சமஷ்டிக்கு இணங்குமா சிங்களத் தலைமைகள்?

ஒற்றையாட்சிக்கும் சமஷ்டிக்கும் இடையிலான வாதங்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் தீவிரமடைந்துள்ள சூழலில் இருதரப்பும் தமது நிலைப்பாடுகளில் பிடிச்சிராவித்தனங்களை வெளிப்படுத்தி வருகின்றன.
ஒற்றையாட்சி அரசியலமைப்பே தொடரும் என்று அரசாங்கத் தரப்பில் உள்ளவர்கள் வலுவாக நியாயப்படுத்திக் கொண்டிருக்க, ஒற்றையாட்சி நிலை தொடர்ந்தால் நாடு பிளவுபடுகின்ற அபாயத்தை தடுக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஆனாலும் சமஷ்டி தான் பிரிவினையை, பிளவை ஏற்படுத்தும் என்று தெற்கின் இடதுசாரிக் கொள்கையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்களும் கூட நம்புவது தான் துரதிஷ்டமான நிலையாகும்.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை மட்டுமே வைத்து அவர்கள் சமஷ்டியின் பாதகத் தன்மையை நோக்குகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிரிந்து சென்ற நாடுகள் இப்போதும் கூட ஒரு கூட்டமைப்பாக இயங்குவதை அவர்கள் கருத்தில் கொள்ளத் தயாராக இல்லை.
அதேவேளை சோவியத் ஒன்றியத்தை விடவும் கூடுதல் அதிகாரப் பகிர்வை செய்த சுவிற்சர்லாந்து, பெலிஜியம், ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற பல சமஷ்டி அரசுகள் இன்னமும் ஒருமைப்பாட்டில் உறுதியாக இருப்பதும் இவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை.
தம்மை முற்போக்குத் தலைவர்களாக கொள்ளும் வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர போன்ற இடதுசாரித் தலைவர்களுக்கும் கூட சமஷ்டி என்பது வேப்பங்காயாகத் தான் கசக்கிறது.
அவர்களும் கூட பொது நிலைப்பாட்டில் இருந்து இதனை நோக்குவதற்குப் பதிலாக சிங்கள இனவாத நிலையில் இருந்து தான் இதனை நோக்குகின்றனர்.
சிங்கள இடதுசாரி தலைவர்களே இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருக்கும் போது சிங்களக் கடும்போக்காளர்களின் நிலையையோ, முதலாளித்துவ அரசியல் சக்திகளின் நிலையையோ சிந்தித்துப் பார்ப்பதே கடினம்.
இப்படிப்பட்டதொரு சிக்கலான நிலையில் தமிழர் தரப்பில் இருந்து அதி உச்ச அதிகாரப் பகிர்வுக்கான யோசனைகளைத் தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. ஒரு பக்கத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையினால் அவசர அவசரமாக உருவாக்கிய நிபுணர் குழு ஓரிரு வாரங்களிலேயே தமது அதிகாரப் பகிர்வு யோசனையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்திருக்கிறது.
இந்த நிபுணர் குழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் முதலமைச்சர் சார்பான இருவர் உள்ளிட்ட மூவரின் இடங்கள் நிரப்பப்படாமலேயே அந்தக் குழுவின் யோசனை தயாரிக்கப்பட்டு விட்டது.
இன்று இந்த அதிகாரப் பகிர்வு யோசனை யாழ். பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு தமிழ் மக்களின் கருத்துக்களை கோரும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கத்தில் தமதிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சித்தார்த்தன் போன்றவர்கள் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி பற்றிய அங்குள்ள அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்வதற்காக லண்டனுக்குச் சென்றிருக்கின்றனர்.
ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்றுள்ள ஸ்கொட்லாந்தில் 2014ம் ஆண்டு ஒக்டோபர் 14ம் திகதி ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
85 சதவீதமான மக்கள் வாக்களித்த அந்தச் சர்வசன வாக்கெடுப்பில் 55 சதவீதமானோர் ஸ்கொட்லாந்து தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கு எதிராகவும், 45 சதவீதமானோர் பிரிவினைக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
கனடாவில் கியூபெக் மாகாணத்தில் பிரிந்து செல்வது தொடர்பாக 1980ம் ஆண்டிலும் மற்றும் 1995ம் ஆண்டிலுமாக இரண்டு முறை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் பிரிவினைக்கான ஆணை வழங்கப்படவில்லை.
இந்த இரண்டு முன்னுதாரணங்களும் சமஷ்டியில் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்படும் போது மக்களின் ஒற்றுமை வலுவானதாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவனவாக இருக்கின்றன.
ஸ்கொட்லாந்து மக்களோ கியூபெக் மக்களோ பிரிந்து செல்வதற்கு விருப்பம் இருந்தாலும் கருத்துக்கணிப்பில் அதற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இது சமஷ்டி அதிகாரப் பகிர்வில் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.
