முல்லைதீவு மாவட்டத்தின் நாயாறு பகுதியில் அத்துமீறி தொழில் புரியும் சிங்களவர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ள அரச அமைச்சரை நேரினில் வருகை தரவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் தென்னிலங்கையினை சேர்ந்த சுமார் 23 சிங்கள மீனவர்களது படகுகளிற்கான நாயாற்றினில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை உடனடியாக தடை செய்யுமாறு கடற்றொழில் அமைச்சு அறிவித்திருந்தது.
இந்த ஆண்டில் நாயாறு பகுதியில் தொழில் புரிய தென்னிலங்கை மீனவர்கள் 23 பேருக்கு கொழும்பிலிருந்து கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிகள் பின்னராக மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீரவால் தடை செய்யப்பட்டிருந்தது.
ஆதிகாரிகள் மட்டத்தினில் இலஞ்சம் பெற்று அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரால் குற்றமும் சாட்டப்பட்டிருந்தது.எனினும் இத்தடை உத்தரவை உள்ளுர் அதிகாரிகள் எடுத்து சென்றிருந்த போதும் அதனை புறந்தள்ளி தென்னிலங்கை மீனவர்கள் படைதரப்பின் உதவியுடன் தொழில் ஈடுபட்டுள்ளதாக முல்லைதீவு மீனவர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாயாறு பகுதியினில் அத்துமீறி குடியேறியுள்ள மீனவர்கள் பற்றி தகவல் திரட்ட சென்றிருந்த கிராம சேவை அதிகாரிகள் தாக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.