
முன்னாள் பெண் போராளிகள் தொடர்பாக நாம் விஷேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இன விடுதலைக்காக தமது வாழ் நாளையே அர்ப்பணஞ் செய்த போராளிகளின் எதிர்கால சுபீட்சத்திற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மகளிர் விவகாரப் பிரிவினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ‘நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள்’ என்ற தேசிய மட்ட கருப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்ற இந் நிகழ்வானது வடமாகாணத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள பெண்களின் தேவைகளையும் அத்தேவைகளை நிறைவேற்றக் கூடிய செயற்பாடுகளையும் முதலில் இனங் கண்டு அவற்றை ஆவணப்படுத்தி அதன் பின்னர் நடைமுறைப்படுத்த என்ன என்ன செய்ய வேண்டும் போன்ற கலந்தாலோசனைகளை நடாத்தவும் வாய்ப்பளிக்கும் நிகழ்வாக அமைக்கப்பட்டிருக்கின்றது. எமது புள்ளி விபரக் கணக்கின் படி வடக்குக் கிழக்கில் 89 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள், இக்கொடிய யுத்தத்தினால் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்குறிப்பிட்ட 89 ஆயிரம் குடும்பங்களினுடைய தலைமைப் பதவியையுந் தாமே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு இக்குடும்பங்களின் தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக இவர்கள் பாரிய பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர். போருக்குப் பிந்திய தற்காலச் சூழ்நிலையில், பெண்களின் நிலை பற்றி ஒவ்வொரு அமைச்சும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, அவர்களுடைய தேவைகள் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் சுய தொழில் வாய்ப்பு போன்ற பல விடயங்கள் பற்றியும் கூடுதலான அக்கறை காட்டி வருகின்றன. பல சர்வதேச நிறுவனங்களின் உதவியுடனும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உதவியுடனும் வடமாகாணத்தின் போரின் பின்னதான தேவைகளைப் பற்றிய ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொண்டு அரசாங்கம் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதம மந்திரியிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவ்வாறான முழுமையான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்;டால் திட்டங்கள் ஒவ்வொன்றும் எங்கெங்கே, எவ்வாறு உள்ளடக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கச் சுலபமாக இருக்கும். எமக்கான வருங்கால மாகாண ரீதியான தூர காலத்திட்டங்களை வகுக்கவும் அப்பேர்ப்பட்ட தேவைகள் பற்றிய ஆய்வறிக்கை உதவி புரியும். அடுத்ததாக வன்முறைக்குட்படுத்தப்பட்ட அல்லது வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற குடும்பங்கள் மீது நாம் மிகக்கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். பெண்களின் பாதிப்பு இவற்றில் மிக மோசமானதாக அமைவதை நாம் அவதானிக்கலாம். இராணுவத்தினரின் வன்புணர்வுக்கு ஆளாகிய பெண்கள் வசிக்கும் இடங்களுக்கருகாமையில் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முகாம்கள் இன்னமும் இருந்து வருவதை ஒரு வலைப்பின்னல்ச் செய்தி நேற்று குறித்துக் காட்டியுள்ளது. இராணுவப் பிரசன்னம் மிகக் கூடுதலாக காணப்படுகின்ற பகுதிகளில் வசிக்கக் கூடிய இளம் பெண்கள், விதவைத் தாய்மார், கணவன்மார்களை இழந்த குடும்பப் பெண்கள் போன்றோர் மிகவும் பாதிப்புள்ளாகியுள்ளனர். இவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்ற வன்முறைகளில் இருந்து இவர்களை மீட்டெடுப்பதற்கு நாம் தொடர்ந்தும் பாடுபட வேண்டும். சட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் அவை இல்லை என்பதே உண்மை. பல சட்ட, ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும். எனவே, எமது 2016க்கான வேலைத் திட்டமாக வன்முறைகளில் இருந்து மகளிர் பாதுகாக்கப்பட வேண்டியதை ஒரு கடப்பாடாக நாம் ஏற்றுக் கொள்வோம். வலுவான பெண்களே வளமான எதிர்காலத்திற்கு வித்திடக் கூடியவர்கள்.- என்றார். இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம், வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா, இந்தியத் துணைத்தூதுவர் அ.நடராஜன் உள்ளிட்ட பல பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
