போரின் ஆயுதமாக வன்புணர்வு பாவிக்கப்படுகின்றது. - சி.வி.

போரின் ஆயுதமாக வன்புணர்வு பாவிக்கப்படுகின்றது. - சி.வி.

வன்புணர்வானது போரின் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

பெண்களின் குரல் எனும் அமைப்பினால் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பெற்றது. 

அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , 

மகளிர் தினத்தை நாங்கள் கொண்டாடுவதற்குப் பல நல்ல காரணங்கள் உள்ளன. இன்று பெண்கள் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் ரீதியாகப் பெரும் பங்கு ஆற்றி வருகின்றார்கள். அவர்களின் வெற்றியை வெளியிடுமுகமாகக் கொண்டாட்டம் நடத்தலாம். கூட்டங்கள் கூட்டலாம். எனினும் பெண்கள் பலரின் ஆதங்கம் பால் ரீதியான சமநிலை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே. 

உலகப் பொருளாதார பொதுமன்றமானது 2014ம் ஆண்டில் ஒரு கருத்தை வெளியிட்டது. அதாவது உலக ரீதியாகப் பால் சமநிலை பெற இன்னும் 80 வருடங்கள் ஆகும் என்றார்கள். ஆகவே பாரம்பரியமாக நாங்கள் சிந்தித்து வந்த விதத்தை அத்தனை இலேசாக மாற்றிவிட முடியாது. பாரம்பரியம், மதப் பழக்கவழக்கங்கள், ஆண்பாலரின் தப்பெண்ணம் என்று பல காரணங்கள் பால் சமநிலைக்கு இடையூறாக இருந்து வருகின்றன. 

சாதி சம்பந்தமாகச் சிலருக்கு இருக்கும் வன் எண்ணங்களுக்கு ஒப்பானதே பெண்களுக்கெதிரான தப்பெண்ணங்கள். ஆனால் நாங்கள் ஒன்றை மனதில் நன்றாகப் பதியவைக்க வேண்டும். வன் எண்ணங்கள் வன் எண்ணங்களையே அறுவடை செய்வன. மென் எண்ணங்கள் மென்மையான எதிர்வினைகளையே வரவழைப்பன. எனவே பெண்கள் மீதான வன் எண்ணங்களை இனியாவது களைவது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும். 

ஆனால் பெண்களுக்கும் சில வேளைகளில் பால் சமநிலை என்ற சொற்றொடரின் அர்த்தம் புரிவதில்லை. அதாவது ஆணும் பெண்ணும் சமம் என்பதல்ல குறித்த சொற்றொடரின் விளக்கம். ஆண்களும் பெண்களும் சம உரித்துக்களைப் பெற வேண்டும் என்பதே பால் சமநிலையாகும். ஆணும் பெண்ணும் சமம் என்று எவரும் கூற முடியாது. பெண்கள் அடுத்த வாரிசைப் பெற்றுத் தருகின்றார்கள். ஆண்களால் முடியுமா? ஆகவே சட்டப்படி சம உரித்துக்களைப் பெறுவதே பால் சமநிலை.

இலங்கையைப் பொறுத்த வரையில் நவீன முறையிலான கல்வி நடவடிக்கைகளில் ஆண்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பெண்களோ 100 ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியிலேயே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் ஆண்களுக்குச்  சமனாக அல்லது ஒரு படி மேலாக அனைத்து அரச சேவைகள் மற்றும் கல்விச் சேவைகளில் உயர்பீடங்களில் அமர்ந்திருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

பெண்கள் கல்வி கற்கத் தடை, ஏனைய ஆடவர்கள் முன் பெண்கள் அளவளாவத் தடை, பெண்கள் வேலைக்குப் போகத்தடை என்று பல தடைகள் ஒரு காலத்தில் போடப்பட்டிருந்தன. ஆனால் இன்று நிலைமைகள் எவ்வளவோ முன்னேற்றகரமாக மாறிவிட்டன. சம உரிமைகள் தரப்பட்டால் தம்மால் முடியாததொன்றில்லை என்பதைப் புரியவைத்து வருகின்றனர் பெண்கள். அவற்றை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

எனினும் போர் நடக்கும் இடங்களில், போர் நடந்து முடிந்த வலையங்களில் பெண்கள் பாடு மிக மோசமாக அமைந்திருப்பதையும் நாங்கள் மறந்து விடக் கூடாது. போர்க்காலப் பாதிப்பு பெண்களுக்கே மிகக் கொடூரமாக அமைகின்றது. அதே நேரம் சமாதான சூழலை ஏற்படுத்த முன்னிற்பவர்களும் பெண்கள்தான். இன்று போரானது, அதன் தார்ப்பரியமானது முற்றாகவே மாறிவிட்டது. கிராமங்களே போரின் உக்கிரத்தைத் தாங்க வேண்டிய இடங்களாக மாறியுள்ளன. 

