வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எங்ஙனம் அமைந்திருந்தன என்பதை அரசியல்வாதிகள் மறந்தாலும் தமிழ் மக்கள் ஒருபோதும் அதை மறக்க மாட்டார்கள்.
ஏனெனில் தமிழ் அரசு மலரவேண்டும் என்பதற்காக நடந்தும் தவழ்ந்தும் வாக்களித்தவர்கள் நம் மக்கள். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக கட்சி பெற்றுக் கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுதல் என்ற தேர்தல் முறையால் வெற்றி பெறுகின்ற கட்சியில் வேட்பாளராக நின்றவர்கள் உறுப்பினர்களாகி விடுகின்றனர்.
இந்த நிலைமை வடக்கு மாகாண சபையின் இயங்குநிலைக்கு பெரும் பாதகமாக அமைந்தது என்பது உண்மை. வடக்கு மாகாண அரசு அமைந்து இரண்டு வருடங்கள் கடந்த போதிலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்னமும் சபை ஒழுங்கு பற்றித் தெரியாதவர்களாக உள்ளனர்.
இதன் காரணமாக நேரம் விரயமாகுவதைத் தவிர, வேறு எதுவும் நடப்பதற்கு சபை உறுப்பினர்கள் விடவில்லை என்றே கூறவேண்டும்.
எதுவாயினும் இந்நிலைமை நீடிக்குமாயின் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உண்மை. எது எப்படியாக இருந்த போதிலும் வடக்கு மாகாண சபையை செம்மையாக இயக்குவதென்பது மிகவும் அவசியமானதாகும்.
பொதுவில் மக்களின் அன்றாடத் தேவைகள் என்ற விடயத்தில் அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் நேர்த்தியான இயங்கு நிலை என்பது மிகவும் அவசியமானதாகும். எனினும் அரச அமைப்புகளை நாடுகின்ற பொதுமக்கள் அங்கு தமது தேவைகளை பூர்த்தி செய்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனக்கூறப்படுகின்றது.
எனவே, இந்த நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டுமாயின், மாகாண அரசு செம்மையாக இயங்குவது அவசியமாகும்.
இது விடயத்தில் கட்சித் தலைவர்கள் தங்கள் சார்பான மாகாண சபை உறுப்பினர்களை கட்டுப்படுத்துவது கட்டாயம்.
எனினும் யார் எந்தக் கட்சி என்று தெரியாதவாறு வடக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களே தமக்குள் முட்டி மோதிக்கொள்கின்றனர். எதிர்க்கட்சி என்று தேவையில்லை என்பதைத் தான் இது சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய நிலைமை ஆளும் கட்சி அதிகஆசனங்களை பெறுகின்ற போது ஏற்படுகின்ற ஒரு நிலைமையா? என்று கூட எண்ணத் தோன்றும்.
சில வேளை ஆளும் கட்சி தமக்குள் மோதிக் கொள்வதுதானது கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட குழப்பத்தின் எதிரொலிப்பா என்று நினைப்பதிலும் தவறில்லை.
எது எப்படியாக இருந்தாலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தமக்குள் மோதிக்கொள்வது வடக்கு மாகாண சபையின் சீரான செயல் ஒழுங்குக்கு பாதகமாக அமையும் என்பதே உண்மை.
ஆகவே வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதில் அந்தந்தக் கட்சித் தலைவர்கள் தலையிட வேண்டும்.
வடக்கு மாகாண சபை கூடுகின்ற ஒவ்வொரு தடவையும் குழப்பம், கூச்சல் என்றால் தமிழர்களுக்கு நிர்வாகம் நடத்தத் தெரியாது என்று மற்றவர் கள் கூறுவதில் தவறில்லை என்பதாகவே கதை முடிந்து விடும். எனவே தமிழ் மக்களின் நிலைமை களை அறிந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய சிறுபான்மை சார்ந்த உறுப்பினர் ஒருவர் சபையை கடுமையாகக் குழப்புகிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் கூறியுள்ளார் எனும் போது, எல்லாம் நம்மவர்கள் கொடுத்த இடம் என்பது தெரிகிறதல்லவா? ஆகையால் நாங்கள் அடிபட்டு மற்றையவர்களின் நோக்கங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதே நம் தாழ்மையான கருத்து.