அன்புக்கு இனிய தமிழ் அரசியல்வாதிகளுக்கு அன்பு வணக்கம். எங்கள் அரசியல்வாதிகளுக்கு இவ்விடத்தில் பல தடவைகள் கடிதங்கள் எழுதியுள்ளோம். அவை எதுவும் பயன் பெற்றதாக தெரியவில்லை.இப்போதும் நாம் உங்களிடம் கேட்பது, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓர் அணியில் ஒற்றுமைப்பட்டு எங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம் என்பதுதான்.
தேர்தலில் வென்று பதவியைப் பிடித்துக் கொண்ட நீங்கள், உங்களுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பதவி கிடைத்துவிட்டது, எனி நாம் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஆணவமாகி விடும். ஆணவம் அழிவைத் தரும்.
அன்புக்கு இனிய தமிழ் அரசியல்வாதிகளே! வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களே! வடக்கு மாகாண அரசு நமக்குக் கிடைத்தது இதுவே முதற்தடவை.
முன்பு ஒருமுறை வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை நம் கைகளுக்குக் கிடைத்தனவாயினும் அன்றைய போர்க்காலச் சூழல் அந்த அரசை தமிழ் பேசும் மக்கள் அனுபவிக்க முடியாமல் போயிற்று.
பின்னாளில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் செய்து இணைந்த இரண்டு மாகாணங்களையும் பிரிப்பதற்கு ஆளும் தரப்பு எடுத்த முயற்சி வெற்றி பெற்றது.
இந்த விடயங்களில் எல்லாம் தமிழ் மக்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருந்தனர். இப்பொழுது வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாண அரசுகளாயின.
வடக்கும் கிழக்கும் தனித்தனியானபோது வடக்கு மாகாணத்தின் முதலாவது அரசு இது என்ற பதிவை தனதாக்கிக் கொண்டது.
ஆக, வடக்கு மாகாண அரசின் முதலாவது முதலமைச்சர்; முதலாவது அவைத்தலைவர்; முதலாவது அமைச்சர்கள்; முதலாவது உறுப்பினர்கள் என்ற பெருமையும் உங்களுக்குரியது. இருந்தும் இவற்றை எல்லாம் நீங்கள் மறந்து செயற்படுவது கண்டு வேதனை அடைவதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.
அன்புக்குரிய வடக்கு மாகாண சபையின் ஒட்டு மொத்த உறுப்பினர்களே! தயவு செய்து தமிழ் மக் களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் மக்கள் பேரவை தயாரித்த அரசியல் தீர்வுத்திட்ட வரைபு நேற்றையதினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட போது மண்டபம் நிறைந்து, மண்டபத்தின் முன்றறில் கால்கடுக்க நின்று அந்த நிகழ்வில் மக்கள் பங்குபற்றியதை பார்த்தபோது, இதயம் நெகிழ்ந்து கொண்டது; உள்ளம் பூரித்துக் கொண்டது.
எங்கள் மக்களின் உணர்வு வெளிப்பாட்டை மனித மொழியில் கூறிவிட முடியவில்லை. எப்பேற்பட்டாவது அந்நிகழ்வை மொழிப்படுத்தி விடலாம் என்றால், அதற்கு கண்களில் பெருகும் கண்ணீர் அனுமதி தர மறுக்கிறது. அந்தளவிற்கு இதயத்தை நெகிழ வைத்த உணர்வுபூர்வமான நிகழ்வு அது.
இதைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால் ஒற்றுமை தன்பாட்டில் ஏற்படும்.