அது மட்டுமல்லாமல் போரில் மடிந்து போகின்றவர்கள் போர்வீரர்களே என்பதிலும் பார்க்க சாதாரண குடிமக்களேயாவார். அவர்களுள் பெரும்பான்மையினர் பெண்கள். அது மட்டுமல்லாமல் வன்புணர்வானது போரின் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது. 

இவை நேரடியான பாதிப்புக்கள் என்றால் மறைமுகமான பாதிப்புக்கள் பல. 

உலக ரீதியான போர்ச் சூழலில் தமது நாளாந்த கடமைகளை பெண்கள் ஆற்ற முடியாது தத்தளிக்கின்றனர். பயத்தில் வீட்டினுள்ளேயே அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலை. இது குடும்ப ரீதியான பாதிப்புக்களைக் கொண்டு வருகின்றன. கல்வி பாதிக்கப்படுகின்றது. உடல் நிலை பாதிப்புக்கள் பற்றிப் பலதையும் கூறலாம். சில காலத்திற்கு முன்னர் உங்களில் பலர் இவ்வாறான பாதிப்புக்களை அனுபவித்திருப்பீர்கள். 

ஆனால் உலகெங்கிலும் போரினால் பாதிப்படைந்த பல பெண்கள் சமாதானத்தை முன்கொண்டு செல்லும் சாரதிகளாகவும் செயற்பட்டு வருகின்றார்கள். தமது கணவன்மார்களை, சகோதரர்களை, மகன்மார்களைப் போரில் பறிகொடுத்த பல பெண்கள் அந்த ஆண்கள் வகித்த இடத்தைத் தாமேற்றுப் பொறுப்புடன் வாழ்க்கையை ஓட்ட முன்வந்துள்ளார்கள். 

இடிந்து போய் மூலையில் கிடக்க அவர்கள் முனையவில்லை. முனைந்து முன்னேறவே முயற்சி செய்து வருகின்றனர். சின்னாபின்னமான சமூகச் சிறு துண்டுகளைப் பொறுக்கி எடுத்து மீண்டும் சரிசெய்து முன்னேற வழியமைத்து வருகின்றார்கள். சிலர் வெறும் குடும்பப் பொறுப்பு என்ற வட்டத்தினுள் வாடி வதங்காது விரிந்த சமூகச் சூழலில் மீண்டும் சமாதானமும் புரிந்துணர்வும் புத்துணர்வு பெற வழி அமைத்து வருகின்றார்கள்.
 
காலஞ்சென்ற மார்டின் லூதர் கிங் அவர்களின் விதவையான கொரெடா ஸ்கொட் கிங் என்ற மனித உரிமைகள் மேம்பாட்டாளர் பின்வருமாறு கூறியுள்ளார் - 

“உலக ரீதியாகப் பெண்கள் ஒற்றுமைப்பட்டால் சர்வதேச சமாதானத்தை அடைய அவர்கள் ஒரு மிகப் பலமான படையணியாக உருவாவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது” என்றார்.

இந்த உண்மையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் ஒற்றுமை, பெண்களின் ஒருங்கிணைப்பு, பெண்களின் ஒருமித்த கூட்டுச் செயல்கள் யாவும் பாதிப்புற்ற மக்களின் வாழ்க்கையை மறுமலர்ச்சி செய்யவல்லது என்பதைப் பெண்கள் மறந்து விடக்கூடாது.

பாகிஸ்தானில் கைபர் பக்குன்குவா மாகாணத்தில் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் போரின் தாக்கத்தினால் மனமுடைந்து பாதிப்படைந்து இருந்த வேளையில், பெண்களின் சுதந்திரங்கள் ஆண்களின் கைகளிலே இருந்த வேளையில், குலானை இஸ்மயில் என்ற பெண் தன்னந்தனியாளாய்ப் பல எதிர்ப்புக்களின் மத்தியில் பெண்கள் விழிப்புணர்ச்சி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களையும் இளம் சிறார்களையும் ஒன்று சேர்த்து பெண்கள் ஆற்றலை மேம்படுத்தும், பெண்கள் சமநிலையை வலியுறுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சில ஆறுதல் வார்த்தைகள் கூட நோய் போக்கும் மருந்தாவன என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகின்றார். 

ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் பெண்கள் வாழக்கைகளைச் சீரமைக்க பெண்களே முன்வந்து பல உபயோகமான காரியங்களில் இறங்கியுள்ளனர். உதாரணத்திற்கு – சிம்பாப்வேயில் பெண்களின் கல்வியின்மைநிலை, பொருளாதார ரீதியாக மற்றோரைச் சார்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்த நிலை, சமுதாய சீர்கேடுகள் போன்ற பல பாதிப்புக்களைக் கண்ணுற்ற பெண்கள் சிலர் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முயற்சித்து வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.

