
சிங்கள குடியேற்றங்கள், இராணுவ குடியேற்றங்கள், புத்தர் சிலை அமைப்பது போன்றவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு வலியுறுத்த வேண்டுமென்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரோஸ் பிரேமச்சந்திரனின் நீர்வேலி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இராணுவ குடியேற்றம் மற்றும் புத்தர் சிலை அமைப்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பபொன்றினை நடாத்தினார்.
அந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
”தற்போது நடக்கும் நடவடிக்கைகளை பார்க்கும் போது கடந்த அரசாங்கமும், நல்லாட்சி என கூறும் அரசாங்கமும் என்ன வித்தியாசத்தினைக் கொண்டுள்ளார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. யுத்தத்திற்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ குடியிருப்புக்கள் நல்லாட்சி என்ற பெயரில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாவற்குழி பகுதியில் சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சிங்கள குடியேற்றங்களை காப்பாற்ற அருகில் இராணுவ முகாம்களையும், பௌத்த விகாரகளையும் அமைக்கின்றார்கள். இன நல்லிணக்கம், மீள்குடியேற்றம், தேசிய பாதுகாப்பு, புனித பிரதேசம், அகழ்வாராச்சி, என கூறி தமிழ் மக்களின் காணிகள் பலாத்காரமாக பறிமுதல் செய்வதும், இராணுவ குடியேற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மன்னாரில் நரிக்காடு என்ற இடத்தில் 50 சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நரிக்காடு என்ற இடத்திலிருந்து களிமண் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு எடுத்துவரப்பட்டது. யுத்தத்தின் முன்னர் மடு பகுதியில் 18 குடும்பங்கள் இருந்தார்கள். தற்போது, 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு வெலிஓயா மணலாறு என்ற இடத்தில் கொக்கிலாய் கொக்குத் தொடுவாய் போன்ற பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் காணிகளில் 2000 ஏக்கர் காணிகள் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு சிங்கள மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கொக்கிலாய் கொக்குத் தொடுவாயில் காணிகளை இழந்த தமிழ் மக்களுக்கு வேறு பகுதிகளில் 2 ஏக்கர் காணி தருவதாக சொல்லப்படுகின்றது.
கடந்த அரசாங்கம் போன்று இந்த அரசாங்கமும், காணி அபகரிக்கும் விடயத்தினை நிறுத்தவில்லை. கனகராயன் குளத்தில் மற்றும் மாங்குளம், வவுனியா சேமமடு, முல்லைத்தீவில், திருக்கேதீஸ்வரத்தில் மிகப்பெரிய புத்தர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தர் கோவில்கள் அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டவை முன்னர் இருந்தவைகள் அல்ல. அத்துடன், குறிகட்டுவான் நயினாதீவு கடற்பரப்பில் மிகப்பெரிய புத்தர் கோவில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.
தற்போது உள்ள அரசாங்கம் தான் விரும்பியவாறு புத்தர் கோவில்களை கட்டுவது, காணிகளை இராணுவத்திற்கு வழங்குவது, காணிகளை சிங்கள மக்களுக்கு வழங்குவது, இவை அனைத்தும் தமிழ்மக்களுக்கு அச்ச நிலையினை உருவாக்ககூடிய விடயங்கள்.’ என்றும் சுட்டிக்காட்டினார்.