையினில் அவ்வாறு தன்னிச்சையாக வடமாகாணசபையின் சம்மதமின்றி முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற வேலை திட்டங்கள் தொடர்பில் விபரங்களை திரட்ட பணித்துள்ளதுடன் இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் பேசப்போவதாகவும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வட மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது, வறுமை கூடிய மாகாணமாக உள்ளது. வறுமையைத் தணித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய தார்மீக கடப்பாடு எம் அனைவரையும் சார்ந்ததாகுமெனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.