வடக்கு மாகாண உச்சியில் பெளத்த மேலாதிக்கம் எதிர்ப்பை வெளியிடுகிறது வட மாகாண சபை


வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்று குறுகிய காலத்திற்குள் வடக்கில் பெளத்த மதத்திணிப்பை ஆளுநர் றெஜினோல்ட் குரே மேற்கொள்வாராயின் வடக்கு மாகாண சபையினதும் தமிழ் மக்களினதும் கடும் எதிர்ப்பை அவர் சந்திக்க வேண்டியிருக்குமென வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.நயினாதீவில் அமைக்கப்படவுள்ள 67 அடி உயர புத்தர் சிலை தொடர்பிலேயே இவ் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக அமைப்பாளருமான கே.என். விந்தன் கனகரட்ணம் தெரிவிக்கையில்;,
யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் ஒன்றாகவுள்ள நயினாதீவில் இந்துக்களின் வரலாற்று ரீதியான நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 

சுமார் ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர் படையெடுப்பின் போது ஆலயம் எரிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது. இதன்போது ஆலயத்தின் தேரும் அனலை தீவுக்கும் நயினாதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள கடலில் தள்ளிவிடப்பட்டது.

இதன் பின்னர் ஆலயம் புனரமைக்கப் பட்டு இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நயினாதீவில் தொண்ணூறு வீதமான மக்கள் இந்துக்களாகவே உள்ளனர் ஏனையோர் கிறிஸ்தவர்களாக உள்ளனர். எனினும் நயினாதீவுக்கு புத்தபெருமான் வந்த காரணத்தால் ஒரு பௌத்த கோயிலை அமைத்திருந்தனர்.

தற்போது விகாரைக்கு அருகில் அறுபத் தியேழு அடி உயரமுள்ள புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு மாகாணத்தில் அதுவும் வடக்கின் உச்சியில் அமைந்துள்ள நயினாதீவில் அறு பத்தியேழு அடி உயரமுள்ள புத்தர் சிலை அமைப்பது என்பதனை சாதாரணமாக கருத முடியாது.

பௌத்த மேலாதிக்கத்தை நிறுவி அதனை உயர்த்தி காட்டி பௌத்தத்தினையும் பேரின வாதத்தையும் எம்மீது திணித்து மதத்தின் பேரால் எம்மை அடக்கி ஆள்வதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. குறித்த சிலை அமைக்கும் பணிகள் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற் றவுடன் பன்னிரண்டு கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

பௌத்த ஆலயங்களிற்குள் இந்து சமய கடவுள்களின் படங்களை வைத்துள்ளதாகவும், புத்தர் சிலை அமைப்பதற்கு பிரதேச மக்களின் எதிர்ப்பும் இல்லை எனவும் கூறுகின்றனர். இதனை நியாயப்படுத்தி புத்தர் சிலை அமைக்கும் முயற்சிகளை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த செயற்பாடு இன, மத நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் செயற்பாடாகும்.

புத்தர் சிலை அமைக்கும் பன்னிரண்டு கோடி ரூபாயினை வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் அழிவடைந்த பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கும், போரினால் பாதிக்கப் பட்ட மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் உதவுதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் முன்வர வேண்டும். 
மேலும் புதிதாக பதவியேற்ற கையோடு வடக்கு மாகாணத்தில் ஆளுநர் குரே மதத் திணிப்பை தொடர்ந்து செய்வாராயின்,

வடக்கு மாகாண சபையினதும், வடக்கு மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila