இலங்கையில் இருந்து இந்து சமயத்தை வேரறுக்க பெரும் பிரயத்தனங்கள் நடந்த வண்ணம் உள்ளன. எனினும் சுணை கெட்ட இந்து சமயத்தார் வன் நெஞ்சப் பேதையர் போல் துயில் கொள்கின்றனர்.
இதை நாம் சொல்லும் போது இது ஒரு மதவாத பேரிகை என்று விமர்சிக்கலாம்.
அவ்வாறு விமர்சித்தால் அது மிகப்பெரும் தவறு. ஏனெனில் இலங்கையில் இந்து சமயத்தைத் தவிர பிற மதங்களுக்கு துறவற சபைகள் உண்டு. அவர்களின் சமயங்களுக்கு ஆபத்து என்றால் அந்த துறவற சபைகள் துள்ளி எழும்.
பெளத்தத்துக்கு ஏதேனும் சலனம் என்றால் அஸ்கிரிய மல்வத்த பீடங்கள் வீதியில் இறங்கி போர்க் கொடி தூக்கும். கத்தோலிக்க மதத்துக்கு இடஞ்சல் என்றால் வத்திக்கான் விடும் அறிக்கை அதை அடக்கி விடும். இஸ்லாமிய மதத்துக்கு பிரச்சினை என்றால் வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் கூடும் முஸ்லிம் சகோதரர்கள் வீதியில் இறங்கி பேரணி நடத்துவர். மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு எரிபொருளை நிறுத்துவது பற்றி ஆராய்வதாக தகவல் அனுப்பும். அவற்றோடு அந்தப் பிரச்சினை நின்று போகும்.
ஆனால் இந்து சமயத்துக்கு பேராபத்து என்றால் சிவன் பார்த்துக் கொள்வார் என்று கூறும் இந்து சம யத்தவர், தொலைக்காட்சியில் தொடர் நாடகம் பார்த்து அதற்காகக் கண்ணீர் வடிப்பர். இத்தகைய சுணை கெட்ட இந்து சமயத்தவர்களால் இந்து சமயம் பேராபத்தை சந்தித்துள்ளது.
சிவன் பார்த்துக் கொள்வார் என்று கூறுவதே சரி என்றால்; நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம், மருத்துவ நிலையங்கள் எதுவும் தேவைப்பட்டிருக்காது.
இதைச் சொல்வதற்காக சிவன் இல்லை என்று முடிவு எடுத்து விட்டீரா என்று கேட்டு விடாதீர்கள். அந்தச் சிவன்தான் மனிதனுக்கு ஆறு அறிவுகள் படை த்து நீயே என் சாயலில் இருந்து பார்த்துச் செய் என்று அனுப்பியுள்ளான் என்று நினைப்பதே பொருத்துடையதாகும்.
சிவன் பார்த்துக் கொள்வார் என்று ஸ்ரீலஸ்ரீ ஆறு முகநாவலர் நினைத்திருந்தால் இலங்கையில் இந்து சமயம் காப்பாற்றப்பட்டிருக்குமா? தமிழ்மொழி தப்பியிருக்குமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். எனவே இந்து சமயத்தைக் காப்பாற்றும் தார்மிகப் பொறுப்பு அந்தச் சமயத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு.
அதற்காக பிற சமயத்தவர்களை மதம் மாற்றத் தேவையில்லை. அவர்களை நிந்திக்கத் தேவையில்லை. பிற சமயங்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதைகளைக் கொடுத்து அவர்களின் இறை நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், இந்து சமயத்தையும் அதேபோல் நடத்துங்கள் என்று கேட்பதில் எந்தத் தவறும் இல்லை.
இப்போது இருக்கக்கூடிய கள நிலைமைகளை ஆராய்ந்தால் நயினாதீவில் புத்தசிலை ஒன்றை அமைத்து நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மகிமையை; பெருமையை; வரலாற்றுத் தொன்மையை சிதைக்க நடவடிக்கை நடக்கிறது. இதேபோல் தமிழர்களின் வரலாற்றுப் பெருமை மிக்க ஆலயங்களை மழுங்கடிக்க சில திட்டமிட்ட பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதிலிருந்து இந்து சமயத்துக்கான பேராபத்து தெரிகிறதல்லவா?
ஓ! சனாதன தர்மம் என்று போற்றப்படும் இந்து சமயத்துக்கு பேராபத்து என்பதை கண்டும் இந்து சமய அமைப்புகள் பேசாதிருப்பது ஏன்? அட! இந்து ஆலயங்கள் தங்களுக்குள்ளேயே பிணக்குப்பட்டு நிற்கும் போது அந்த சமயத்துக்காக குரல் கொடுக்க யார் உளர்?
எது எப்படியாயினும் இந்து சமயத்தைக் காப்பாற்ற அகிம்சை வழியில் கிளர்ந்து எழ காலம் வந்து விட்டது. இதற்காக ஏனைய சமயத்தவர்களின் ஆதரவுகளை திரட்டுவதும் அவசியம்.