இதனை முன்னுதாரணமாகக் கொளவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைவதாகத் தெரிகிறது. அதனால் தான் ஸ்கொட்லாந்திற்குச் சென்று ஆராய முற்பட்டிருக்கிறது.
பெல்ஜியம் நாட்டின் சமஷ்டி முறை பொதுவாகவே கூடுதல் அதிகாரப் பகிர்வு கொண்டது என்ற கருத்து உள்ளது.
ஆவண ரீதியான பரிசீலனைகளுக்கு அப்பால் நடைமுறை ரீதியாக ஒவ்வொரு சமஷ்டி முறையினதும் பலம் - பலவீனங்கள்- குறை நிறைகள், சவால்களை ஆராயாமல் ஒரு முடிவுக்கு வரமுடியாது ஒரு சமஷ்டியின் வெற்றிக்கும் தோல்விக்கும் அங்குள்ள அரசியல் பொருளாதார சூழல்களும் காத்திரமான பங்கை வகிக்கும்.
அத்தகைய விடயங்களை இலங்கையுடன் ஒப்பீடு செய்தே பொருத்தமான அதிகாரப் பகிர்வை தெரிவு செய்ய வேண்டும். அத்தகைய முயற்சிகளில் தான் கூட்டமைப்பு இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
எத்தகைய அதிகாரப் பகிர்வு யோசனையை முன்வைத்தாலும் அதனை சிங்கள அரசியல் தலைமைகள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கடுத்து சிங்கள மக்களின் ஆதரவையும் பெற வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரிக்கின்ற அதிகாரப் பகிர்வு யோசனையோ, தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கின்ற தீர்வுத்திட்டமோ எதுவாயினும் அதனை அரசாங்கமும், சிங்கள மக்களும், அவர்களின் தலைமைகளும் ஏற்றுக்கொண்டால் தான் நடைமுறைச் சாத்தியமானதாக மாறும்.
ஒற்றையாட்சிப் பிடிவாதத்திற்குள் சிக்கியிருக்கின்ற சிங்கள அரசியல் தலைமைகளை அதற்குள்ளிருந்து வெளியில் கொண்டு வராமல் தமிழர் தரப்பில் இருந்து தயாரிக்கக்கூடிய கூடுதல் அதிகாரப் பகிர்வுக்கான திட்டங்களும் யோசனைகளும் எத்தகைபய பயனை அளிக்கும்? என்ற கேள்வி இருக்கிறது.
ஒற்றையாட்சிக்கு அப்பால் செல்ல மாட்டோம் என்பதில் அரசாங்கத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் தெளிவான நிலையில் இருக்கின்றன.
ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற சிக்கலான சொல்லாடல்களுக்குள் சிக்கிக் கொளன்ளாமல் அதிகாரங்களைப் பகிர்வதிலேயே கவனம் செலுத்துவோம் என்று சாதுரியமாகப் பேசும் அமைச்சர்கள், அரசியல்வாதிகளும் இருக்கின்றனர்.
அதேவேரைள ஒற்றையாட்சிக்கு கூடுதலாக அதிகாரங்களைப் பகிர முடியும். சமஷ்டிக்குள் செல்ல முடியாது என்பதே பெரும்பாலான அமைச்சர்களின் கருத்தாகவும், நிலைப்பாடாகவும் இருக்கிறது. இப்படிப்பட்டதொரு சிக்கலான நிலைக்குள் இருந்து தமிழ் மக்களுக்கான அதிகபட்ச அதிகாரப் பகிர்வை, சமஷ்டி முறையிலான தீர்வாக முன்வைப்பது என்பது பெரிய விடயமாக கருதப்பட முடியாது.
எத்தனை தீர்வுத் திட்டங்களையும் யாரும் முன்வைக்க முடியும். ஆனால் அவற்றை நடைமுறைச் சாத்தியமானதாக மாற்றும் திறன் இரு தரப்புக்கும் இருக்கிறதா? என்பதே முக்கியமானது.
இப்போதைய நிலையில் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்படுகின்ற அளவுக்கு அத்தகையதொரு இணக்கப்பாட்டை  ஏற்படுத்தும் அரசியல் துணிவு அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.
சில சிக்கலற்ற விடயங்களைக் கூட நடைமுறைச் சாத்தியமானதாக்குவதற்கு தயாராக இல்லாத தற்போதைய அரசாங்கம், சமஷ்டி போன்ற சிக்கலான தீர்வுத் திட்டங்களை பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளுமா? என்பது சந்தேகத்திற்குரியதே.
எவ்வாறாயினும் தமிழர் தரப்பு தமது பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு தேவை என்ற விடயத்தில் சரியானதொரு நிலைப்பாட்டிற்குள் வருவதற்கு இப்போதைய நகர்வுகள் உதவக்கூடும்.
அதற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வு விடயத்தில் இப்போது தயாரிக்கப்படுகின்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வாய்ப்புகளின் மீதான சாத்தியப்பாடுகள் என்பன மிகவும் அதரிதான ஒன்றாகவே தோன்றுகின்றன.
கபில்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila