67 அடி உயர புத்தர் சிலை அமைப்பது வடபகுதியின் உடனடித் தேவையா?

நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலை அமைக்கும் முயற்சி நடந்து வருவதை வடக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்புகள் உறுதி செய்துள்ளன.
புத்தர் சிலை அமைப்பது என்றவுடன் ஆளுந்தரப்பு உடனடியாகத் தலையிட்டு கருத்துக் கூறுவது இலங் கையில் வழமை.
அந்த வகையில் வடக்கு மாகாணத்தின் ஆளுநரும் 67 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று நயினாதீவில் அமைப்பது பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.
எமது வடபகுதி முழுவதிலும் புத்தர் சிலைகளை அமைப்பதில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் யாவரும் அறிந்ததே.
வட பகுதியில் எங்கு? அரசமரம் இருந்தாலும் அதைச் சுற்றி சுவரிட்டு புத்தர் சிலையை நிர்மாணிப்பது என்ற பணி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வின் ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடந்தேறியது.
வடபகுதியில் இராணுவ முகாம்கள் எங்கிருந்தாலும் அங்கு புத்தர் சிலைகளை அமைத்து விடுவது வழக்கம்.
இத்தகைய போக்கு தமிழ்த் தரப்புகளால் எதிர்க்கப்பட்ட போதிலும்; நாங்கள் ஆள்பவர்கள், இது பெளத்த சிங்கள நாடு எனவே புத்தர் சிலையை நாம் எங்கும் நிர்மாணிப்போம் என்பதாக நிலைமை இருந்தது.
இந்த நிலைமை நல்லாட்சியிலும் தொடர்கிறது. அதன் அடிப்படையில்தான் நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலை நிர்மாணிக்கப்படும் முயற்சி நடந்து வருகிறது.
தமிழ் மக்கள் வாழ்கின்ற நயினாதீவில் தண்ணீர்ப் பிரச்சினை, உள்ளகப் போக்குவரத்துக் கஷ்டங்கள் என ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்ற போதும் அங்கு புத்தர் நிலையை நிர்மாணிப்பதில் அரச தரப்பு அக்கறை கொண்டிருப்பது ஏன்? என்ற கேள்வி எழுவது நியாயமே.
யுத்தம் முடிந்து இன்னமும் மீளமுடியாமல் தமிழ் மக்கள் இன்னலுற்று இருக்கும் வேளையில், காணாமல் போனவர்களின் உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்து திரியும் போது; விடுதலையின்றி தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடும் போது நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பது தான் இன்றைய உடனடித் தேவையா? என்பதை வடக்கு மாகாண ஆளுநர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நயினாதீவு நாக விகாரையில் இருக்கக்கூடிய புத்த பிக்கு கேட்டு விட்டார் என்பதற்காக எல்லாவற்றுக்கும் அனுமதி கொடுப்பதானது இந்த நாட்டில் எந்தக் காலத்திலும் இன நல்லுறவை ஏற்படுத்த முடியாது என்பதாகி விடும்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையை அவர் பாதுகாப்பார் என்று நம்புகின்றோம்.
நயினாதீவு நாக விகாரையின் இறங்குதுறையில் 67அடி உயரமான புத்தர் சிலையை அமைத்து இன, மத நல்லுறவை பாதிக்கச் செய்து விடாதீர்கள் என்பதே நம் தாழ்மையான கோரிக்கை.
64 சக்தி பீடங்களில் ஒன்று எனப் போற்றப்படும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் சைவத் தமிழ் மக்களின் இதயம் என்று போற்றக்கூடியது.
அத்தகையதொரு சிறப்புமிகு சைவ ஆலயம் எழுந் தருளியிருக்கின்ற நயினாதீவில் மிகப் பிரமாண்டமான புத்தர் சிலையை நிறுவி, குழப்பத்தை ஏற்படுத்துகின்ற சம்பவங்களைத் தவிர்ப்பது நல்லது.
இதை நாம் கூறும்போது நாங்கள் ஒரு மதத்துக்கு எதிராகக் கருத்துரைப்பதாக எவரும் நினைத்து விடத் தேவையில்லை.
புத்த பிரானின் போதனைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.
அதேவேளை புத்தபிரானின் போதனைகளை அவரைப் பின்பற்றுபவர்கள் சரியாக உணர வேண்டும்.
அத்தகைய உணர்வு நிலைகள் இருந்தால், தமிழர் தாயகத்தில் பொருத்தமற்ற, வில்லங்கமான செயற்பாடுகளை உரியவர்கள் செய்யமாட்டார்கள் என்பதே உண்மை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila