
நல்லாட்சி அரசாங்கமானது பெரும்பாலும் முன்னைய மஹிந்த அரசாங்கத்தின் மனோநிலையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்துடன் வட மாகாண சபை ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எள இந்தியாவும், மேற்குலகமும் அழுத்தம் கொடுத்திருப்பதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வர உதவியர்களே நாங்கள். எமக்கு இந்த அரசை குறை கூறவோ, புறக்கணிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நல்லாட்சியை ஏற்படுத்த உதவிய எமக்கு இந்த அரசு தந்துதவியுள்ள உதவிகள் மிகச் சொற்பமே எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை. காணாமற்போனோர் தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லை, காணிகளை விடுவிப்பதிலும், மீள்குடியேற்றத்திலும் தொடர்ந்தும் தாமதம் நிலவி வருகிறது. இவை அனைத்தும் இந்த புதிய அரசு முன்னைய அரசின் மனோநிலையை கொண்டுள்ளது என்பதையே எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இது தொடர்பில்இந்தியா மற்றும் மேற்குலக பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறி அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்குமாறு நாமே அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். அவர்கள் எம்மீது எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.