வடபுலத்தின் சமகால சூழ்நிலைகள் அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை. கொலை, கொள்ளை, களவு, வழிப்பறிப்பு, சண்டித்தனங்கள், போதைவஸ்துக் கடத்தல்கள் என எல்லாமும் சேர்ந்து தாண்டவம் ஆடுகின்றன.
இதனால் மக்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை என்பதே உண்மை.
ஒருபுறத்தில் சமூகச் சீரழிவுகளால் மக்கள் பயத்தோடு வாழ்கின்றனர்.
மறுபுறத்தில் காணாமல் போனவர்கள், போரில் அகப்பட்டு உயிரிழந்தவர்களை நினைந்து அழுகின்ற துன்பத்தால் வாழ்க்கை வெறுத்த வாழ்வு,
இவையாவற்றுக்கும் மேலாக போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள்; சமூகத்தின் உதவி கிடைக்காத முன்னாள் போராளிகள் என் போரின் துன்பம் என எல்லாமும் மன வெறுப்பைத் தருவனவாக உள்ளன.
இதில் சமூகச் சீரழிவுகள் என்பன முளைவிட்டு வேர் பரப்பி வெளிக்கிட்டால் வடபுலத்தின் நிலைமை மிக மோசமாகும் என்பதே உண்மை.
ஆகையால் எங்கள் வடபுலத்தில் மேல் எழுகின்ற சமூகச் சீரழிவுகளைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார், நீதிபரிபாலனம், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பும் ஒன்றுபட்டு எங்கள் இனத்தைக் காப்பாற்ற திடசங்கற்பம் பூணவேண்டும்.
எங்கள் இளம் பிள்ளைகள் நெறி கெட்டு, தறி கெட்டு வாளுடன் வீதியில் நிற்கும் அளவில் இவர்களுக்கு உசார் கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.
ஏழெட்டு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாள், கத்தி சகிதம் அட்டகாசம் செய்கின்றனர் என்றால் , அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது யார்? என்ற ஆய்வுகள் இங்கு அவசியமாகின்றன.
எனவே எங்கள் பிள்ளைகள் எங்களின் கட்டுப்பாட்டில்; பெற்றோர்களின் பாதுகாப்பில் இருப்பதை உறுதிப்படுத்துவதில் மக்கள் சமூகம் கடுமையாக உழைக்க முடியும்.
எங்களுக்கு என்ன என்று நாங்கள் நினைத்தால் எங்கள் பிள்ளைகளை அவர்கள் தங்களுக்கு ஏற்றால் போல் ஆக்கிக் கொள்வர். அதன் பின் எங்கள் பிள்ளைகளை திருத்தி எடுத்து ஆளாக்குவது என்பது ஆகாத காரியமாகி விடும்.
முன்பெல்லாம் வடபுலத்தில் குடிமனைப் பகுதிகளில் படைமுகாம்கள் இருந்த போது, நாங்கள் வீடுகளில் வளர்த்த நாய்களுக்கு அவர்கள் சாப்பாடு வைத்தார்கள். படையினரின் சாப்பாட்டை சாப்பிட்ட நாய்கள் எங்களைக் கண்டு குரைத்த போது நாங்கள் அதிர்ந்தது உண்டு.
அட! எங்கள் வீட்டு நாய்கள் படைமுகாமில் நின்று அவர்களை பாதுகாக்கும் பொருட்டு எங்களைக் கண்டு குரைக்கிறதே என்று கவலைப்பட்ட அனுபவங்களும் எங்களிடம் நிறையவே இருக்கிறது.
நாங்கள் வளர்த்த நாய்கள் சந்திகளில் உள்ள படைமுகாமில் சாப்பிடுகிறது என்றவுடன் நாயைத் தண்டித்து அதனைக் கட்டி வளர்த்திருந்தால், அந்த நாய்கள் ஆமியைக் கண்டு குரைத்திருக்கும்.
ஆரம்பத்தில் எங்கள் நாய்கள் எங்களைப் பாதுகாக்கக் குரைத்ததுதான் உண்மை. ஆனால் பின்னர் எங்கள் வளர்ப்பு நாய்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டு வீதியில் போகின்ற எங்களைத் துரத்திக் கடித்து குரைத்து அட்டகாசம் செய்தன என்பதே உண்மையாக இருந்தது.
ஆகையால் அந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு உரிய பரிகாரம் தேடுவது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும்.