கிழக்கு கொங்கோ என்ற ஆபிரிக்க நாட்டில் போர்க்காலத்தில் ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் படி தினமும் 1150 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இவற்றைச் செவியுற்ற பல பெண்கள் நேரடி சமாதானம் (Pநயஉந னுசைநஉவ) என்ற அமைப்பை உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைகளை மாற்றியமைக்க அரும்பாடுபட்டு வருகின்றார்கள். 

ஆகவே பாதிப்புக்கள் பல பெண்கள் மத்தியில் இருப்பதை நாங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அவை உடல் ரீதியானதாக இருக்கலாம், உள்ள ரீதியானதாக இருக்கலாம். ஏன் மனோநிலையைப் பாதிக்குந் தன்மை சார்பானதாக இருக்கலாம்.
 
பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றக் கூடிய செயற்பாடுகளில் பெண்கள் இயக்கங்கள் இறங்க வேண்டும். எமக்கென்ன என்றோ, இது எமது வேலையில்லை என்றே வாளாதிருக்கக் கூடாது. “பெண்களின் குரல்” உரக்க ஒலிப்பது மட்டுமன்றி பாதிப்புற்ற மகளிரின் மனங்களைக் குளிர வைக்கக் கூடியதாகவும் உருமாற்றம் பெற வேண்டும். 

பாதிப்புற்ற பெண்கள் எந்த ஒரு தேவைக்கும் அரசாங்கத்தையோ, அரசசார்பற்ற நிறுவனங்களையோ சார்ந்திருக்காது தமது சொந்தக் கால்களில் நின்று முன்னேற்றம் காண முன்வரவேண்டும். அதே நேரம் பாதிப்புற்றுப் பற்றுக்கோடல் ஒன்றைப் பற்ற வேண்டிய நிலையிலும் பெண்கள் உள்ளார்கள். அவ்வாறான பலர் எம்மை நாடி வருகின்றார்கள். உங்கள் அமைப்புக்கள் எம்மூடக இவர்களை பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கலாம். 

எம்மிடையே போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி ஆராய்ந்தோமானால் கணவன்மார்களை இழந்து குடும்பப் பாரத்தைத் தாம் ஏற்ற இளம் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் எந்த வித வசதிகளும் இன்று வாடி வதங்கி நிற்கின்றார்கள். போரினால் அங்கவீனர்கள் ஆக்கப்பட்ட பெண்கள் இருக்கின்றார்கள்; புனர்வாழ்வு பெற்ற பின்னர் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெண் போராளிகள் உள்ளார்கள். ஆனால் அவர்களில் பலரைச் சமூகம் வெறுத்தொதுக்கும் ஒரு நிலையும் உருவாகியுள்ளது. 

வெறுமனே சகல உறவினர்களையும் உடமைகளையும் இழந்து தத்தளிக்கும் பெண்கள் கூட உள்ளார்கள். அவர்கள் மனமுடைந்து நிற்கின்றார்கள். மேலும் மனோ ரீதியாகப் பாதிப்புற்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். 

இவ்வாறான பெண்களின் மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும் என்று கூட்டம் கூடி சித்தித்துச் செயல்திட்டங்களை வகுப்பதே உங்கள் அனைவர் முன்னிலையிலும் இன்று இருக்கும் பாரிய சவால் என்பதை மறந்து விடாதீர்கள். அந்தச் சவாலை ஏற்றுப் பாதிப்புற்றோர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வர நாம் யாவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். பாதிப்புற்ற பெண்களின் விமோசனமானது அவர்களைச் சமூக நீரோட்டத்தில் மீண்டும் இணைத்துக் கொள்வதில்த்தான் தங்கியுள்ளது. அவர்களின் நேரத்தையும் காலத்தையும் ஏதோ ஒரு நன்மை பயக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களின் மனச்சுமையை ஓரளவாவது குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
 
வடமாகாண சபையைப் பொறுத்த வரையில் போரினால் நலிவுற்ற பெண்களின் தேவைகள் குறித்து நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், அவர்களின் நாளாந்த தேவைகள், குடியிருப்பு வசதிகள், பாதுகாப்பு போன்ற பல விடயங்களில் அனைத்து உதவிகளையும் நல்குமாறு நாம் அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்தவாறு உள்ளோம். எம்மால் முடியுமானதையுஞ் செய்து வருகின்றோம். அதற்கும் மேலாக உள்நாட்டில் இயங்கக் கூடிய பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கங்களை ஊக்குவித்து அவை மூலமாகச் சுயதொழில் அபிவிருத்திகள், மற்றும் உள்@ர் உற்பத்திகள், குடிசைக் கைத்தொழில்கள் எனப்  பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாக இவர்களின் தேவைகளை ஓரளவிற்காவது நிவர்த்தி செய்ய முனைந்து வருகின்றோம். 

நேற்றைய புதினப் பத்திரிகை ஒன்றில் ஒரு செய்தியை வாசித்தேன். அதில் 'உள்ளூர் உற்பத்திகளின் தேக்க நிலை" என்ற தலைப்பின் கீழ் ஒரு செய்தி பிரசுரமாகியிருந்தது. அதில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பனம் பொருள் உற்பத்திப் பொருட்களுடன் பாய், கடகம், சுளகு, தொப்பி, கைப்பை என பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

அத்துடன் அளவுக்கதிகமான மரக்கறி உணவு வகைகளின் உற்பத்தி காரணமாக அவற்றை விற்க முடியாது தேங்கிய நிலையில் மரக்கறிகள் காய்ந்த நிலையில் இருப்பதையுங் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இந் நிலை மாற்றப்படல் வேண்டும். இவற்றைச் சந்தைப்படுத்த நாம் நடவடிக்கைகள் எடுக்கும் அதே வேளையில் உள்ளூர் உற்பத்திகளில் சந்தைக் கிராய்க்கி உள்ள பொருட்களை உற்பத்தி செய்யவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும். 

உதாரணமாக பனை ஓலையினால் தயாரிக்கப்பட்ட கழுத்து மாலைகள் மிக அழகுறு வண்ணங்களுடன் தயாரிக்கப்பட்டு அதிக விலையின்றி விற்பனை செய்யப்படுகின்றன.  இவற்றிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. 

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் இந்த மாலைகளை மட்டும் விரும்பித் தம்முடன் எடுத்துச் சென்றார். இந்தியாவில் இருந்து வருகை தந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் இந்த மாலையின் அழகு பற்றி விதந்துரைத்ததுடன் அவரிற்கு இட்ட மாலைகளையும் தம்முடன் எடுத்துச் சென்றார்.
எனவே எமது உற்பத்திகள் சந்தை வாய்ப்புக்களை நோக்கியதாகவும் அதே நேரம் வருவாயை தேடித்தருவதாகவும் அமைவதன் மூலம் இந்தப் பெண் அமைப்புக்களின் வருவாயை நாம் அதிகரிக்க முடியும். இதற்கு ஒருமித்த நடவடிக்கைகளை நாம் யாவரும் எடுக்க வேண்டும். 

மாங்குளத்தில் அமைந்துள்ள பெண்கள் அமைப்பொன்றின் முயற்சியினால் அங்கே கழிப்பறைகளுடன் கூடிய மிக அழகிய இளைப்பாறுகை மண்டபங்களும் அத்துடன் சிற்றுண்டிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களால் முடியுமாயின் ஏன் அதே போன்ற முயற்சிகளை இன்னும் பல பெண் அமைப்புக்கள் தாம் மேற்கொள்ள முடியாது என்ற ஒரு கேள்வி எம்முன் எழுகின்றது. முயற்சித்தால் ஆகாததொன்றில்லை என்பதற்குச் சிறந்த உதாரணமாக மாங்குளத்தில் இயங்குகின்ற பெண்கள் அமைப்புக்களும் சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இயங்கிவரும் பெண்கள் அமைப்புக்களும் முன்னுதாரணங்களாக விளங்குகின்றன.

 வசதி படைத்த பெண்கள் கூட்டாக இணைந்து கொண்டு நலிவடைந்த பெண்களைத் தூக்கி நிறுத்த முன்வர வேண்டும். வசதி குறைந்த பெண்கள் கூட்டுறவு அடிப்படையில் உறுப்பினர்களுக்கு உதவிகளைப் புரிந்து தாமும் முன்னேற வழி அமைக்க வேண்டும். 

அதே போன்று போரினால் பாதிக்கப்பட்ட உடல் உள ரீதியாகப் பாதிப்படைந்த பெண்களை சமூகத்தில் இணைத்துக் கொண்டு அவர்களையும் முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டியது எம் அனைவரதுந் தலையாய கடமையாகும். இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் இவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதொன்றல்ல என்ற ஒரு விடயத்தை நாம் அனைவரும் மனத்தில் இருத்தி இவர்களுக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து இவர்களை பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். 

'பெண்கள் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்” என்று மட்டும் கோ~ம் எழுப்புவதில் நன்மை கிடையாது. உருப்படியான உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila