வவனியா நீதிமன்றத்தால் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு பாரப்படுத்தபட்ட தனது மகனை காணவில்லை என தந்தை சாட்சியமளித்துள்ளார்.
யாழில் நான்காவது நாளாக நடைபெற்றுவரும் காணாமல் போனரை கண்டறியும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்றைய தினம் (திங்கட்கிழமை) பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அச் சாட்சியமர்வுகளின் போது சாட்சியம் அளிகையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இரணைப்பாலையில் இடம்பெயர்ந்து இருந்த வேளை 2009ம் ஆண்டு 2ம் மாதம் 27ம் திகதிஎனது மகனான அன்ரன் அலெக்ஸ்சாண்டர் ஜான்சன் என்பவரை விடுதலைப்புலிகள் பிடித்து சென்றனர்.
பின்னர் மகனை பற்றிய தகவல் இல்லை. நாம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து வலயம் நான்கு முகாமில் இருந்த வேளை எமது மகன் வவுனியா வீரபுர முகாமில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போது மகனை காணவில்லை.
அதன் பின்னர் 2011ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பில் இருந்து எனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தது உங்கள் மகன் ஜான்சன் வவுனியா வைத்திய சாலைக்கு அருகில் அழுது கொண்டிருந்த வேளை எம்மால் அழைத்து வரப்பட்டு மட்டக்களப்பில் உள்ள இக்பால் ஹோட்டலில் வேலைக்கு சேர்த்துள்ளோம். உங்கள் மகனை வந்து அழைத்து செல்லுங்கள் என கூறப்பட்டது.
அந்த தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டதன் அடிப்படையில் மட்டக்களப்புக்கு சென்று குறித்த இக்பால் ஹோட்டலுக்கு சென்றால் அங்கு அப்படி யாரும் இல்லை என கூறபட்டது.
அதன் பின்னர் 2012ம் ஆண்டு கடையில் சீனி வாங்கிய போது சீனி சுற்றி தந்த பத்திரிகை ஒன்றில் 'புலிகளில் சிறுவர் போராளிகள் அம்பேபுஸ்ஸ முகாமில் இருந்து விடுதலை " என்ற செய்தியுடன் வந்த படத்தில் எனது மகன் இருந்தார். அந்த பத்திரிகை செய்தி 2009ம் ஆண்டு 8ம் மாத காலப்பகுதியில் வெளியான செய்தியாகும்.
செய்தியின் அடிப்படையில் அம்பேபுஸ்ஸ முகாமை தேடி சென்றால் அந்த முகாம் 2009ம் ஆண்டு இறுதியுடன் மூடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அருகில் இருந்த இராணுவ முகாமுக்கு சென்று விசாரித்த போது அந்த முகாம் மூடபப்ட்டு விட்டதாகவும் , இருந்தாலும் அதற்கு பொறுப்பாக இருந்த இராணுவ பொறுப்பதிகாரியை தனக்கு தெரியும் என கூறி அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மகனின் பெயர் மற்றும் அங்க அடையாளங்களை சொன்ன போது அந்த பொறுப்பதிகாரி அவ்வாறு ஒருவர் அம்பேபுஸ்ஸ முகாமில் இருந்ததாகவும் , தலையில் காயம் ஏற்பட்டதால் பழைய நினைவுகள் எதுவும் இன்றி இருந்ததாகவும் அதனால் அவரை தாம் வவுனியா நீதிமன்றில் பாரப்படுத்தியதாகவும் கூறினார்.
அதனை அடுத்து அது தொடர்பில் நீதிமன்றுக்கு தெரிய படுத்தினேன். நீதிபதி உடனே சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தருக்கு கடிதம் மூலம் எனது மகனை பற்றிய தகவல்களை வழங்குமாறு பணித்தார்.
நீதவானின் பணிப்பினை அடுத்து சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தரினால் எனது மகன் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வழங்கப்பட்டது.
அதனை அடுத்து இரத்மலானை இந்து கல்லூரி அதிபரிடம் சென்று விசாரித்த போது அவ்வாறு யாரும் அங்கு இல்லை என கூறினார்.
அதனை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து விபரங்களை கூறினேன். அதற்கு அவர் நீதிமன்றால் பரப்படுத்தப்பட்ட பிள்ளை காணாமல் போனது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என கூறினார்.
இதையடுத்து சில தினங்களின் பின்னர் எனது தொலைபேசிக்கு அழைப்பை எடுத்தவர்கள் தம்மை புலனாய்வாளர்கள் என கூறிக்கொண்டு உன் மகனை தேடி அலையுறியா ? இனி உன் மகனை தேடி அலையாதே என கூறி மிரட்டினார்கள்.
அதன் பின்னர் மகனை தேடுவதை இடைநிறுத்தி விட்டேன் என சாட்சியத்தில் குறிப்பிட்டார்.