நாங்கள் நினைவுகூரத் தடையென்றால் நீங்கள் நினைவுகூருவது நியாயமா?

இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுப்பதற்காகவே புதிய அரசியலமைப்பை கொண்டுவர முற்படுவராயின், மாவீரர்களை நினைவுகூரவும் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கவும் அனுமதிக்க வேண்டும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவினரின் பணிகள் நடந்த வண்ணம் உள்ளன.
எதிர்பார்த்தளவில் கருத்தறிதல் என்ற நிகழ்ச்சித் திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக இல்லையாயினும் பொது அமைப்புக்கள், மதத்தலைவர்கள், சமூகப்பிரதிநிதிகள் என்போர் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதில் கருத்துக்களை முன்வைக்கும் பொதுமக்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
பொதுவில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை. இந்த மண்ணில் வாழ்ந்து மரணித்துப் போனவர்களை நினைவுகூருவதும் அவர்களின் அந்திமச் சடங்குகளை செய்வதும் என்ற விடயங்கள் மிகவும் முக்கியமானவை.
நினைவுகூருவதன் மூலம் ஒருவகையான ஆற்றுப்படுத்தல் நடந்தேறுகின்றது. இது வாழ்கின்ற மக்களுக்கு மிகவும் அவசியமானது.
எனினும் இந்த மண்ணில் நடந்த விடுதலைப் போராட்டத்தில் மரணித்துப்போன மாவீரர்களை நினைவுகூருவதற்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
அரசின் பார்வையில் மாவீரர்கள் இந்த நாட் டுக்கு எதிரானவர்கள்; அரச படையினருடன் போரிட்டவர்கள் என்று கருதிக்கொள்ளலாம்.
ஆனால் அவர்கள் அவ்வாறு போராடுவதற்கு காரணம் என்ன? அவ்வாறு போராட வேண்டிய தேவையை ஏற்படுத்தியவர்கள் யார்?; வாழ வேண்டிய இளைஞர்கள், ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய சூழமைவுக்கு ஆளாக்கியவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்ற கேள்விகள் எழும்போது அதற்கான சரியான பதில், இந்த நாட்டின் பேரினவாதிகள் என்பதாகவே இருக்கும்.
ஆக, தமிழ் இளைஞர்களின் மனங்களை மாற்றி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்து வாழ வேண்டிய இளம் பிள்ளைகளை சாகடித்தவர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பும் மரியாதையும் வழங்கப்படும்போது மாவீரர்களை நினைவுகூரு வதற்கு தடைவிதிப்பது எந்தவகையிலும் நியாயமாகாது.
தமிழ் மக்களை சாகடிப்பதற்கு காரணமானவர்களை மின்சார நாற்காலியிலிருந்து நாம் காப்பாற்றினோம் என்று பகிரங்கமாக கூறுவோர்,
தமிழ் மக்கள் தங்களின் விடுதலைக்காக போரிட்ட தங்கள் மாவீரர்களை நினைவுகூருவதை தடைசெய்யக் கூடாது என நினைக்காதது ஏன்?
ஆக, நாங்கள் சிங்களவர்கள்; எங்களுக்கே இந்த நாடு என்ற மிடுக்குத்தான் தமிழர் தாயகத்தில் படையினருக்கு நினைவுத்தூபி அமைத்ததும்; தமிழர்கள் தங்களின் உறவுகளான மாவீரர்களுக்கு நினைவு அமைவிடம் அமைக்கவும் நினைவுகூரவும் தடுத்ததுமாகும்.
எது எப்படியாயினும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுப்பதற்காகவே புதிய அரசியலமைப்பை கொண்டுவர முற்படுவராயின், மாவீரர்களை நினைவுகூரவும் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கவும் அனுமதிக்க வேண்டும்.
இதைச் செய்யாமல் தமிழர் பகுதியில் படையினருக்கு நினைவிடம் கட்டி வைத்திருந்தால், இந்த நாட்டில் இன ஒற்றுமை எங்ஙனம் ஏற்பட முடியும் என்பதே நம் தாழ்மையான கேள்வி.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila