
யாழ்ப்பாணம் – கோப்பாய், செல்வபுரம் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள 65,000 வீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ‘போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வரவேற்கின்றோம். ஆனால், இந்த பொருத்து வீடுகளை எங்களுக்கு வழங்கியதையிட்டு மனவருத்தம் கொள்கின்றோம். 2.1 மில்லியன் ரூபாய் செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படுவது அதிகூடிய செலவாகும். இவ்வாறு அமைக்கப்படும் வீடுகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக்கியுள்ளது. வீட்டின் சுவர் வலிமையற்றது. இலகுவில் உடையக்கூடியது. திருடர்கள், கொள்ளையர்கள் ஆகியோருக்கும் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோருக்கும் இந்த வீடுகள் இலகுவான வழிகளை ஏற்படுத்திவிடும். மேலும், இந்த 2.1 மில்லியன் ரூபாய் செலவில் வடக்கில் சாதாரணமாக கட்டப்படும் சீமெந்து வீடுகள் இரண்டைக் கட்டிவிட முடியும். இந்த வீடுகள் வடக்கிலுள்ள காலநிலை மற்றும் சூழலுக்கு முற்றும் பொருத்தமற்றதாகவுள்ளது. வெப்ப காலங்களில் இந்த வீடுகள் அதிகளவான வெப்பமாக காணப்படுவதுடன், மழை காலங்களில் வெள்ளம் வீடுகளுக்கும் புகுந்துகொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது. இந்த வீடுகள் தொடர்பில் நாங்கள் திருப்பதியற்று இருக்கின்றோம். ஆதலால் இந்து வீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இது தொடர்பில் பரிசீலனை செய்யவும்’ என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.